தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல்

சென்னை, தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கட்டட விதிமுறைகளை மீறியும், முறையான அனுமதி பெறாமலும் உள்ள கட்டடங்களை கண்காணிப்பதற்கு, குழு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சியையும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தையும் அந்தக் குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட சுமார் 61 கட்டடங்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பல கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகாரிகளால் சீலிடப்பட்ட கடைகளுள் சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஒரு கடை,பாலு ஜுவல்லர்ஸ், ஸ்ரீதேவி கோல்டு கவரிங், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகியவையும் அடங்கும்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தி.நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கையின் பின்னணி...

கடந்த 2006-ல் மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

அதில், சென்னை நகரின் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடக்கோரியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக, சி.எம்.டி.ஏ. பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை நியமித்தது.

தியாகராய நகரிலுள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்தது, கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு விதிமுறைகள் மீறிய கட்டடங்களை இடிப்பதற்கு 2007-ல் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, அவற்றை இடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், கட்டடங்களை இடிப்பதை நிறுத்தும் வகையில் முந்தைய ஆட்சியில் அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. கட்டங்களை இடிக்கும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது.

இதனிடையே, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கை முடக்கப்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன், மாநில அரசின் அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிக்க கடந்த ஜுலை மாதம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. அதன்படி, தியாகராய நகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். எனினும், கடந்த மாதம் வரை அடுத்தகட்ட எடுக்கப்படவில்லை. இதற்கு, அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் ஒரு காரணம்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனால், உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சி.எம்.டி.ஏ.யும், மாநகராட்சியும் இணைந்து இப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf