யார் இந்த ரஜினிகாந்த்? - ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்?
May 20, செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம். (sinthikkavum@yahoo.com).
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
இந்த பத்திரிக்கைகள்தான் ஆதிக்க சக்திகளின் கைகளில் போகி விட்டது என்று பார்த்தால். மீதம் இருக்கும் இந்த வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் நம் இணைய தளத்தையும், நாம் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள் என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
No comments :
Post a Comment