Business Selection in Tamil for entrepreneurs: நீங்கள் எந்தத் தொழிலுக்கு/பிசினஸ் ஏற்றவர்?


Business Selection Tamil
Business Selection in Tamil for entrepreneurs:
 Business Selection in Tamil நீங்கள் எந்தத் தொழிலுக்கு/பிசினஸ் ஏற்றவர்?
'சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஒரு பிசினஸ்மேனாக வலம் வரவேண்டும் என்பது என் மனத்தில் இருக்கும் நீண்டநாள் ஆசை. சொந்தத் தொழில் தொடங்குவதற்கு கையில் ஓரளவுக்கு பணமும் இருக்கிறது. 

ஆனால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. நல்ல லாபம் கிடைக்கிற மாதிரி, எனக்கு தோதான ஒரு பிசினஸை சொல்ல முடியுமா?’

இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டபின்னும் பதில் கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர்.

ஒருகாலத்தில் பிசினஸ் என்றாலே அதில் இறங்க பலரும் பயப்படுவார்கள். ஆனால், இன்றைக்கு நிறைய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைந்தது; பிசினஸ் நடைமுறைகள் ஓரளவுக்கு எளிதாக இருப்பது என சமீபத்தில் நடந்த பல மாற்றங்களின் விளைவாக, இன்றைய இளைஞர்களின் கவனம் பிசினஸ் பக்கம் திரும்பியிருக்கிறது.

என்றாலும், தனக்கான தொழில் எது என்பதைத் தேர்வு செய்வதில் பலருக்கும் பலவிதமான குழப்பம். ஏற்கெனவே தெரிந்த தொழிலை செய்வதா, புதிதாகக் கற்றுக்கொண்டு செய்வதா என பல கேள்விகள். உங்களுக்கான தொழிலை நீங்கள் கண்டுபிடிப்பது எப்படி?

சொந்தத் தொழில் செய்வதற்கான விருப்பமுள்ளவர்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வோம்:

1. முன்பின் வேலைக்குச் செல்லாத வர்கள் அல்லது தொழில் அனுபவம் சிறிதும் இல்லாதவர்கள் (இருபது வயதில் உள்ள இளம் வயதினர்).

2. சில ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் (முப்பது/நாற்பது வயதில் இருப்பவர்கள்).

3. ஓய்வுக்காலம் வரை வேலையில் இருந்தவர்கள் (ஐம்பது / அறுபதுகளில் இருப்பவர்கள்).

முதலில், இளம்வயதினரைப் பார்ப்போம்.

இந்த வயதினருக்கு அதிக முதிர்ச்சி இருக்காது. ஆகவே, ஓரிரு நண்பர்களுடன் அல்லது சற்று முதிர்ச்சியான நபர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தால், தொழிலைக் கற்றுக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இவர்கள் கல்லூரியில் படித்தபோது ஏதேனும் புராஜக்ட் செய்திருந்தார்களேயானால், அதைச் சார்ந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

இளம் வயதினர் என்பதால் சற்று புதிய தொழில்நுட்பம் உள்ள தொழில்களை அல்லது ஆராய்ச்சி சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கலாம். வேறு தொழிலதிபர்களுடன் ஒப்பிடும்போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் இவர்களிடம் இருக்கும் மிகப் பெரிய அனுகூலம் ஆகும்.

எந்தத் தொழில் செய்ய விருப்பம் என முடிவு செய்துவிட்டால், ஓராண் டாவது அந்தத் தொழிலில் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெறுங்கள். அனுபவம் இல்லாமல் எந்தத் தொழிலிலும் இறங்கி ஜெயிக்க முடியாது.

தொழில் ஆர்வமுள்ள இளம் வயது வாலிபர்களுக்கு எந்தத் தொழிலைப் பார்த்தாலும் அதைச் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தச் சமயம் ஆர்வத்தை ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டு யதார்த்தத்தில் தனக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என நன்கு யோசிக்க வேண்டும்.

இந்த வயதினருக்குத் தொழில் அனுபவம் இருக்காது என்பதால், புதிதாக எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் இறங்கலாம். ஏனென்றால், எந்தத் தொழில் என்றாலும் இவர்களுக்குப் புதிய ஆரம்பம்தான். இவர்கள் முதலில் எந்தத் துறையில் நல்ல வாய்ப்பு உள்ளது, எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் மற்றும் நல்ல லாபம் இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

அந்தத் துறை தங்களுக்குப் பிடிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அல்லது தங்களால் அந்தத் துறையை நேசிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
பொதுவாக, இந்த வயதினரிடம் அதிகமாகப் பணம் இருக்காது என்பதால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களை நாடலாம். ஐ.டி, லாஜிஸ்டிக்ஸ், புரோக்கிங், டிரேடிங், சுற்றுலா திட்டமிடல், சர்வீஸ் மையங்கள் போன்ற சேவைத் தொழில்களை ஆரம்பிக்கலாம்.

சிறிய வயது என்பதால் அவர்களால் நன்றாக அவர்களின் சேவைகளை/ உற்பத்தி செய்யும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

இனி, இரண்டாவது தரப்பினரைப் பற்றிப் பார்ப்போம்.

இவர்கள் சில ஆண்டு மட்டுமே வேலைக்குச் சென்றவர்கள். வேலை பிடிக்காமலோ அல்லது வேலை திடீரென்று போய்விட்டதாலோ அல்லது தொழில் செய்வதன் மீது உள்ள அளவிட முடியாத ஆர்வத்தினாலோ அல்லது இரண்டாவது வருமானம் தேடியோ தொழில் செய்ய முன்வருவார்கள்.
இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தொழில் பற்றிய ஞானம் ஓரளவுக்கு இருக்கும்.

அதன் நெளிவுசுழிவுகள் புரிந்திருக்கும். ஓரளவுக்கு முதிர்ச்சியும் வந்திருக்கும். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைப் பொறுத்து, அந்தத் தொழில் பற்றிய விவரங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகவே, இந்த அறிவை வைத்து அதே தொழிலையோ அல்லது அது சார்ந்த தொழிலையோ ஆரம்பிப்பதுதான் உசிதமாக இருக்கும்.

இவர்கள் ஏற்கெனவே பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்க லாம். அந்த நிறுவனத்திலிருந்து விலகியபின் அந்த நிறுவனத்துடன் நல்ல உறவு வைத்திருக்கலாம். அப்படி  இருப்பவர்கள், அந்த நிறுவனம் தரும்   கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யலாம். அந்த நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வாங்கித்தரலாம்.

பெரிய தொழில் நிறுவனங்களில் இன்ஜினீயராக வேலை பார்த்தவர்கள், தன்னோடு நன்கு பழகிய, திறமைசாலி நண்பர்களுடன் சேர்ந்து, புதிதாக தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே செய்த தொழிலோடு உங்களுக்கு எந்தளவு உறவு உள்ளதோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றி உறுதி!

இனி, மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். நான் ஓய்வுபெறுகிற வரை ஆட்டோமொபைல் துறையில் அல்லது வங்கியில் வேலை செய்தேன் என்று சொல்பவர்கள், அந்தத் துறை சார்ந்த தொழிலை ஆரம்பிப்பதுதான் சிறந்தது.

காரணம், முன்பின் தெரியாத ஒரு தொழிலை இந்த வயதில் புதிதாகத் தெரிந்துகொண்டு செய்வதைவிட, ஏற்கெனவே நன்கு தெரிந்த தொழிலில் ஜெயிப்பது சுலபம். தவிர, வயது அதிகம் என்பதால், முற்றிலும் புதிய தொழிலில் நுழைந்து ரிஸ்கும் எடுக்க முடியாது.

உதாரணமாக, வங்கியில் வேலை பார்த்தவர்கள் வங்கிகளுக்கு ஆடிட்டிங் செய்துதரலாம் அல்லது லோன் பிராசஸிங் ஏஜென்சி நடத்தலாம். கடன் ஆலோசகராகத் தொழில் செய்யலாம். இப்படி பலவிதமான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து, அந்தத் தொழில் செய்து எளிதில் ஜெயிக்க முடியும்.

ஃப்ரான்சைஸிங் பிசினஸ் (Franchising)

என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்கிறவர்கள்   ஃப்ரான்சைஸிங் (Franchising)   முறையின் மூலம் தொழில் துவங்கலாம். இதில் ஃப்ரான்சைஸர் (Franchisor) தொழில் பற்றிய நுணுக்கங்கள், தொழிலுக்குத் தேவையான தளவாடங்கள், பொருட்கள் போன்ற அனைத்தையும் தொழில் ஆரம்பிப்பவருக்குத் தந்துவிடுவார். இதற்கான கட்டணத்தையும், கமிஷனையும் தந்துவிட்டு, வியாபாரத்தைப் பெருக்க வேண்டிய வேலை உங்களுடையது.

ஃப்ரான்சைஸிங் மூலம் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, உங்களுக்குத் தோதான ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்து ஜெயிக்கலாம்!

உங்களுக்கான தொழிலை கண்டுபிடிக்கும் சூட்சுமம் இப்போது புரிந்ததா? Business Selection in Tamil நீங்கள் எந்தத் தொழிலுக்கு/பிசினஸ் ஏற்றவர்?

Subscribe for More Business and How to Start a Business in Tamil Articles.

Our Other Articles Related to Self Business.



பால் பண்ணை துவங்க வழி முறைகள்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf