Why this Negligence Towards Tamils: முல்லைப் பெரியாறு: ஏன் இந்த ஓரவஞ்சனை - தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா?

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.

நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.

<h1>கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?</h1>

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு - பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் காணக் கிடைக்கிறது.


.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் kerala பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.

மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf