எகிறும் பணவீக்கம்: என்னதான் தீர்வு?


தொடர்ந்து பல வருடங்களாகப் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு பக்கம் வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது மத்திய ரிசர்வ் வங்கி. இன்னொரு பக்கம் பணவீக்கத்தை உயர்த்தும் நடவடிக்கையாக பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது அரசாங்கம். பணவீக்கப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? எப்படி இதை குறைப்பது என சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.

''தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்குப் பணவீக்கத்தை எப்படி கட்டுப் படுத்துவது என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அதிகாரி களுக்கும் இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. பலமுறை வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகும் பணவீக்கம் குறையவில்லை என்றால், அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்காமல் மீண்டும் மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தி என்ன பிரயோஜனம்?

சரி, பணவீக்கத்தைக் குறைக்க ஏன் வட்டி விகிதங் களை உயர்த்த வேண்டும். மக்களிடையே பணம் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரு பொருளை எளிதாக வாங்குகிறார்கள். அதிக நபர்கள் ஒரு பொருளுக்குப் போட்டி போடும்போது அதன் விலை உயர்கிறது. பணம் இருக்கும்போது வீடு, கார், வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவார்கள்.

இந்த சமயத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தினால், மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப் படும். அதனால், அவர்கள் தங்களது தேவையை தள்ளிப் போடுவார்கள். கடனுக்கான வட்டி அதிகரிக்கும்போது டெபாசிட்டுக்கான வட்டியும் அதிகரிக்கும்.  இதனால், கைவசம் இருக்கும் பணத்தை வங்கியில் முதலீடு செய்வார்கள். இதன் காரணமாக பொதுமக்களிடத்தில் பணப்புழக்கம் குறையும். பொருளின் விலையும் குறையும் என்பது பொதுவான லாஜிக்.

இந்த லாஜிக் சில வருடங் களுக்கு முன்பு வரை கச்சிதமாகச் செயல்பட்டது உண்மைதான். ஆனால், இப்போது அந்த டெக்னிக் உதவுகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும்.

முதலாவது, இன்றிருக்கிற நிலைமையில் நிலம் வாங்கி வீடு கட்டுவது வீண் என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார் கள். அந்தளவுக்கு நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. அதனால் ஒரு சதவிகித, இரண்டு சதவிகித உயர்வுக்கு எல்லாம் மக்கள் கவலைப்படுவதில்லை.
இரண்டாவது, பொருட் களின் விலை உயர்வதற்குப் பணப்புழக்கம் மட்டும் காரணமல்ல. பொருட்களின் உற்பத்தி குறைவதும்கூட ஒரு காரணம். இது இல்லாமல் அதிகார வர்க்கம், ஊழல் போன்றவையும் பொருட்களின் விலை ஏறுவதற்குக் காரணமாக இருக்கும்போது வட்டி விகிதத்தை உயர்த்தினால் போதும் என்று நினைப்பது, கேன்சரை குணப்படுத்த பாரசிட்டமால் மருந்தை டாக்டர் எழுதித் தருகிற மாதிரி.

சரி, என்ன செய்தால் இந்த பணவீக்கம் குறையும்?

பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துவது கூடாது. பெட்ரோல் விலையில் பாதிக்குப் பாதி மத்திய மாநில அரசுகளின் நேரடி மற்றும் மறைமுக வரிகள்தான் இருக்கிறது. ஒன்று, இந்த விலைகளைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது மாற்று எரிபொருளையாவது கண்டுபிடிக்க வேண்டும்.

முன்பேர வர்த்தகத்தை (கமாடிட்டி சந்தை) தடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு இந்த வர்த்தகமும் காரணம்.

பொருளாதாரம் பற்றிய அடிப்படை கொள்கைகளை நாம் மாற்ற வேண்டும். இல்லை எனில் பணவீக்கத்தை நம்மால் குறைக்கவே முடியாது.

உலகில் இருக்கும் எந்த பிரதமருக்கும் மன்மோகன் சிங் அளவுக்குப் பொருளாதாரம் தெரியாது.  அந்த நாடுகளில் எல்லாம் விலைவாசி கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால், மிகப் பெரிய  பொருளாதார மேதை என்று அறியப்பட்ட மன்மோகன் சிங் மட்டும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இதற்கு காரணம், பொருளாதார வல்லுநர்கள் என்கிற பெயரில் அவருடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான். உதாரணமாக, ''வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இந்தியாவின் பணவீக்கம் குறையும்'' என்கிறார் நிதி அமைச்சகத்துக்கு ஆலோசகராக இருக்கும் கவுசிக் பாசு. வால் மார்ட் இந்தியாவின் நான்கைந்து நகரங்களில் மட்டும் கடை அமைப்பதால் மட்டுமே பணவீக்கம் எப்படி குறையும்? இது மாதிரியானவர்களை மாற்றினால்தான் பணவீக்கம் குறையுமோ என்னமோ?

Thanks: Nanayam Vikatan

1 comment :

  1. if the BLACK MONEY come back to india, inflation will be controlled.

    ReplyDelete

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf