Coachin classes for Tamilnadu Minsters|கோட்டையில் கோச்சிங் கிளாஸ்!|

இந்த முறை அம்மா நிச்சயம் நல்லாட்சி புரிவார்... அறிவித்த வாக்குறுதிகளை சீக்கிரமே நிறைவேற்றுவார்! - மக்களின் நம்பிக்கைக்கு, முதல் ஏழு நலத் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டு,  நம்பகம் வார்த்​திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதிகாரிகள் பந்தாட்டத்தில் வழக்கமான அதிரடிகளைத் தொடங்கினாலும், ஆட்சி நிர்வாகத்திலும் முக்கிய​மான மாற்றத்தைக் கொண்டுவரும் துடிப்பு ஜெய​லலிதாவிடம் இருப்பது தெரிகிறது. அதற்கான உதாரணம்தான்... மூன்று நாட்களாக கோட்டையில் அமைச்சர்களுக்கு அவர் பாடம் எடுத்த விதம்!

வழக்கமான அமைச்சரவைக் கூட்டத்தைப்போல், 'பேசினோம்... கலைந்தோம்!’ என அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தாமல், ஓர் தலைமை ஆசிரியைபோல, அக்கறையோடு அவர் அமைச்சர்களுக்கான வழி​முறைகளைச் சொன்னது இதுவரை அ.தி.மு.க-வினரே பார்த்திராத அதிசயம்!

அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதான யோசனைகளை முன்வைத்துப் பேசி​யவர்...முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ். ஆஸ்திரேலியப் பயணத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருந்த பொன்ராஜை, அமைச்சர்களுக்காக நேரம் ஒதுக்கச் சொல்லி கேட்டார் முதல்வர் ஜெய​லலிதா.

அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய ஜெயலலிதா, முதலில் பொன்ராஜை அறிமுகப்படுத்தினார். ''மக்கள் நம் மீது மிகுந்த நம்பிக்கைவைத்து இந்த அளப்​பறிய வெற்றியைக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்​களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அமைச்சரவையில் புதுமுகங்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என நம்பி உயரிய பொறுப்புகளை ஒப்படைத்​திருக்கும் நான், அதற்கான வழிகாட்டல்களைச் சொல்லிக்கொடுக்கவும் கடமைப்பட்டு இருக்கி​றேன். உடனடி வேலைகளாக நாம் பின்பற்ற வேண்டியது குறித்து, இப்போது உங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், தாராளமாக அவர்களிடம் விளக்கம் கேளுங்கள்!'' எனச் சொல்ல, மந்திரிகள் நிசப்த அமைதி​யில் கவனிக்கத் தொடங்கினர்.

மேற்கொண்டு உள்ளே நடந்தவை குறித்து அமைச்​சர்கள் சிலரிடம் பேசினோம். ''அப்துல் கலாமின் ஆலோசனைகளை அம்மா மிகவும் நம்புகிறார். தமிழகத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த கலாமின் வழிகாட்டுதல்படி செயல்பட அம்மா முடிவு எடுத்துவிட்டார். கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் எல்லோருக்கும் எளிதாகப் புரியும்விதமாகப் பேசினார். முதல் நாள் மூன்று மணி நேரம் பேசியவர், ஒன்றரை மணி நேரம் விவசாயம் குறித்தே பேசினார். '58 சதவிகித மக்கள், விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். ஆனால், தமிழகத்துக்குக் கிடைக்கும் வருமானத்தில் விவசாயத்தின் மூலம் கிடைப்பது, வெறும் 2 சதவிகிதம்தான். குஜராத் மாநில வருமானத்தில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் லாபம் 9 சதவிகிதம். உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்குவது, இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலமாக விவசாயிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உண்டாக்க முடியும். இரண்டாவது, விவசாயப் புரட்சித் திட்டத்தை அமலாக்கினால், விவசாயிகளின் வாழ்வையும், உற்பத்தி​யையும் ஒருசேர முன்னேற்ற முடியும்!’ என பொன்ராஜ் சொல்ல, அதை சாத்தியமாக்கும் விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'விவசாயிகளோடு அதிகாரிகளும் இணைந்தால், இதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரலாம்!’ எனச் சொல்ல, 'அதிகாரிகள் மட்டும் அல்ல, அமைச்சர்களும் விவசாயி​களோடு இணைந்து இந்தப் புரட்சியை நடத்த வேண்டும்!’ என்றார் முதல்வர். கிராமங்களில் குளம், குட்டைகள் மறைந்துவிட்டதால், நீர் ஆதாரங்களுக்கு வழி இல்லாத நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களை ஒருங்கிணைத்து நீர் ஆதாரங்களுக்கான இடங்களைத் தயார் செய்யும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. விவசாயப் பண்ணைகளை அமைப்பதன் மூலமாக, மிகுதியான உற்பத்தியை சாத்தியப்படுத்தவும், விளை பொருட்கள் சார்ந்த தயாரிப்புகளை மிகுதியாக்கவும், நிறைய ஐடியாக்கள் விவாதிக்கப்பட்டன. கரும்பு விவசாயிகளின் தத்தளிப்பு குறித்தும், கொள்முதல் விலையை அதிகமாக்குவது குறித்தும் அக்கறையோடு பேசினார் பொன்ராஜ். 'இந்த ஆட்சியின் முதல் திட்டம் விவசாயத்தை மேம்படுத்துவதுதான்’ என்றார் முதல்வர் தீர்க்கமாக!



'நீர் மூலமாகத்தான் நிறைய வியாதிகள் உற்பத்தி ஆகின்றன. நீரைச் சுத்திகரித்து வழங்குவதன் மூலம், சுகாதாரச் சீர்கேடுகளை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்’ என பொன்ராஜ் சொல்ல, தேர்தல் வாக்குறுதி​களில் சொல்லப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் திட்டத்தை நினைவூட்டினார் முதல்வர். ஏழை மக்களுக்கு இலவசமாகவும், நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த விலையிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது!'' என உள்ளே நடந்த கலந்தாய்வு குறித்து ஆர்வத்தோடு சொன்னவர்கள், மின் வெட்டு சம்பந்தமான ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.



''இன்றைக்கு தமிழக மக்களைப் பெரிதாகப் பாதிப்​பது பவர் கட் பிரச்னைதான். அதனால், அதிகபட்சம் மூன்றே மாதங்களில் பவர் கட் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என முதல்வர் கறாராகச் சொன்​னார். 'தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, 10,200 மெகா வாட் மின்சாரம் தேவை. ஆனால், நம் வசம் இருப்பது 7,200 மெகா வாட் மின்சாரமே. அதனால், மின் உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்களை உடனடி​யாக வகுக்க வேண்டும். நீண்ட காலத் திட்டமான சோலார் எனர்ஜி பார்க் திட்டத்தின் மூலம், 3000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஏழை மக்களின் வீடுகளுக்குத் தரப்படும்  இலவச மின்சாரம், உரிய திட்டமிடலோ, கண்காணிப்போ இல்லாமல் தரப்படுகிறது. அதில் ஏற்படும் மின் விரயத்தைத் தடுக்க, சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைப் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும். ஒருமுறை செலவிடுவதன் மூலமாக, பல வருட மின் சிக்கனத்தை உருவாக்க முடியும்!’ என்றார் பொன்ராஜ்.

'இதற்கெல்லாம் பணம் ஏது?’ எனக் கேள்வி எழ, மத்திய அரசின் மானிய உதவிகள் குறித்து எடுத்துச் சொன்னார் பொன்ராஜ். மின்சாரப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களை மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடகட வேகத்தில் எடுத்துவைக்க, முதல்வரே அசந்துபோனார். புதுமுகமும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, அனைத்து விவாதங்களிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். சிறப்புத் திட்டங்களுக்காகவே நியமிக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் வேலுமணி எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டார். பாதிக்கும் மேலான அமைச்சர்கள் பொன்ராஜிடம் தங்கள் துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டார்கள். நிறைய கேள்விகளைக் கேட்ட நத்தம் விசுவநாதன், 'நிச்சயம் மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்!’ என உறுதியாகச் சொன்னார். இதில் முதல்வருக்கு ஏக பூரிப்பு!'' என்கிறார்கள் 'பயிற்சிப் பட்டறை’ விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டவர்கள்.

மீன் பிடித்தல், சட்டம் ஒழுங்கு, நதி நீர் இணைப்பு என்றெல்லாம் மூன்று நாட்களுக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிரடியான பல முடிவுகள் எடுக்கப்பட்டன. கல்வி மேம்பாடு குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புத்தகச் சுமையைக் குறைக்கும் அட்டகாசமான முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி மூன்று மாதங்களுக்கு ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றால் போதுமாம். அந்த புத்தகத்திலேயே மூன்று மாதங்களுக்குத் தேவையான அனைத்துப் பாடங்களும் இருக்கும் வகையில் உருவாக்கப்போகிறார்களாம். கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணம் குறித்து ஆக்கப்பூர்வ முடிவுகளை எடுப்பதாகச் சொல்ல... ''நான் விசாரித்த வரையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதியே இல்லை. பெண்கள் பயிலும் பள்ளிகளில்கூட கழிப்பிட வசதி இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. அதனால், கல்வி விஷயத்தில் நாம் முதலில் சரிசெய்ய வேண்டியது கழிவறைகளைத்தான்!'' என்றாராம் முதல்வர் ஜெயலலிதா.

அடிப்படை விஷயங்களில் ஜெயலலிதா அக்கறையோடு இருப்பது நல்ல விஷயம். இது தொடர வேண்டும்!

Thanks : Vikatan

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf