பிரம்மாண்டாய் ஆரம்பித்து பிசுபிசுத்து போன பாபா ராம்தேவ்

காந்தியவாதி என அறியப்படும் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக தொடங்கிய சத்யாகிரக போராட்டம் ஊடகங்களின் உதவியுடன் ஓரளவு மக்கள் கவனம் பெற்றதும், அதை தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவும் ஊழலுக்கு எதிராக களத்தில் குதித்த போது அனைவரும் முதலில் ஆச்சரியத்துடன் தான் பார்த்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டத்தைத் திசை திருப்ப காங்கிரஸே இறக்கி விட்ட ஆள்தான் ராம்தேவ் என்று கூட தகவல்கள் கசிந்தன.

அதற்குக் காரணமில்லாமலும் இல்லை. வட கிழக்கு மாநிலங்களில் அரசு பயங்கரவாதத்திற்காக ஆண்டுகணக்கில் போராடும் ஷர்மிளா சானுவின் போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை மத்திய அரசு இவருக்குக் கொடுத்தது. வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் வரவேற்பதைப் போல் மத்திய அமைச்சர்களை அனுப்பி பாபா ராம்தேவை வரவேற்று ஓவர் பில்டப் செய்தார்கள்.

ஆனால், தான் சற்றும் எதிர்பார்க்காத மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் அமைச்சர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசுக்கு எதிராக ராம்தேவின் முழக்கம் அதிகமானது. இது மத்திய அரசைத் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிட்டது. ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்திய மத்திய அரசின் நடவடிக்கை தங்க தட்டில் தாம்பூலத்தை வைத்து கொடுத்ததை போல் ஆகிவிட்டது.

பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மாத்திரமின்றி அவரை விமர்சிப்பவர்கள் கூட மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தனர். ஒட்டு மொத்த இந்தியாவே ராம்தேவின் பின்னால் நிற்பதைப் போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் பாபாவின் பின்னால் அணி வகுத்து நின்றன. ஆனால் பி,ஜே.பி ஆளும் மாநிலமான உத்தரகாண்டில் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருந்த பாபா, எட்டே நாட்களில் பரிதாபகரமாக தன்னுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாமலேயே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

18 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஆரம்பித்த பாபாவின் உண்ணாவிரத போராட்டம், எட்டே நாளில் பாப்பராகிப் பிசுபிசுத்து போனதற்குக் காரணம் அரசுக்கு எதிரான மக்கள் கொந்தளிப்பைத் தனக்கான ஆதரவு என தவறாக விளங்கி கொண்டதும், சங் பரிவாரங்களுடன் தன்னைப் பகிரங்கமாக இணைத்து கொண்டதும், ஊழலுக்கு எதிராக களம் காண புறப்பட்ட பாபாவே சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்தைப் பராமரித்து வந்ததுமே ஆகும்.

அன்னா ஹசாரே சொன்னது போல் ஒரு இயக்கத்தைக் கட்டமைக்க தேவையான பக்குவம் ராம்தேவுக்கு இல்லை என்பதை அவரின் நடவடிக்கைகளே வெளிச்சம் போட்டு காட்டியது. 11,000 நபர்கள் கொண்ட ஆயுத படையை உருவாக்குவேன் என்றவர், சட்டம் தன்மீது பாயும் அபாயத்தை உணர்ந்தவுடன் தங்களைத் தற்காத்து கொள்ள ஜூடோ, கராத்தே கற்று கொள்வது போன்ற அர்த்தத்தில் தான் சொன்னதாக பின்னர் பல்டியடித்தார். கூடவே, ஊடக நண்பர்கள் தன் கருத்தைத் திசை திருப்ப மாட்டார்கள் என்று நம்புவதாக கெஞ்சினார்.

ஆனால் அவரின் கூற்றைத் திரும்ப திரும்ப ஊடகங்கள் ஒளிபரப்பின. அவரின் பொருளாதார நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்களின் கூட்டமைப்பு வர்ணித்ததைப் போல் அவரின் நடவடிக்கைகள் பாலிவுட்டின் ஸ்டண்ட் காட்சியைப் போல் கேலிக்கூத்தாய் மாறிவிட்டன.

ஊழலுக்கு எதிராய் போராடுபவர்கள் தங்களைச் சுத்தப்படுத்தி கொள்ளாமல் ஊரைத் திருத்த புறப்பட்டால் பாபாவின் கதிக்குத் தான் தள்ளப்படுவார்கள் என்பது தான் பாபாவின் நிலைமை அனைவருக்கும் தரும் படிப்பினை.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf