We the Tamilians will never be blessed? | தமிழக மக்களுக்கு விமோசனமே இல்லை

தமிழக மக்களுக்கு விமோசனமே இல்லை என்பது தான் நான் அறிந்த உண்மை. 2G ஊழல், குடும்ப அரசியல் செய்த திமுகவை வீட்டுக்கு அனுப்பி..,ஆனால் அந்த இடத்தில் அதிமுகவை இருக்கச் செய்தார்கள் மக்கள்.

ஆனால் தமிழக மக்களுக்கு எதாவது நல்லது செய்வார் என நினைத்த நமக்கு, ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக செய்த சில நல்ல விடயங்களைக் கூட கெடுப்பதிலேயே முனைப்புக் காட்டுக்கின்றது இந்த புதிய அரசு. இதனைத் தட்டிக் கேட்க நாதியற்ற ஒரு எதிர்க்கட்சி தமிழகத்தில் அமர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதிமுக அரசு முதலில் சட்டசபையில் கைவைத்தது.

சரி என விட்டுவிட்டால், அதனைத் தொடர்ந்து சமச்சீர்க் கல்வியில் கைவைத்தது. சரி புதிய பாடத்திட்டத்தில் திமுக தேவை இல்லாதவைகளை இணைத்தார்கள் என்றக் காரணம் கூறப்பட்டு,அதனை ஓராண்டுக்குத் தள்ளி வைத்தார்கள். சரி பொறுமையாக இருப்போம் என நினைத்திருந்தோம்.

ஆனால் இந்த புதிய அரசு அண்ணாப் பல்கலைக் கழகத்திலும் கை வைக்கின்றது. நெடுங்காலமாக தொழில்நுட்பக் கல்விகளுக்கு அண்ணாப் பல்கலைக் கழகமே முதன்மையாகவும், பிற 486 பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழே இயங்கி வந்தது. ஆனால் கடந்த திமுக அரசில் தமிழகத்தில் ஐந்து அண்ணாப் பலகலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்குத் தனி துணை வேந்தர்களும், அவை சார்ந்த பொறியியல் கல்லூரிகள் அவற்றின் கீழும் வந்தன.

அது ஒரு நல்லத் தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. இந்த நாட்டில் பல்வேறு அரசு பல்கலைக் கழகங்கள் தேவைப்படுகின்றன. மேல் நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. இவை மாணவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அறிஞர்கள் உணர்வார்கள்.

கோவை, திருச்சி, திருநெல்வேல், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் அண்ணாப் பலகலைக் கழகங்கள் தனித்தனியே இயங்கி வருகின்றன. இவைக் காலப் போக்கில் முற்றிலும் தனிப் பல்கலைக் கழகங்களாக வளர்ச்சிப் பெற வாய்ப்புள்ளது.  ஆனால் அவற்றின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்புகளைப் பெருக்கு,தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்தி முன்னேற்றம் காண்பதற்குப் பதிலாக, தற்போதைய அரசு இந்தப் பல்கலைக் கழங்களை அனைத்தும் ரத்து செய்து, பழையப் படியே சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் அனைத்துப் 486 பொறியியல் கல்லூரிகளைக் கொண்டு வர ஜூன் 3-ம் தேதி சட்டசபையில் அறிவித்தனர்.

நிச்சயம் இது ஒரு துர்ப்பாக்கியமான நிலையாகும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அண்ணாப் பல்கலைக் கழகம் என்றழைத்தாதலேயே இவர்கள் மீண்டும் அனைத்தையும் ஒன்றிணைக்க முனைகின்றார்கள் எனத் தோன்றுகின்றது. சொல்லப்போனால் ஒரே அண்ணாப் பல்கலைக் கழகம் என்பதில் இருந்து ஐந்தாகப் பிரித்து அவற்றைத் தனித்தனிப் பல்கலைக் கழகமாக உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிக்கல் எனத் தெரியவில்லை. காலப் போக்கில் நம் தமிழ்நாட்டுக்கு அரசுப் பல்கலைக் கழகங்கள் மிகவும் அவசியம்.

சொல்லப் போனால் இந்த ஐந்துப் பல்கலைக் கழகங்களில் நான்கின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தரம் குறைவே என்றாலும் - அவற்றை மீண்டும் சென்னையின் கீழ் கொண்டுவருவதால் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை.

இந்தப் பல்கலைக் கழகங்களில் ஏற்கனவே பலர் படித்துப் பட்டம் பெற்றுவிட்டார்கள், திடிர் என இந்தப் பல்கலைக் கழகங்களை நிர்மூலம் ஆக்குவதனால், அவர்களின் நிலைமை என்னவாகும். தற்சமயம் படித்து வருபவர்களிடம் குழப்பமே விஞ்சும். அதே போல எதிர்காலங்களில் பல்வேறு மாணவர்களும் அரசுக் பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பும், இந்தப் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்தில் உயரவும் செய்யுமள்ளவா? அனைத்தையும் கெடுப்பது எவ்வகை நியாயம்.

அதே போல ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனியே பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன, இவற்றை மீண்டும் சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பதால் - அவர்களின் பாடத்திட்டங்கள் அனைத்தும் மாறுபடும், இது (Administration& Governance)பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

அது சரி! முன்னப் பின்னே கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோப் படித்திருந்தால் தான் படிப்பின் வலியும், கடினமும், தேவையும் புரியும்.

அதே போல இந்தப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் UGC-யிடம் நிதியத்துக்கு விண்ணப்பித்து உள்ளன, தற்போது இதன் அங்கீகாரங்களை இரத்து செய்தால், நிதிகள் நிறுத்தப்படும்,உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்புதல் தடைப் பெறும் என்பதுக் கூடவாத் தெரியாது.


அதே போல இந்தப் பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றோடு ஒப்பதங்களையும், ஆய்வு முயற்சிகளையும் ஏற்படுத்தியுள்ளன - அவை எல்லாம் என்னவாகும்.

அது சரி ! நான் ஒன்றைக் கேட்கின்றேன், அண்ணாப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்கின்றீர்கள். எம்.ஜீ.ஆர் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகங்களில் இருந்துப் பிரித்து உருவாக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக் கழகங்களை எல்லாம் மீண்டும் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு சேர்க்குமா இந்த அரசு ???

எனக்கு இந்த அரசின் கல்விக் கொள்கைகள் அனைத்தும் முட்டாள் தனமாகப் படுகின்றன. இது பல்வேறு கிராமப் புற மற்றும் பிந்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியோடும், வாழ்வோடும் விளையாடுவதுப் போன்று தோன்றுகின்றது.

சென்னையில் தான் அனைத்தையும் வைப்பீர்கள் எனில் சென்னை மட்டும் தான் தமிழ்நாடா ?கடந்த அரசானது தனித் தனி அண்ணாப் பல்கலைக் கழங்கள் உருவாக்கியப் போது அண்ணாப் பல்கலைக் கழகம் என்றுப் பெயரிடாமல் வேறு வேறு பெயர்கள் இட்டிருப்பின் பல குழப்பங்களையும் தவிர்த்து இருக்கலாம்.

பழைய அரசினைப் பழிவாங்குவதாக எண்ணி அப்பாவி ஏழை மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது சரியாகப் படவில்லை என்றேத் தோன்றுகின்றது.

தமிழகத்தில் நாம் இன்னும் விழிப்படையவில்லை எனில் - பிந்தங்கிய தமிழக மக்களின் கல்வி, வாழ்வு என்பது எட்டாக் கனியாகிவிடும் என்பேன்.

இந்தப் பிரச்சனைகளை மாணவர் அமைப்புகளும், பொதுநலவாதிகளும் கவனத்தில் எடுத்து அரசினை நிர்பந்தம் செய்யும் திட்டங்களில் இறங்குவது மிகவும் நல்லது என நமக்குப் படுகின்றது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf