சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா

"சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இதை அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த முடிவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணவப் போக்கை கண்டித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குமுறலை அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது அங்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தன்னிச்சையான முடிவு எடுப்பதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

4 கோடி பேர் வேலைக்கு அபாயம்: நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கின்றனர். மேலும் 4 கோடி பேர், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இவர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. வேலைவாய்ப்பு பறிபோகும்.நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே, அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள, நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சில பெரிய வர்த்தக அமைப்புகள், தங்கள் எதிர்கால பணப்புழக்கத்திற்கு வழி தேட கண்டுபிடித்த செயலாகக் கருதலாம்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மத்திய அரசு உடனடியாக இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாயாவதி காட்டம் : லக்னோ: "சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf