![]() |
விவசாய புரட்சி |
'விவசாயமும் லாபகரமான விஷயம்தான்' என்பதை உரக்கச் சொல்லப்போகும் இந்தத் தொடர் ஒருவழிப் பாதையல்ல... அதனால்தான் விவாதத் தொடர் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். இங்கே நாங்கள் முன் வைக்கும் விஷயங்கள்... திட்டங்கள் எல்லாம் முடிந்த முடிவல்ல.
இந்தத் விவசாய புரட்சி திட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எழுதலாம். எதிர்கருத்துக்கள் இருந்தாலும் எழுதலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கடைசியில் வெற்றிகரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த வகையிலாவது விவசாயம் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கியே நாம் கைகோப்போம்.
''ஓரு பக்கம் ஷேர் மார்க்கெட்ல சென்செக்ஸ் பத்தாயிரம்... பதினையாயிரத்தை தாண்டி சீறுதுங்கறாங்க. அதனால இந்திய பொருளாதாரமே பொங்கி பெருகுதுங்கறாங்க.
இன்னொரு பக்கம் இந்த பாழாப் போன விவசாயி செத்து சுண்ணாம்பா போயிட்டுருக்கான். இந்த நாட்டோட 'முதுகெலும்பு'னு சொல்லப்படுற விவசாயியை காப்பாத்த முடியாத அந்தப் பொருளாதாரம், அப்ப யாருக்காக மட்டும் பொங்கிக்கிட்டிருக்கு?''
உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளையட்டி சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விவசாய பிரதிநிதி ஒருவர் ஆதங்கத்துடன் இப்படி வெடித்தார்!
அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு... 'சுருக்' என்று தைத்தது. காரணம்... அந்தக் கேள்வியில் இருந்த நியாயங்கள் அத்தனை வலுவானவை.
அன்றைய தினம் அப்படி பொங்கிய விவசாயி, கோவைக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்திருந்தவர்.
அவர்தான் என்றில்லை. மதுரைக்கு மேற்கே... நெல்லைக்கு நெருக்கத்தில்... தஞ்சாவூரை தாண்டி... என தமிழகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் விவசாயிகள் இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருக் கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
உலக அளவில் இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு அடிப்படைக் காரணம், உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுதான். 'ஒரு நாடு பொருளாதார வல்லரசாக வேண்டுமென்றால், உலக அளவில் விவசாயத்தில் தலைசிறந்த நாடாக இருக்க வேண்டும்' என்பது எழுதப்படாத விதி. உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பது நாட்டின் இறையாண்மைக்கு மிகமிக முக்கியம்!
பொக்ரான் அணுகுண்டு பரிசோதனைக்குப் பின் இந்தியாவின் மீது பொருளாதார ரீதியில் சில தடைகள் விதிக்கப்பட்டபோதும் நாம் அதைச் சட்டை செய்யவில்லை. காரணம், உணவு மற்றும் இதர துறைகளில் நாம் பெற்றிருந்த தன்னிறைவே நமக்குப் பெரிய பலமாக இருந்து நம்மைக் காப்பாற்றியது. நாடு சுதந்திரம் பெற்றபோது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP- Gross Domestic Product ) விவசாயத்தின் பங்கு கணிசமானது. இன்றோ... பாதாளம் நோக்கிப் பாய்கிறது.
விவசாயத்தையே நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. பூர்வீகமாக விவசாயம் செய்து வந்த பல குடும்பங்களின் இன்றைய தலைமுறையினர் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் மோகத்தோடு நகர்புறங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் படையெடுக் கின்றனர். காரணம்... 'விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இல்லை' என்ற எண்ணம் பரவலாக வேர் விட்டதுதான்.
'நம் ஜீவனே விவசாயம்தான்... அதிலும் லாபம் பார்க்க முடியும்' என்று அவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு போதுமான ஆட்கள் இல்லை. அரசுத் தரப்பிலும் பெரிதாக முயற்சிகள் இல்லை. ஆனால், அதே அரசு இன்றைக்கு 'செஸ்' ( SEZ ) எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ( Special Economic Zones ) அமைப்பதற்காக விவசாய நிலங்களை வளைத்துக் கொடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் துடிப்பில் பத்தில் ஒரு பங்கை விவசாயத்தின் பக்கம் காட்டினால் போதும்... நம் விவசாயம் பிழைத்துக் கொள்ளும்.
அரசுத்தரப்பில் ஏகத்துக்கும் மரியாதை காட்டப்படும் 'செஸ்' என்பது கடலளவு விஷயங்கள் நிறைந்தது. இங்கே புல் நுனியளவுக்கு பார்த்துவிட்டு மேலே தொடர்வோம்.. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமையப் போகின்றன.
எந்த வித இடர்பாடுமில்லாமல் பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணியை பெருக்குவதுதான் இதன் அடிப்படை சித்தாந்தம். இந்தத் தொழிற்சாலைகளுக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை, லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை, உள்நாட்டில் பொருட்கள் வாங்கினால் அதற்கு வரி விலக்கு, சேவை வரி இல்லை. வருமான வரி விலக்கு, 100 சதவிகிதம் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதி என்று சலுகை மழை பொழிந்து கொண்டிருக்கிறது அரசு.
'அப்பப்பா எத்தனை எத்தனை சலுகைகள். இதேபோல விவசாயத்துக்கும் சலுகைகளைக் கொடுத்தா எங்க தோட்டமெல்லாம் பணத்தோட்டமாகிவிடுமே!' என்ற விவசாய புரட்சி யோசனை உங்களுக்குள் ஓட ஆரம்பித்து விட்டதா.... அதைத்தான் நாங்களும் சொல்ல வருகிறோம். 'செஸ்' கோட்பாடுகளை அப்படியே படியெடுத்து, விவசாயத் துறையில் புகுத்திப் பார்த்தால். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது எப்படி?
வரும் தலைமுறையினரை விவசாயத் தொழிலில் ஈடுபடச் செய்வது எப்படி?
மாணவர்களை விவசாய பட்டப் படிப்புகளுக்கு போட்டி போட வைப்பது எப்படி?
எல்லோருமே விவசாயத்தில் காலடி வைக்கும் நிலையை உருவாக்குவது எப்போது?
மியூச்சுவல் ஃபண்டு, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் என்று முதலீடு செய்பவர்களை எப்படி விவசாயத்தில் முதலீடு செய்ய வைப்பது?
இது போன்ற கேள்விகளுக்கு விடை எளிதாக கிடைத்துவிடும்.
'செஸ்' எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, 'செஸ்' ( SAZ ) என்ற பெயரில் சிறப்பு வேளாண் மண்டலங்களை ( Special Agricultural Zones ) உருவாக்குவது என்பது கிட்டத்தட்ட கூட்டுப்பண்ணை விவசாயம் மாதிரிதான்.
இது நம்ம நாட்டுக்கு மிகமிக பொருத்தமானதும் கூட... என்று ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே உடுமலை நாராயணகவி, சினிமாவில் பாட்டாக எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
விவசாய புரட்சி தொடரும்
Thanks to Pasumai Vikatan
No comments :
Post a Comment