Samac Cheer Kalvith Thittam: சமச்சீர் கல்வி | அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை பயில்வது என்பதுதான் சமச்சீர் கல்வி

0 comments
தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை பயில்வது என்பதுதான் சமச்சீர் கல்வி. இது குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை வழங்குவதற்காக கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமான முத்துக்குமரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அரசிடம் அளிக்கப்பட்டன.

ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும்.

சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக்கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்திடவும்; இது வரை நான்கு தனித் தனி வாரியங்களின்கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத் திடவும் தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் எவ்வாறு நடைமுறைபடுத்தபட உள்ளது? இதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல; Thanks to http://kadaitheru.blogspot.com/2009/11/blog-post_04.html

ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம் சங்களைத்தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாடத்திட்டம், பாட நூல்கள் குறித்து ஒளிவு மறைவின்றி பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ள படி, பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும்.

சமச்சீர் கல்வி திட்டம் - சாதகங்கள்

இந்த திட்டம் பாடத்திட்டத்தில் நிலவும் ஏற்ற,தாழ்வுகளை நீக்குகிறது. உதாரணமாக,தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத ஏழை,கிராமப்புற மாணவர்கள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தால் ஒன்றிணைக்க படுகிறார்கள். கல்வி, ஒரே தரத்துடன் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது.

தமிழகத்தில் 69 சதவித இடஒதுக்கீட்டின் வாயிலாக சமுதாய ரீதியில் பின்தங்கிய சமுதாயத்தினர் கல்வியினையும் வேலை வாய்ப்பினையும் பெற்று வருகின்றனர். கல்வியில்,பாடத்திட்டங்களில் நிலவும் வேறுபாடுகளால் இடஒதுக்கிடு மற்றும் அதன் பலன்கள் முழுமை அடையவில்லை. சமச்சீர் கல்வி திட்டம் இதற்க்கு சிறந்த தீர்வாக அமைகிறது.


தனியார் பள்ளி மாணவர்களுக்குள்ள கல்விச்சுமை பாதிக்கு பாதியாக குறையும். சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததும், மொத்த பாடங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துவிடும். இதனால், கல்விச்சுமையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.

200 மதிப்பெண்களுக்கு படித்து தேர்வெழுதி, அதை நூற்றுக்கு கணக்கிட்டு வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. மெட்ரிக் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண்களுக்கும், அறிவியல் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 1,100 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதேபோல், ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு 1,000 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

அனைத்து கல்வி வாரியங்களும் ஒருங்கிணைத்து, பொது கல்வி வாரியம் உருவாக்கப்படுவதால், ஐந்து பாடங்கள், தலா 100 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்கள் என்று பொதுத்தேர்வு முறை நிர்ணயிக்கப்பட உள்ளது. இதனால், தற்போது நடைமுறையில் மாநில பாடத்திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும்.


மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறைத்தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இந்த தேர்வை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2011-2012ம் கல்வியாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் செய்முறைத் தேர்வுகள் நடைமுறைக்கு வர உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் - பாதகங்கள்

இது மாநில அரசின் திட்டமே என்பதால்,மாநில அளவிலான நான்குவித பாடத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது பல பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.

பிற மொழிகளை பயிற்சி மொழியாகக் கொண்டு இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது. தமிழ் பயிற்று மொழியாக இல்லாதது இந்த திட்டத்தில் உள்ள ஒரு பெரும் குறைபாடு. இதனால், மாணவர்கள் வெறும் 'மனப்பாட எந்திரங்களா'கத்தான் உருவாகும் நிலை உருவாகும்.

பாடங்கள் தாய்மொழியிலும், பிறமொழிப் பயிற்சிக்கு கூடுதல் வகுப்பு நேரங்களும் ஒதுக்கப்படும் அம்சம் இணைக்கப்படவேண்டும்.

"தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும், இதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், மெட்ரிக் பள்ளிகளில் தற்போது பாடத்திட்டங்கள் எந்த தரத்தில் இருக்கின்றனவோ, அதே தரத்தில் பொது பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். அதையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவான பாடத்திட்டங்களை உருவாக்கும்போது, அந்தப் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன், அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். பாடப்புத்தக தயாரிப்புக் குழு அமைக்கப்படும்போது, அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் " இவ்வாறு கூறியிருக்கிறார் சமச்சீர் கல்விக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ்

சமச்சீர் கல்வி :

கல்வியை ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் பாகுபாடுயின்றி கொண்டு சேர்க்கும் திட்டம்.

"நாங்கள் இந்த பாடங்களை சொல்லித்தருகிறோம். அரசு பள்ளிகளில் இவைகள் இல்லை" என்று கல்வி வியாபாரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு முடிவுகட்டப்படும.

பஸ்சிலும், ஆட்டோக்களிலும் பொதிமூட்டை சுமக்கும் நம் குழந்தைகளின் கல்வி சுமையை, பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

இத்தைகைய திட்டத்தின் மூலம், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஒரு கல்வி புரட்சிக்கு அடிக்கல் நாட்டியிருக்கும் நம் தமிழக அரசுக்கு நன்றி.

கடைக்காரர் கமெண்ட்:
நல்ல திட்டம்தான்...கலைஞர் அய்யாவுக்கு நன்றிங்க...

அதே சமயம் எந்த மொழியில் சொல்லிகொடுத்தாலும்,நம் தமிழ் மொழி ஒரு கட்டாயபாடமா இருக்கனும்ன்னு என்னோட தனிப்பட்ட ஆசைங்க...

Tamilnadu Private Schools Accept's the Stopping of Samchceer Kalvithittam | தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியுள்ள தமிழக அரசின் முடிவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதரவு |

0 comments
சமச்சீர் கல்வி திட்டம்
சமச்சீர் கல்வி திட்டம், தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வி திட்டத்தை,  நிறுத்தியுள்ள தமிழக அரசின் முடிவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சமச்சீர் கல்வி நீக்கத்தை வரவேற்று, சமச்சீர் கல்வி திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் ஒரு மனுவை அனுப்பி உள்ளார்.

 அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த ஆட்சியில் எல்லா மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்குவதாக கூறி சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தனர்.ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவதற்குப் பதில் பணக்காரர்களை ஏழைகள் ஆக்குவதை போல தரமான கல்வி போதித்துவந்த தனியார் பள்ளிகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தரத்திற்கு குறைப்பதுதான் சமச்சீர் கல்வி திட்டம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்கால ஏக்கங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சமச்சீர் கல்வி திட்டத்தை மாற்றி, மற்ற மாநிலங்களுக்கு இணையாக புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கி, கல்வித்துறையில் அனைவரும் ஏற்கும் வகையில் புரட்சி ஏற்படுத்துவீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தரம் குறைந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்த உங்களுக்கு நன்றி. இவ்வாறு சமச்சீர் கல்வி திட்டம் மனுவில் கே.ராஜன் கூறி உள்ளார். அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 கட்டாய தமிழ்வழிக்கல்வி பாடத்திட்டத்தில் தோற்றுப்போன தி.மு.க. அரசு, தனியார் பள்ளிகளை பழிவாங்கும் நோக்கில் அவசர அவசரமாக பல்வேறு குளறுபடிகளுடனும் பாடத்தொகுப்பில் பிழைகளுடனும் சமச்சீர்கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்ட முறையை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் குழந்தைகளிடம் திணிக்க முயன்றதை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தி லட்சக்கணக்கான மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை இருளில் இருந்து மீட்டுள்ளார்.

அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி திட்டம் கல்வி வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார். ஆனால், அரசின் மீது குறைகூற வேண்டும் என்பதற்காக புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட செலவினங்கள் வீணாகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், முதல்- அமைச்சர் ஜெயலலிதா லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வித்தரத்தையும் பெற்றோர்களின் மனக்கவலையையும் மனதில் கொண்டு உரிய தருணத்தில் சரியான முடிவினை கையாண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Thanks : http://www.maalaimalar.com/2011/05/27061744/jayalalitha-interview-in-chenn.html

Do we need Samach Cheer Kalvi Thittam | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன?

0 comments
பள்ளிக் கல்வியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாநிலக் கல்வி திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வித் திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நான்கு வகையான கல்வித் திட்டங்கள், மாணவர்களை அடிப்படையிலேயே பிரிப்பதுடன், எதிர்காலத்தில் சமூக, பொருளாதார ரீதியாகவும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க வழி வகுக்கிறது என்ற குற்றச்சாட்டை, கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.இதை மாற்றுவதற்கு, ஒரே வகையான, தரமான கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பரவலாக குரல் எழுப்பப்பட்டது. இதையடுத்து, 2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.வகுப்பு வாரியாக, நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, பெரும் செலவில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு, சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மீதமுள்ள வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.பதவியேற்ற ஏழாவது நாளில், திடீரென சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து, ஜெயலலிதா அறிவித்தார். தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை என்றும், பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமான பாடத் திட்டங்களை உருவாக்க குழு அமைத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனால், வரும் கல்வியாண்டில் பழைய பாடத் திட்டங்களே மீண்டும் அமலுக்கு வருகின்றன.சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் என, பல தரப்பட்டவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர், அரசு நடவடிக்கையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

ராயப்பேட்டை, மாலதி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் உமா, தவமணி, கனிமொழி ஆகியோர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளி பாடத் திட்டங்கள் அளவிற்கு, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இல்லை. தனியார் பள்ளி பாடத் திட்டங்கள், ஒரு பொருளைப் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் எடுத்துக் கூறும் வகையில் இருக்கின்றன. அதைப்போல, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அமையவில்லை. குறிப்பாக, அறிவியல், கணிதம் ஆகிய பாடத் திட்டங்கள் விரிவாக அமையவில்லை.மெட்ரிக் பாடத் திட்டத்தில், கணிதப் பாடம் இரு தாள்களாக இருக்கின்றன. பாடப் புத்தகங்களும் இரு தொகுதிகளாக உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஒரேயொரு பாடப் புத்தகம் தான். இப்படிப்பட்ட பாடப் புத்தகங்களை படித்தால், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாது. இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், மாணவர்களின் திறன் மங்கிப் போவதற்கு வழி ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக, இத்திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. புதிய அரசு அமைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்த்தனர். அதைப்போலவே, முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளி மாணவி திவ்யா: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியிருக்கலாம். ஏனெனில், மெட்ரிக் பாடத் திட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. படிப்பு என்பது எளிதாக இருக்க வேண்டும்; சுமையாக இருக்கக் கூடாது. சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் மிகவும் எளிதாக இருக்கின்றன. இதனால், மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் படிக்கலாம்.மாணவி பீபி ஆயிஷா: சமச்சீர் கல்வித் திட்டத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆழமான, விரிவான பாடத் திட்டங்கள் தான் தேவை. தனியார் பள்ளிகளில் தரமான பாடத் திட்டங்கள் இருப்பதால் தான், தேசிய அளவில் நடக்கும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்.அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் பாலாஜி: சமச்சீர் கல்வித் திட்டம் தான் வேண்டும். வசதியின் அடிப்படையில், மாணவர்களை பல வகையாக பிரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அரசு பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் பல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தமிழில் பேசும் போது, தரம் தாழ்ந்தவர்கள் போல், கூனிக் குறுக வேண்டியிருக்கிறது. இதுபோன்று எந்தவித வேறுபாட்டையும் ஏற்படுத்தாமல், ஒரே தரத்தில் பாடத் திட்டத்தை கொண்டு வந்தால், அனைத்து மாணவர்களும் ஒரே சம அளவிலான தரம் உடையவர்களாக இருப்பர். சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

குமார் (பெற்றோர்): ஏழை, எளிய மாணவர்கள் முதல், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான பாடத்தை நடத்துவது தான் நியாயம். ஆளாளுக்கு ஒரு வகையான கல்வி முறை கூடாது.

பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது தான் சரியான முடிவாக இருக்கும். ஒரே பாடத் திட்டம், ஒரே சரி சமமான திறமையுள்ள மாணவர்கள், அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு ஆகியவை இந்த திட்டத்தால் தான் கிடைக்கும். நான்கு வகையான கல்வித் திட்டங்களை வைத்தால், மாணவர்களிடையே சம நிலையற்ற நிலை தான் நீடிக்கும்.அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் பி.டி.அரசகுமார்: தனியார் பள்ளிகளை பழி வாங்கும் நோக்கத்துடன், அவசரம் அவசரமாக தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தது. பெற்றோர், மாணவர்கள் விருப்பத்திற்கு மாறாக, சமச்சீர் கல்வித் திட்டத்தை திணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை, தற்போது நிறுத்தியதன் மூலம், மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் இருந்து ஜெயலலிதா மீட்டுள்ளார்.

15 நாளில் பாடப் புத்தகங்களை அச்சடிக்க முடியுமா?வரும் கல்வியாண்டில், பழைய பாடத்திட்டங்களே பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்காக, பழைய பாடப் புத்தகங்களை அச்சடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, 27ம் தேதியுடன் முடிகிறது. 15 நாளில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு, மாணவர்களுக்கு வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வளவு குறுகிய காலத்தில் அச்சிட்டு முடிப்பது சாத்தியமா என்பது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பாடப் புத்தக அச்சக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:பழைய பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான டெண்டர் இறுதி செய்வதற்கே சில நாட்கள் தேவைப்படும். ஒரு, "ரீம்' (500 ஷீட்டுகள்) அச்சடிக்க, ஏற்கனவே, அச்சகங்களுக்கு, 22 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இதே விலையில் பாடப் புத்தகங்களை அச்சிட முடியாத நிலை இருக்கிறது. அச்சகப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டியிருப்பதாலும், செலவு அதிகமாக ஏற்படுவதாலும், பாடப் புத்தகங்களை அச்சிட, ஏற்கனவே வழங்கிய தொகையை, 50 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என, அச்சக உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த தொகையை தமிழக அரசு தராத பட்சத்தில், ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி ஏற்படும்.அப்படியே உடன்பாடு எட்டப்பட்டாலும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கால அவகாசத்தில் அச்சிட்டு தருவது மிகவும் கடினம். முதற்கட்டமாக, 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் அச்சிட்டு தருமாறு கேட்கின்றனர். 60 முதல், 70 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க வேண்டும். அதற்குப்பின், இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும், "ஆர்டரை' கொடுக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

23 ஆயிரம் டன் பேப்பர் உபயோகம் : * சமச்சீர் கல்வி திட்டத்திற்காக, 23 ஆயிரம் டன் பேப்பர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டன், 50 ஆயிரம் ரூபாய் விலையில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருந்து, பாடநூல் கழகம் வாங்கியுள்ளது. இதற்காக, 177 கோடி ரூபாயை, பாடநூல் கழகம் கொடுத்துள்ளது.
* ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்காக, அச்சக நிறுவனங்களுக்கு, 103 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
* சென்னையில், எட்டு அச்சகங்கள், ஆந்திராவில், 13 அச்சகங்கள், கர்நாடகாவில் இரண்டு அச்சகங்கள், கேரளாவில் ஒரு அச்சகம் மற்றும் சிவகாசியில், 40க்கும் மேற்பட்ட அச்சகங்களில், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
* ஒவ்வொரு அச்சகத்திற்கும், 10 கோடி முதல், 15 கோடி ரூபாய் வரை, "ஆர்டர்' தரப்பட்டன.
* தற்போது, எட்டரை கோடி பாடப் புத்தகங்கள், மாவட்டங்களில் உள்ள பாடநூல் கழக குடோன்களிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
* இந்த புத்தகங்கள், ஏலம் மூலம் பழைய பேப்பர் வாங்குவோருக்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf