[Cancer and it's Consequences]ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்

இதயத்துக்குப் பின்னால், நீளமான குழாய் போன்ற அமைப்பை உடையது உணவுக்குழாய். வாயையும், இரைப்பையையும் இணைக்கக் கூடிய தசையால் ஆன குழாய், 25 செ.மீ., முதல் 30 செ.மீ., நீளமானது; சுருங்கி விரியும். வாய், இரைப்பை இணையும் பகுதியில், மூடி போன்ற இரு வால்வுகளை கொண்டது. உணவு செல்லும் போதும், வாந்தி எடுக்கும் போதும் மட்டுமே இந்த வால்வுகள் திறக்கும்.வாய் வழியாக உணவு சென்றதும், இயந்திரம் போன்று வேகமாக இயங்கி, உணவை வயிற்றுக்குள் தள்ளும் திறன் கொண்டது தான் இந்த உணவுக் குழாய். நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும், உணவை வயிற்றுக்குள் அனுப்பும் திறன் வாய்ந்தது. உணவின் பயணம் இக்குழாயில் ஏழு நொடிகள். தண்ணீராக இருந்தாலும், திட உணவாக இருந்தாலும், இந்த நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

மூன்று வகை நோய்கள்:

உணவுக்குழாயில் ஏற்படும் நோய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையால் வரக்கூடிய உணவுக்குழாய் அழற்சி.

2. தசையால் ஆன உணவுக் குழாய் அமைப்பில் ஏற்படும் பாதிப்பு, சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாறுதல்.(அக்லேசியா).

3.உணவுக் குழாயினுள் சாதாரண கட்டிகள்,புற்றுநோய் கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்படுதல் (கேன்சர்).
இவற்றில், அமிலத் தன்மையால் வரக்கூடிய நோய், மக்களிடையே காணப்படுகிறது.

நோய்க்கான காரணங்கள்:

இயற்கையான உணவுப் பழக்கங்களைத் தவிர்த்து, அதிக மசாலா, காரம், எண்ணெய் உள்ள பொருட்களை உண்பதால், வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. உணவு ஜீரணத்துக்காக, வயிற்றில் அதிக அளவிலான அமிலம் சுரப்பதால், உணவுக் குழாயின் கீழ் உள்ள வால்வு பாதிப்படைகிறது.

பொதுவாக, நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளாலும் இந்த சூழ்நிலை
ஏற்படுகிறது. கலாசாரத்தின் பெயரால், மேலை நாட்டு உணவுப் பழக்கத்துக்கு செல்வது ஆபத்தானது. அதோடு, குடிப்பழக்கம், புகையிலை, பான்பராக்கு பயன்படுத்துதல், டாக்டர்கள் பரிந்துரை செய்யாத வலி மாத்திரைகளை பயன்படுத்துதல் போன்றவை, உணவுக்குழாய் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. பொதுவாக, கேன்சர் வர காரணமாக அமைவது புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் தான். பாஸ்ட் புட் பெயரில் தயாரிக்கப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகளால், இரைப்பையில் அமிலத் தன்மை ஏற்பட்டு பாதிப்பு வரும்.

உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை.

உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமான சூட்டில் , காபி, டீ சாப்பிடுவதால், உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது.

உணவுக் குழாய் கேன்சர் அறிகுறிகள்:

உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும்; வலியும் ஏற்படும்.

நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வந்து செல்வதும், உணவுப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஏற்படுத்தும்.

ரத்த வாந்தி எடுத்தல், இருமல் வருதல், மூச்சு விட சிரமம் ஏற்படுதல் போன்றவையும் கூட, உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.

உணவுக் குழாய் கேன்சர் கண்டறிதல்:

பொதுவாக, உணவின் பாதை யை முற்றிலும் அறிய, வீடியோ "எண்டோஸ்கோப்' முறை பயன்படுகிறது. இதில், குடலின் உள் பகுதியை ஒவ்வொரு அங்குல படமாக, "டிவி' திரையில் படமாகக் காணலாம். உணவுக்குழாயில் புண் உள்ளதா, கட்டி ஏற்பட்டுள்ளதா, தசைகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளதா போன்றவற்றைக் காண முடியும். "சிடி' ஸ்கேன் மூலம், வெளிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும்.

உணவுக் குழாய் கேன்சர் சிகிச்சை முறை:

உணவுக் குழாயில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உணவுக் குழாயில், மூன்று வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இதில், அமிலத் தன்மையால் ஏற்படும் புண்களை எளிதாக குணப்படுத்தலாம்.அக்லேசியா எனப்படும் இரண்டாம் வகை, உணவுக்குழாய் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம். உணவுக்குழாயில் ஏற்படும் சுருக்கம் (சிரோசிஸ்) மற்றும் வீக்கம், உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில், இந்த வீக்கத்தை சரி செய்வது கடினமாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் இந்த உணவுக்குழாய் சுருக்கத்தை சரி செய்ய முடியும். எளிதாக இதை, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையில் சரி செய்யலாம்.உணவுக்குழாய் கேன்சர் ஆபத்தானது. முதல் கட்ட அளவில் உள்ள கேன்சரை எளிதாக குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் கேன்சர், ஆரம்ப கட்டத்தில் இருக்குமானால், எளிதாக எண்டோஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். அடுத்த சில கட்டங்களை தாண்டியிருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு, அங்கு செயற்கை உணவுக் குழாயை பொருத்துகின்றனர். அதிக அளவில் பரவிய உணவுக் குழாய் கேன்சர் இருந்தால், கீமோதெரபி, கதிர்வீச்சு முறை போன்ற சிகிச்சை முறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, கடினமான சிகிச்சையாக இருக்கும்.

டாக்டர் சி.பழனிவேலு, ஜெம் மருத்துவமனை, கோயம்புத்தூர்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf