Ungalal Mudium by Dinamalar | உங்களால் முடியும் - தினமல | நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே

""நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.
"தினமலர்' இதழின் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் இன்ஜினியரிங் படிப்பிற்கான கவுன்சிலிங்கை சிறப்பான முறையில் சந்திக்க வழிகாட்டும், "உங்களால் முடியும்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, சென்னை சேத்துபட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரிலும், தாம்பரத்திலும் நேற்று நடந்தது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் தேர்வில் சாதிக்கும் வகையில் நடத்தப்படும் "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு துவங்கிய, இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலிங்கை சந்திக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்களுக்கு கல்லூரி மற்றும் துறைகளை தேர்ந்தெடுப்பதற்கு உதவும் வகையிலான குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: படிப்பை பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், எட்டு முதல் பிளஸ் 2 வரை இரண்டாம் நிலையாகவும், கல்லூரி படிப்பானது மூன்றாவது நிலையாகவும் உள்ளன.
முதல் இரண்டு நிலையை பொறுத்தவரை மாணவர்களின் படிப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்கும். ஆனால், மூன்றாம் நிலையான கல்லூரி படிப்பை பொறுத்தவரை, அதற்கான பாதையை மாணவர்கள் தான் வகுக்க வேண்டும்.
கவுன்சிலிங்கை பொறுத்தவரை எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். இறுதி நேரத்தில் குழப்பத்தில் சிக்க வேண்டாம். குறிப்பாக 40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடின உழைப்பு, கடமை தவறாமை, நேர்மை, ஒருங்கிணைந்து செயல்படுதல், முழு ஈடுபாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடின உழைப்பு மூலம் பெறும் பயனே சிறந்தது. அதற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. ஆகையால் மாணவ, மாணவியர் கல்லூரி காலங்களில் படிப்பிற்கான கடின உழைப்பிற்கு தயாராக வேண்டும்.இவ்வாறு மன்னர் ஜவஹர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா ஆகியோர் பேசினர்.

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து முடிவெடுங்கள்: ரமேஷ் பிரபா பேச்சு ""கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும், '' என, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினார்.

ரமேஷ் பிரபா பேசியதாவது:இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்வதற்கு முன், கல்லூரி மற்றும் துறை ரீதியான வாய்ப்புகள் குறித்து தகவல்களை திரட்ட வேண்டும். இதே போல, குறைந்த கட்டணமே வசூலிக்கும் அரசு கல்லூரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில், சிறப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் குறிப்பிட்ட துறையானது, நாம் நான்கு வருட படிப்பு முடிக்கும் போது, எந்த நிலையில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆகையால், புதிய பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, பல பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதை நாம் அறிய வேண்டும். ஆகையால், இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தும், அவற்றின் பயனறிந்தும் அவற்றை தேர்ந்தெடுத்த படிக்க முன் வர வேண்டும்.

அனைத்து பாடப் பிரிவுகளையும் ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலிங்கை சந்திப்பதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் பதட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். இதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf