ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும்.
சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக்கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்திடவும்; இது வரை நான்கு தனித் தனி வாரியங்களின்கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத் திடவும் தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் எவ்வாறு நடைமுறைபடுத்தபட உள்ளது? இதன் சிறப்பு அம்சங்கள் என்ன?
சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல;
ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம் சங்களைத்தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாடத்திட்டம், பாட நூல்கள் குறித்து ஒளிவு மறைவின்றி பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ள படி, பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும்.
சமச்சீர் கல்வி திட்டம் - சாதகங்கள்
இந்த திட்டம் பாடத்திட்டத்தில் நிலவும் ஏற்ற,தாழ்வுகளை நீக்குகிறது. உதாரணமாக,தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத ஏழை,கிராமப்புற மாணவர்கள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தால் ஒன்றிணைக்க படுகிறார்கள். கல்வி, ஒரே தரத்துடன் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது.
தமிழகத்தில் 69 சதவித இடஒதுக்கீட்டின் வாயிலாக சமுதாய ரீதியில் பின்தங்கிய சமுதாயத்தினர் கல்வியினையும் வேலை வாய்ப்பினையும் பெற்று வருகின்றனர். கல்வியில்,பாடத்திட்டங்களில் நிலவும் வேறுபாடுகளால் இடஒதுக்கிடு மற்றும் அதன் பலன்கள் முழுமை அடையவில்லை. சமச்சீர் கல்வி திட்டம் இதற்க்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
தனியார் பள்ளி மாணவர்களுக்குள்ள கல்விச்சுமை பாதிக்கு பாதியாக குறையும். சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததும், மொத்த பாடங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துவிடும். இதனால், கல்விச்சுமையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.
200 மதிப்பெண்களுக்கு படித்து தேர்வெழுதி, அதை நூற்றுக்கு கணக்கிட்டு வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. மெட்ரிக் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண்களுக்கும், அறிவியல் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 1,100 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதேபோல், ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு 1,000 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
அனைத்து கல்வி வாரியங்களும் ஒருங்கிணைத்து, பொது கல்வி வாரியம் உருவாக்கப்படுவதால், ஐந்து பாடங்கள், தலா 100 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்கள் என்று பொதுத்தேர்வு முறை நிர்ணயிக்கப்பட உள்ளது. இதனால், தற்போது நடைமுறையில் மாநில பாடத்திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும்.
மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறைத்தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இந்த தேர்வை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2011-2012ம் கல்வியாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் செய்முறைத் தேர்வுகள் நடைமுறைக்கு வர உள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் - பாதகங்கள்
இது மாநில அரசின் திட்டமே என்பதால்,மாநில அளவிலான நான்குவித பாடத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது பல பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.
பிற மொழிகளை பயிற்சி மொழியாகக் கொண்டு இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது. தமிழ் பயிற்று மொழியாக இல்லாதது இந்த திட்டத்தில் உள்ள ஒரு பெரும் குறைபாடு. இதனால், மாணவர்கள் வெறும் 'மனப்பாட எந்திரங்களா'கத்தான் உருவாகும் நிலை உருவாகும்.
பாடங்கள் தாய்மொழியிலும், பிறமொழிப் பயிற்சிக்கு கூடுதல் வகுப்பு நேரங்களும் ஒதுக்கப்படும் அம்சம் இணைக்கப்படவேண்டும்.
"தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும், இதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், மெட்ரிக் பள்ளிகளில் தற்போது பாடத்திட்டங்கள் எந்த தரத்தில் இருக்கின்றனவோ, அதே தரத்தில் பொது பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். அதையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவான பாடத்திட்டங்களை உருவாக்கும்போது, அந்தப் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன், அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். பாடப்புத்தக தயாரிப்புக் குழு அமைக்கப்படும்போது, அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் " இவ்வாறு கூறியிருக்கிறார் சமச்சீர் கல்விக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ்
சமச்சீர் கல்வி :
கல்வியை ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் பாகுபாடுயின்றி கொண்டு சேர்க்கும் திட்டம்.
"நாங்கள் இந்த பாடங்களை சொல்லித்தருகிறோம். அரசு பள்ளிகளில் இவைகள் இல்லை" என்று கல்வி வியாபாரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு முடிவுகட்டப்படும.
பஸ்சிலும், ஆட்டோக்களிலும் பொதிமூட்டை சுமக்கும் நம் குழந்தைகளின் கல்வி சுமையை, பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்கும்.
இத்தைகைய திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஒரு கல்வி புரட்சிக்கு அடிக்கல் நாட்டியிருக்கும் நம் தமிழக அரசுக்கு நன்றி.
கடைக்காரர் கமெண்ட்:
நல்ல திட்டம்தான்...கலைஞர் அய்யாவுக்கு நன்றிங்க...
அதே சமயம் எந்த மொழியில் சொல்லிகொடுத்தாலும்,நம் தமிழ் மொழி ஒரு கட்டாயபாடமா இருக்கனும்ன்னு என்னோட தனிப்பட்ட ஆசைங்க...
No comments :
Post a Comment