Tamilians |
மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்கள் 'விகடன்’ மூலமாக வழிகாட்டுகிறார்கள்!
விவசாயம்
'காவிரி’ எஸ்.ரங்கநாதன்
''விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!''
விலைவாசி
வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்.
''ஊக பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கென, என்.எஸ்.சி. போஸ் சாலையில் செயல்படும் ஏஜென்ஸிகளை இழுத்து மூட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அங்கே, சேமிப்புக் கிடங்கு வசதி உருவாக்கப்பட வேண்டும். ஆண்டின் மழை அளவு, விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டித் திட்டமிட்டு, அதற்கேற்ப சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்!''
கல்வித் துறை - ச.மாடசாமி, கல்வியாளர்.
''அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இல்லை. நம்முடைய கிராமப்புறப் பள்ளிகளிலோ, ஆசிரியர் எடுத்துக் காட்டி பாடம் நடத்த ஒரு காந்தத் துண்டுகூடக் கிடையாது. முதலாவதாக, எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், போதிய அளவு கல்வி உபகரணங்கள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். அடுத்து, துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி, ஆசிரியர் நியமனம் வரை அரசியல் தலையீட்டைத் தடுத்து, தகுதியானவர்கள் பதவிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும். இன்னமும் தாய் மொழியில் குழந்தைகள் எளிமையாகப் படிக்கத்தக்க பாடப் புத்தகங்களைக்கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. சமச்சீர் கல்வியோ மேலும் கடினமான பாடத்திட்டங்களைத் திணிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ப - குழந்தைகளை மையப்படுத்தியதாக பயிற்றுவிப்பை மாற்ற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தொடங்கி, வகுப்பறைகள் வரை இந்த மாற்றம் வேண்டும்!''
தலித் முன்னேற்றம் - அழகிய பெரியவன், எழுத்தாளர்.
''இடஒதுக்கீடு அடிப்படையில் தலித் மக்களுக்கென ஒதுக்கிய பணியிடங்கள், தகுதியானவர்கள் இல்லை என்ற காரணத்தினால் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவுப் பணி இடங்களை நிரப்ப வேண்டும். உயர் சாதியினரிடத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு என தலித் மக்களுக்கு அரசுப் பணியை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத் துறை அலுவலகங்களில், இளைஞர்களுக்காக வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!''
விளையாட்டு - தன்ராஜ்பிள்ளை, ஹாக்கி வீரர்.
''சர்வதேச விளையாட்டுகளை சென்னையில் நடத்துவதற்கு ஏதுவாக, சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில், விளையாட்டுத் திடல்கள் அமைக்க வேண்டும். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று பல்வேறு விளையாட்டுகளுக்கு, மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான நகரங்களிலும் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். நான், முஹம்மது ரியாஸ், பாஸ்கரன் போன்றோர் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்!''
மின்சாரம் - சாவித்ரி கண்ணன், பத்திரிகையாளர்.
''ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். இந்தத் துறையில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை புனல் மின்சார உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காற்றாலை மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, துறையின் ஊழல்களையும் களைய வேண்டும்!''
சுற்றுச்சூழல் - 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.
''தமிழகத்தில் புதிய அணு உலைகளை இனிமேலும் அமைக்கக் கூடாது. மரபணு மாற்றுப் பயிர்கள், எண்டோசல்ஃபான் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குண்டு பல்புகளை நீக்கிவிட்டு எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்த வேண்டும். கேரளாவில் விவசாய நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதுபோல, தமிழகத்திலும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளிகளில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்!''
திரைப்படத் துறை - அமீர், இயக்குநர்.
''ஆளும் கட்சியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் சங்க ஆட்களை அரசு நெருங்கவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே, எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம். 'ஃபெப்ஸி’, இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றவற்றில், அரசியல் சார்பு இல்லாத நபர்களே நிர்வாகிகளாகும் சூழலை உருவாக்க வேண்டும். திருட்டு வி.சி.டி. விற்பனையையும் அதற்குத் துணை போகும் காவல் துறையினரையும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!''
தொழிலாளர் நலன் - டி.கே. ரங்கராஜன், தொழிற்சங்கவாதி.
''விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சேவைப் பிரிவுத் தொழிலாளர்கள் போன்றோருக்கு, தமிழகத்தில் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல். இவர்களுக்கான நலத் திட்டங்களும் சரிவரச் செயல்படுத்தப்படுவது இல்லை. அவற்றை முறைப்படுத்த வேண்டும். பணியிட விபத்துகள், பணிச்சூழல் உண்டாக்கும் நோய்களை எதிர்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்!''
சிறுபான்மையினர் நலன் - பேராசிரியர் அ.மார்க்ஸ்
''சச்சார் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்தபோது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்கவில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''
அண்டை மாநில உறவுகள் - ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ்.
''சட்டம்-ஒழுங்கு, எல்லை, நதி நீர் ஆகிய மூன்று பிரச்னைகளுக்காகத்தான் நாம் அண்டை மாநிலங்களைப் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இவற்றை வெற்றிகரமாகக் கையாள ஒரே யுக்தி... அவற்றை அரசியல் ஆக்காமல் இருப்பதும் பரபரப்பு ஆக்காமல் இருப்பதும்தான். சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்து மாநிலக் கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் இந்தக் குழுக்கள் அதிகாரிகள் மட்டத்தில் அமைக்கப்படுவது நன்மை பயக்கும். அடிக்கடி இந்தக் குழுக்கள் கூடுவதும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்கூட்டித் திட்டமிடுவதும் அவசியம்!''
சட்டம் - அருள்மொழி, வழக்கறிஞர்.
''தமிழகச் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகளின் நிலையையும் நலனையும் கருத்தில்கொண்டு, தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம் குற்றவாளிகள் இருக்கும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் மேம்படுத்த வேண்டும். குடும்ப நீதிமன்றங்களைப் பொறுத்தவரை வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய சமரசப் பேச்சுவார்த்தைக்கு, நிம்மதியாக மனம்விட்டுப் பேசக்கூடிய அளவுக்குக் கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!''
தமிழ் வளர்ச்சி - தமிழருவி மணியன்.
''ஆங்கிலம் படித்தால் வாழ்வு சிறக்கும் என்கிற சூழல்தான், நம்முடைய இளைஞர்களை அந்த மொழியை நாடச் செய்கிறது. தமிழ் படித்தாலும் நாம் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கையை தமிழக மக்களிடம் உருவாக்க, அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பு, நீதி, கல்வி ஆகிய மூன்று துறைகளில் என்று தமிழ் மேலோங்குகிறதோ, அன்றுதான் தமிழ் மொழி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். ஆகையால், தமிழை நிர்வாக மொழியாக மாற்ற வேண்டும். அப்போதுதான், தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!''
பதிப்புத் துறை - 'பாரதி புத்தகாலயம்’ நாகராஜன்.
''அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12,574 நூலகங்கள், இன்னமும் கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றைத் திறக்க, புதிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நூலகங்களுக்கு நூல்களை அரசு பெறவில்லை. இந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, நூல்களை நூலகங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது 'எம்.எஸ்.வேர்’டில் மட்டுமே 'யூனிகோட்’ பயன்படுத்த முடிகிறது. இதனை 'பேஜ் மேக்கர்’, 'போட்டோ ஷாப்’, 'கோரல் டிரா’ போன்ற மென்பொருட்களிலும் பயன்படுத்தும் சாத்தியங்களை அதிகரிக்க வேண்டும்!''
போக்குவரத்து - 'டிராஃபிக்’ ராமசாமி.
''நகர்ப் பகுதியில்கூட ஒழுங்கான சாலைகள் இல்லை. பிறகு கிராமப்புறங்கள் எப்படி இருக்கும்? முறையான உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்துகொடுத்து, பின்னர் தரமான வாகனங்களை ஓட்ட வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக, எந்த அரசாங்கமும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதே இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிப் பிரச்னைகள் இருக்கின்றன. அதை, அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சரிசெய்ய வேண்டும்!''
தொழில் துறை - முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)
''தொழில் துறையின் அடிப்படைக் கட்டமைப்பான மின் விநியோகத்தைச் சீராக்க வேண்டும். எதிர்கால மின் தேவைக்கும் இப்போதே திட்டமிட வேண்டும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் தேவைக்குப் பொருட்கள் வாங்கும்போது, சிறுதொழில் - குறுந்தொழில் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றின் மீட்சிக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். சேவைத் துறை தனித் துறையாக்கப்பட்டு, கவனம் செலுத்தப்பட வேண்டும்!''
நீர் ஆதாரம் - பேராசிரியர் ஜனகராஜன்.
''நீர் நிலைகள் பாதுகாப்புக்கென புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். மணல் கொள்ளை, நதி நீர் மாசுபடுவதில் தொடங்கி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வரை அனைத்தையும் தடுக்க வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க, அந்தச் சட்டம் அடித்தளமாக இருக்க வேண்டும். நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்க, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், நிலத்தடி நீரை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம், பயன்படுத்தலாம் என்கிற நிலையை மாற்றவும், தீவிர நடவடிக்கைகள் அவசியம்!''
பெண்கள் / திருநங்கைகள் நலம் - 'லிவிங் ஸ்மைல்’ வித்யா.
''குடும்ப வன்முறைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு நம் பெண்களுக்கு அவ்வளவாக இல்லை. அரசு அதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சத இடஒதுக்கீட்டைக் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தைக் கண் துடைப்பு அமைப்பாக ஆக்காமல், செயல்படும் வாரியமாக மாற்ற வேண்டும். திருநங்கைகள் சுய சார்போடு வாழ்வதற்கு, படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினராலும் சமூக விரோதிகளாலும் திருநங்கைகளுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!''
வேலைவாய்ப்பு
வேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.
''தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். அரசுப் பணிகளில் 1.5 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நிரப்ப வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் தோறும் தனித் தனியாக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்!''
சாலை அடிப்படை வசதிகள் - ஆண்டனி, இயக்குநர், 'நீயா நானா’.
''சிங்கப்பூரில் நுழைந்தவுடனேயே அதன் கச்சிதமான பிரமாண்டம் நம் கண்ணைக் கவரும். அதுபோல சென்னை நகரத்தையும் மாற்ற வேண்டும். அதற்கேற்ற உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களையும் மற்ற சிறுநகரங்களையும் ஒப்பிட்டால், பெரிய வேறுபாடு இருக்கிறது. இது களையப்பட வேண்டும்!''
மனித உரிமைகள் - 'எவிடென்ஸ்’ கதிர்.
''காவல், நீதி, நிர்வாகம், மருத்துவம்... இந்த நான்கு துறைகளில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகள் அங்கேயே விசாரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டுவிடுகின்றன. தமிழகத்தில், குற்றவியல் நீதி ஆணையம் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அதைத் தன்னிச்சையாக, சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் எந்த அதிகாரமும் அற்ற அமைப்பாக, செல்லாக் காசாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். தேசியக் காவல் ஆணையம், மனித உரிமைகள் சார்ந்து மாநிலக் காவல் துறைகளுக்கு அனுப்பிய பல பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை... அவை அமலாக்கப்பட வேண்டும்!''
சமூகச் சீர்திருத்தம் - பேராசிரியை சரஸ்வதி.
''இரட்டை டம்ளர் முறைபோல தீண்டாமைக் கொடுமை எந்த வடிவில் இருந்தாலும், ஒழிக்கப்பட வேண்டும். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பாங்கு இருக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மகளிர் ஆணையத்தில் கட்சி சார்பு உள்ளவர்களைப் பதவியில் அமர்த்தாமல், இயல்பாகவே பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் பெண்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்களையும் நியமிக்க வேண்டும். மலைவாழ் மக்கள், நாடோடிகள் போன்றோரின் குழந்தைகள் கல்வி கற்க உண்டு-உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்!''
இளைஞர் நலன் - சங்கர், 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’.
''அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இளம் ஆசிரியர்களுக்கு 'Incentive Based Programs’ மூலம் அவர்களின் பணித் திறனை அதிகப்படுத்த அரசு உதவ வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களை வேலைவாய்ப்புக்காகத் தேடி வரும் நிலையை மாற்ற, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் வேலை பார்க்க தமிழ், இந்தியாவில் வேலை பார்க்க இந்தி, அயல்நாட்டில் வேலை பார்க்க ஆங்கிலம் என்கிற மும்மொழிக் கொள்கை இருந்தால், இன்னும் சிறப்பு!''
சுகாதாரம் - மருத்துவர் புகழேந்தி.
''தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்குத் தரமான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பதையும் எல்லா மருந்துகளும் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து பணியாற்றுவதைத் தடை செய்ய வேண்டும். மருந்துகள் அநியாய விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில், பெரும் பகுதியை சிறப்புக்கூறு நோய்களுக்கு செலவழிப்பதற்குப் பதிலாக, அடிப்படை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்!''
கிராமப்புற மேம்பாடு - குத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ, சமூக சேவகர்.
''கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயத் துறை மறுமலர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாத குடிநீர், வீடுகள்தோறும் சுகாதாரமான கழிப்பறைகள், குளியல் அறைகள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்ட 'நமது கிராமம்’ திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டி, செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரமும் நிதியும் அளிக்கப்பட வேண்டும்!''
Thanks : விகடன்
No comments :
Post a Comment