ஏழை மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்டார்.
மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக இன்று காலை பதவியேற்ற ஜெயலலிதா மாலை 6.40 மணியளவில் சென்னை - புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்றார்.
அங்கு முதல்வர் பொறுப்பேற்ற அவர், முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் தாம் கையெழுத்திட்ட உத்தரவுகள் குறித்து நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா விவரித்தார். அதன் விவரம் வருமாறு:
தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.
No comments :
Post a Comment