What is Mullaip Periyar or Mulla Periyaar? : முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை வரலாறு:


மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564 வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார். 1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர் முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர். பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

முல்லை பெரியாறு ஒப்பந்தம்:


முல்லை பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.


முல்லை பெரியாறு அணை மின் உற்பத்தி:

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.
அணை பயன்பாடு

இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.

இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும், மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

முல்லை பெரியாறு அணை சிக்கல்

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த முல்லை பெரியாறு அணை உத்தரவை ஏற்க மறுக்கிறது.

3 comments :

  1. முல்லைபெரியார் உண்மை நிலை.
    நீ ஏமாதுதான் நம் இனம் ரத்தகண்ணீரில் மீதக்கிறது............
    போதும்மப்பா உன்தூக்கம்.
    http://rmy-batcha.blogspot.com/2011/11/blog-post_27.html

    ReplyDelete
  2. nationalizing and linking the all indian rivers .

    ReplyDelete
  3. Thanks Princess,

    It's a long time issue we are speaking, but we haven't got it still, Hope it will never happen

    ReplyDelete

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf