நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.தில்லியில் புதன்கிழமை கறுப்புப் பணம் குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து சேர்த்த கறுப்புப் பணம் ரூ. 30 ஆயிரம் கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற கறுப்புப் பணம் சேர்ப்பவர்கள் குறித்து புலனாய்வு செய்யவும், விசாரிக்கவும் சிபிடிடி அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால் இவ்விதம் கைப்பற்றப்படும் கறுப்புப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் ரூ. 18,500 கோடி கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.ஆதாரபூர்வமான தகவல் கிடைக்காமல், எவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்வது கிடையாது.
பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிக வருமானம் ஈட்டும் அதிகாரிகள் அனைவருமே எங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் வருகின்றனர் என்றார்.கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிய கணக்கு காட்டிய 1.15 கோடி பேருக்கு அவர்கள் செலுத்திய வரி திரும்ப (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1.04 லட்சம் கோடி.
மார்ச் வரையான காலத்தில் மொத்தம் வசூலான வருமான வரித் தொகை ரூ. 74 ஆயிரம் கோடி. இத்துடன் ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணமும் சேரும் என்றார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் மே 15-ம் தேதி வரை 45 நாள்களில் ரூ. 28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகையைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
வருமான வரித்துறையில் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தகவல் பரிமாற்றத்துக்கென தனியான கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிரிவை ஏற்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் தகவல் கோரும் நாடுகள் விவரங்களை இந்தப் பிரிவுக்கு அனுப்பினால் போதுமானது. இது தவிர, கிரிமினல் புலனாய்வு இயக்குநரகத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை அமலாக்கப் பிரிவுக்குத் தருவதில்லை. எனவே இப்போது வரித்துறை சாராத அமலாக்கப் பிரிவு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இத்தகைய தகவலைப் பெறுவதற்கு வழி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கறுப்புப் பணம் சார்ந்த விஷயங்களைப் பெறுவதில் இந்தியா அதிக தீவிரம் காட்டுவதாகவும், இப்போது இதுபோன்ற விவரங்களை அளிப்பது தொடர்பான நடைமுறைகள் மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.வரி விதிக்கப்படாத 14 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பஹாமஸ், நெர்முடா, ஐசில் ஆஃப் மேன் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தகவல்களை அளிக்கின்றன.
இதுபோன்ற தகவல்களை அளிக்காத நாடுகள் ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் என அறிவிப்பதற்கு விதிமுறையில் இடமுள்ளது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலோ, அல்லது இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் வர்த்தகம் செய்தாலோ அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றார் அவர்.
No comments :
Post a Comment