Alagarsamyin Kuthirai Review | அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அப்புக்குட்டி போல ஒரு ஹீரோவை முன்வைத்த ரசனைக்கும் துணிச்சலுக்கும் முதல் பாராட்டுக்கள். விகடனில் வெளிவந்த பாஸ்கர் சக்தியின் 'சற்றே பெரிய சிறுகதை'யை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஒரு கிராமம், அதன் வெள்ளந்தி - வில்லங்க மாந்தர்கள், ஒரு குதிரை, ஒரு குதிரைக்காரன்... இவர்களும் இவர்களுக்கு இடையிலான சம்பவங்களும்தான் படம்.
'குதிரை'யைக் காணோம் என்று பிரசிடென்ட் தலைமையில் ஊரின் தலைக்கட்டுகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சியை, வாசிப்பு சுவாரஸ்யம் குறையாத திரை அனுபவம் ஆக்கியதில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்!  
தன்மையான முரட்டுத்தனம் காட்டும் ஊர் பிரசிடென்ட், நாத்திக க்ரூப் இளந்தாரிகள், மலையாளக் கோடங்கியின் உதார், கிராமப் பஞ்சாயத்தில் அந்து நொந்து நூலாகும் இன்ஸ்பெக்டர், மாலை போட்டு இருக்கும் சமயமும் 'சுத்தபத்தம்' காக்காத மைனர், உளவு பார்க்க வந்து 'மினி சாமியார்' ஆகும் சூரி எனப் படம் நெடுக அடுக்கப்பட்டு இருக்கும் குட்டிக் கதாபாத்திரங்கள் வசீகரம்.
கொடைக்கானல் ஏரியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தவரை நடிக்க வைத்ததுபோல, அப்புக் குட்டியிடம்  அசல் குதிரைக்கார உடல்மொழி! மலையாளக் கோடங்கி வரவால் வெகுண்டெழுந்து ஊறுகாய் எலுமிச்சம் பழங்களுக்கு குங்குமம் பூசி, பொண்டாட்டி கையால் பூசை வாங்கும் உள்ளூர் கோடங்கியின் ராவடிகள் கலீர் கலகலப்பு!  
'ஸ்டார் அட்ராக்ஷன்' இல்லாத படத்தின் நட்சத்திரக் கவர்ச்சி, 'கோழியைக் களவாண்டு தின்னும் தொத்தலாத்தானே இருக்கான்!' போன்ற பாஸ்கர் சக்தியின் கிண்டல், நக்கல், எள்ளல், கேலி தொனிக்கும் வசனங்கள்தான்.  'குதிக்கிற குதிக்கிற...' பாடலிலும், பின்னணி இசையிலும் மலைவாசஸ்தல ட்ரிப் அடித்த உணர்வை உண்டாக்குகிறார் இளையராஜா. ஒளிப்பதிவு, அறிமுகம் 'தேனி' ஈஸ்வர். ஜன்னல் வழிக் காட்சியாக கிராமத்தின் உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் கேமரா, அந்தரத்தில் மிதந்து, தவழ்ந்து மலைக் கிராமத்தின் அழகைக் கொள்ளைகொள்கிறது.
அப்புக்குட்டிக்கும் குதிரைக்கும் இடையிலான பிணைப்பு அழுத்தமாகப் பதியாததால், அவர் குதிரைக்காக அழுது புரள்வது அத்தனை தாக்கத்தை உண்டாக்கவில்லை. சரண்யா மோகனுக்கு அப்புக்குட்டி மீது தீராக் காதல் ஏற்படுவதற்கான காரணமும் ம்ஹூம். ஊரில் அதீத வறட்சி என்பதைக் காட்சிகளில் காட்டவே இல்லை. குதிரை காணாமல் போனதின் படபடப்பும், யார் அந்தத் திருடன் எனும் பரபரப்பும்... அழுத்தமாக இல்லை. புரோட்டாவின் விலையை வைத்து கதை எண்பதுகளில் நடக்கிறதுபோல என்று அனுமானிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதும் இப்படியான கிராமங்களும் மூட நம்பிக்கைகளும் இருக்க, ஏன் தெளிவு இல்லாத எண்பதுகள் தொனி?
Thanks : Vikatan

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf