Smoking & Heart | புகை பிடித்தலும், இருதயமும் | புகை பிடிப்போருக்கு மாரடைப்பு

மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு

நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf