D.M.K & Congress | தீ.மு.க வும் காங்கிர‌சும், தி.மு.க அறிவிப்பு

தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் என்ற அறிவிப்பு வெளியானதும், அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர் நெருக்கடிகளால், துவண்டு போயுள்ள தி.மு.க., மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இந்த கூட்ட முடிவில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என தி.மு.க., தலைமை அறிவித்திருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் இப்போது திடீரென துவங்கியதில்லை. தி.மு.க., ஆட்சியிலிருந்தபோதே, பாத யாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசார், வழி நெடுகிலும் தி.மு.க ஆட்சியை விமர்சித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன் உட்பட பலர், எதிர்க்கட்சிகளை விட கடுமையாக தி.மு.க.,வையும், கருணாநிதி குடும்பத்தையும் விமர்சித்தனர்.இதை தி.மு.க., கண்டு கொள்ளவில்லை. தேர்தலின் போது, கூடுதல் சீட் கேட்டு, காங்கிரஸ் கட்சி அடம்பிடித்தது. உடனே, மத்திய அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., தலைமை அறிவித்தது. ஆனால், மறுநாளே காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க., சரணடைந்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை வாபஸ் பெற்றது. காங்கிரஸ் கட்சி கேட்ட இடங்களை வாரி கொடுத்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், ராஜா கைது செய்யப்பட்ட பின், மற்றவர்கள் கைதாவதை தடுப்பதற்காகவே, காங்கிரஸ் கட்சி இழுத்த இழுப்பிற்கெல்லாம் தி.மு.க., உடன்பட்டது. இந்த அடிகளுக்கெல்லாம் பேரிடியாய், சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.தேர்தல் முடிந்ததும், ராஜ்யசபா எம்.பி.,யும், கருணாநிதி மகளுமான கனிமொழி கைது செய்யப்பட்டார். குறைந்தபட்சம் அவர் கைதாவதையாவது, மத்திய அரசு தடுத்திருக்கலாம் என, தி.மு.க., தலைவர் மட்டுமின்றி, தொண்டர்களும் நினைத்தனர்.காங்கிரஸ் கட்சியோ, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதால், நாங்கள் தலையிட முடியாது என கூறி விலகிக் கொண்டது. ராஜா, கனிமொழி ஆகியோரை தொடர்ந்து, தற்போது தயாநிதிமாறனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நெருக்கடி, தி.மு.க.,வை நிலைகுலையச் செய்துள்ளது.மகள் கனிமொழி சிறையில் வாடுவது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பதற்காக தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூடியது. எனவே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்ட முடிவு, "சப்'பென முடிந்து விட்டது.இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்து மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும் போது, "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடும்படி, மத்திய அரசை நாங்கள் நிர்பந்திக்கவில்லை' என கூறினார்.தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து நிருபர்கள் கேட்ட போது, கருணாநிதி கடுமையாக கோபப்பட்டார்.

"சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது குறித்தெல்லாம் கேட்காமல், கனிமொழி வழக்கை மட்டும் பேசுகிறீர்களே' என எரிந்து விழுந்தார். "காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதே' என கேட்ட போது, "தி.மு.க., தோல்விக்கு பார்ப்பனர்களே காரணம்' என்றார்."மத்திய அரசிலிருந்து விலகினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சந்திப்பது சிரமமாக இருக்கும் என்பதாலே, மத்திய அரசிலிருந்து விலகவில்லை' என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், கருணாநிதியின் குடும்பத்திற்கும், கட்சிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியை விட்டுக் கொடுக்காமல் இப்போதும் கருணாநிதி பேசியது, தி.மு.க., தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்' என, நம்மை நினைக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக தி.மு.க., தொண்டர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர்.

Thanks : Dinamalar - News Source - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=256007

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf