தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி இழக்கவுள்ளது.
அதேவேளையில், குறிப்பிடத்தக்க எழுச்சியின் பலனாக தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், ஒரு கட்சி கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளைப் பெறுவதுடன், குறைந்தது ஒரு மக்களவை உறுப்பினரை பெற்றிருக்க வேண்டும்; வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், அக்கட்சி சார்பில் 2 மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இல்லையேல், கடைசியாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளை பெறுவதுடன், அக்கட்சியில் இருந்து குறைந்தது 2 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்கு சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நான்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பாமக இழக்கவுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே எல்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அக்கட்சியால் தேர்தல் ஆணையத்தின் ஒரு நிபந்தனையைக் கூட நிறைவேற்ற முடியாமல் போனது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே புதுச்சேரியில் பாமக தனது அங்கீகாரத்தை இழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவுக்கு அங்கீகாரம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருப்பதன் மூலம் தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கிறது.
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக வென்றது. ஆனால், அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறாததால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைத்துளது. அத்துடன், அக்கட்சியை சேர்ந்த 29 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மீண்டும் கிடைக்கவுள்ளது.
No comments :
Post a Comment