How much is the Indian Black Money | இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது? - மத்திய அரசு ஆய்வு

Indian Currency
டெல்லி: இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை கணக்கிட மூன்று ஆய்வு நிறுவனங்களை அணுகியுள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என நீதின்றம் சந்தேகம் எழுப்பியது.

மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் 'லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

உயர்மட்ட கமிட்டி

நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும்.

கறுப்பு பணத்தை 'தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர்.

16 மாதங்களுக்குள்

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, 'அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', 'நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தோராய மதிப்பீடு ரூ.70 லட்சம் கோடி

ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து 'பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது.

கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf