How to start a Self Business in tamil: சுயதொழில் தொடங்குவது எப்படி - Part 1

How to start a Self Business in tamil, சுயதொழில் தொடங்குவது எப்படி

இளம் தலைமுறையினருக்கு தொழில் செய்ய ஊக்குவிக்கவும், வழிக்காட்டவும் ஏதேனும் செய்தல் வேண்டும் என்ற கழுகின் பார்வையை குழுமத்தோழர் கொக்கரக்கோவிடம் சமர்ப்பித்த உடனேயே இதை ஒரு தொடராகவே எழுதலாமே என்று ஒரு உத்வேகத்தோடு எழுதிய கட்டுரையின் முதல் பாகம் இதோ...

பத்தும் பத்தாமல் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளியிலிருந்து, கைக்கும் வாய்க்குமே சம்பளம் சரியாக இருக்கிறது என அங்கலாய்க்கும் குமாஸ்தா முதற்கொண்டு, மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் (அல்லது கிம்பளமாக) வாங்கும் கணவான்கள் வரை எல்லோருக்குமே, எந்தவொரு  தொழில்முனைவோரைப் பார்த்தாலும் சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும்!

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லோருக்குமே போதை உண்டாக்கக் கூடிய காரணம் என்றால் அது 'முதலாளி' என்ற அந்த ஒற்றைவார்த்தைதான். எத்தனை லட்சங்களை மாத சம்பளமாக வாங்கினாலும் தொழிலாளிதான், ஆனால் மாதம் ரூபாய் பத்தாயிரம் நிகர லாபமாகசம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில் முனைவர் கூட 'முதலாளி'  தான்! குறைந்தது இரண்டு, மூன்று பேருக்காவது சம்பளம் கொடுப்பார், அவர் லீவ்போட்டால் யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ஒரு மாத சம்பளக்காரர், சுயதொழில் தொழில் முனைவோர் ஆக ஆசைப்படுவதற்கான காரணங்களை.

உண்மை தான், ஆனால் வெளியில் பார்ப்பதற்கு முதலாளிப் பட்டம், சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்து, வங்கிகள் முதற்கொண்டு பல பொதுநிறுவனங்களிலும், மற்ற பொதுமக்களுக்கு இல்லாத முன்னுரிமை மற்றும் மரியாதை.

அந்தந்த ஊர் பொது காரியங்களில் கௌரவம் மற்றும்தலைமை பொருப்பு... இப்படி பொதுமக்கள் பலரும் பொறாமைப்படக் கூடிய பல காரணிகளை தன்வசம் வைத்திருந்தாலும், சாதாரண சிறுவியாபாரியிலிருந்து, பெரிய குழுமங்களின் தலைவர்கள் வரையிலான பெரும்பான்மையான தொழில் முனைவோர்களுக்கு, ஒவ்வொரு நாளுமே சிவ ராத்திரி தான்.

அன்றைய பொழுதின் கடமைகளை எல்லாம் ஒருவாறாக முடித்து விட்டு, இரவு உறக்கத்திற்காக படுத்தவுடன் தான் அடுத்த நாள் அஜெண்டாவெல்லாம் பட்டியலாக கண்முன்னே நிற்கும்.

அனேகமாக எல்லா சுயதொழில் தொழில் முனைவோருக்குமே அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது, மறுநாள் தேதியில் கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிக் காசோலைகளாகத் தான் இருக்கும்! அடுத்ததாக இருப்பது ஒரு மாதமாகியும் நிலுவை பாக்கியை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள். இவர்கள் மட்டும் சரியான தேதிக்கு செட்டில் செய்திருந்தால்,  நாளை வரும் காசோலைகளைப் பற்றி என்ன கவலை?... என்று கேள்வி மனதில் எழும்போதே தூக்கம் கண்ணுக்கெட்டா தூரத்திற்கு சென்றிருக்கும். பட்டியலின் முதல் விஷயத்திற்கே இப்படி என்றால், அடுத்தடுத்த காரியங்களுக்கு மனம் செல்லும் பொழுது... அது சிவன் ராத்திரியாகியிருக்கும்!

ஆனால் மறுநாள் காலையில், அவரிடம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நல்ல வேலையாகப் பார்த்துக் கொண்டு மாசா மாசம் ஒன்னாம் தேதி பிறந்தால் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருக்கலாமே? என்று கேட்டுப் பாருங்கள்..! முதலில் கொஞ்சம் கோபமாகப் பார்த்து விட்டு, பிறகு நம்மைப் பாவமாகப் பார்த்து, நக்கல் தொனியில் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போவார் பாருங்கள்... நம் காலில் கிடப்பதைக் கழட்டி நம் தலையிலேயே அடித்துக் கொள்ளத் தோன்றும்!

அப்படியானால் என்ன அர்த்தம்? சுயதொழில் செய்வதில், தினப்படியாக நிறைய கஷ்டங்கள் இருந்தாலும், ஒரு மனிதனின் அடிமனது சந்தோஷப்படும் காரணிகளான பாராட்டு, அந்தஸ்து, கௌரவம்... இத்தியாதிகள் கிடைப்பதுடன், லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளையும் தொலைநோக்கில் அந்த சுயதொழில் உருவாக்கிக் கொடுக்கும்..., கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை ஒரு தொழில் முனைவோருக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக சுயதொழில் ஒன்றை செய்து, படிப்படியாக வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், அல்லது தான் இருக்கும் துறையில் ஓரளவு சாதித்து விட்டு, கொஞ்சம் பணத்தோடு சுயதொழிலில் இறங்கி வெற்றிக் கொடி நாட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும், தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து செல்ல ஒரு நல்ல நடைபாதையை அமைத்துக் கொடுக்கும் விதத்தில் இத்தொடர் அமையும் என்ற உறுதிமொழியோடு அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.

Thanks to: http://www.kazhuku.com/

How to start a Self Business in tamil: சுயதொழில் தொடங்குவது எப்படி - Part 2

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf