தனியார் மின்உற்பத்தி தொழிற்சாலைக்கான பணிகளை தடுத்து நிறுத்திய மீனவர்கள்!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மற்றும் பட்டினமருதூர் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தனியார் மின் உற்பத்தி ஆலையினால் அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் கடல்நீரை நன்னீராக்கும் பணிகளை மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி., லாரிகள் மற்றும் ஊழியர்களையும் அப்பகுதியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.


தூத்துக்குடி மாவட்டம் மேலமருதூர் கிராமத்தில் கோல் அண்ட் ஆயில் குழுமம் சுமார் 7000 கோடி செலவில் 2800 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் கோஸ்டல் எனேர்ஜென் பவர் பிளாண்ட் என்ற தனியார் மின் உற்பத்தி நிலையம் துவங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கம்பெனிக்கான பெரும் முதலீடு இ.டி.ஏ. சலாவுதீன் குழுமத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனத்துக்கு தேவையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தக் கம்பெனியில் இருந்து மணிக்கு 28240 க.மீட்டர் கடல் நீர் எடுக்கப்பட்டு பின்னர் 20934 கனமீட்டர் கழிவு நீர் மீண்டும் கடலில் விடப்படும். இதில் உப்புத்தன்மை, வெப்பம், கசடுகள், வேதிப்பொருட்கள் எல்லாம் கலந்து வரும். அப்போது அரிய உயிரினங்கள் வாழக் கூடிய தேசியக் கடல் வளப் பூங்காவான மன்னார் வளைகுடா பாதிப்பை சந்திக்கும். கடலுக்குள் குழாய் பதிப்பதால் மீனவர் படகுகளும், வலைகளும் அதில் சேதமடைய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் பட்டினமருதூர் கிராமத்தில் ஜெட்டி அமைக்கும் போது ஏற்கனவே இறால் பண்ணைகளால் பாதித்த அந்தப் பகுதி மேலும் பாதிப்படையும் என்று கூறி அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தருவைக்குளம் மற்றும் பட்டினமருதூர் கிராமத்திற்கு இடைப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் கூடிய சுமார் நூறு மீனவர்கள், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்வளம் பாதிக்கபடுவதால் அனைத்து பணிகளையும் உடனே நிறுத்துமாறு கோஷமிட்டனர்.
பின்னர் மீனவர்களே நேரடியாக களமிறங்கி அனைத்து இயந்திரங்களையும் செயல்படவிடாமல் நிறுத்தினர். கடற்கரையில் இருந்த நான்கு ஜே.சி.பி., பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் அங்கிருந்த பணியாளர்களை விரட்டியடித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அமைதிப்படுத்தி கிராமத்திற்குள் அழைத்து சென்று கூட்டம் நடத்தினர்.
தருவைக்குளம், சிப்பிகுளம், பட்டினமருதூர், வெள்ளப்பட்டி, தூத்துக்குடி வடக்கு பகுதி மீனவர்கள் கூட்டம் மீன்பிடி துறைமுக மேலாண்மை மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சூ.அன்றோ பிரின்சி லைலா, ச.அருணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலோர மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன், வடபகுதி நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவரும் தருவைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவருமான ஜெயபால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர் சங்க செயலாளர் ஜான்சன், தாளமுத்துநகர் ஜெபமாலை, வெள்ளப்பட்டி கென்னடி, சிப்பிகுளம் சகாயம், பிச்சையாவாஸ், பட்டினமருதூர் மஜீத், இப்ராகிம், கருப்பசாமி, ஆறுமுகம், சுடலைமணி உள்ளிட்ட முக்கிய மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், "கோஸ்டல் எனேர்ஜென் அனல்மின் நிலைய திட்டம் மக்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடலுக்குள் பைப்புகளைப் பதித்து அதன் மூலம் கடல் நீரை அனல் மின் நிலையத்திற்கு பயன்படுத்தவும், பயன்படுத்திய பின் கழிவு கலந்த நீரை மீண்டும் கடலில் கலக்கவும் உள்ளனர். இக்கழிவு நீரினால் கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் இக்கடற்பகுதியானது பவளப்பாறைகள் மற்றும் இறால் மீன்கள் அதிகம் வாழும் இடமாகும். பார்ஜ் கொண்டு வந்து கடலை ஆழப்படுத்தும் பணி செய்யும் பொது மீனவர்களின் வலைகளும், சங்கு குழி ஆட்களுக்கும் சேதம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது. குறைந்தது பதினைந்தாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அனல் மின் நிலையத்தினர் கடற்கரையில் இருந்து 1500 மீட்டர் தூரம் வரை கடலில் பைப்புகளை போட திட்டமிட்டுள்ளனர். இதற்கு மிக அருகில் காசுவாரி தீவு மற்றும் கரையசல்லி தீவு காணப்படுகின்றது. இத்தீவுகளானது மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தனியார் அனல் மின் நிலையத்தினால் கடலில் தோண்டுதல், கழிவு நீரை கலப்பது போன்றவை சட்ட விரோத செயலாகும். மேலும் பட்டினமருதூர் வடக்கு எல்லையில் அனுமதி இன்றி கடலுக்குள் நான்கு போர்வெல் போட்டுள்ளனர். இது தவிர ஜெட்டி அமைத்து கடல் மார்க்கமாக தீவுகளின் கரை வழியே பார்ஜ் மூலம் நிலக்கரி கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட வடபகுதி மக்களின் மீன்பிடித் தொழில் பாதிப்படையும். எனவே இக்கம்பெனியின் மூலம் மேற்கொள்ளும் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் இம்மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரைச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்கம்பெனியானது கடலில் இருந்து நீரை எடுக்கவோ, கடலில் கழிவு நீரை வெளியேற்றவோ கூடாது" என வலியுறுத்தி வாக்குமூலம் கொடுக்கப்பட்டது.
மீனவர்கள் போராட்டம் குறித்து கேள்விப்பட்டதும் தருவைக்குளம் காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் குளத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf