Baba Ramdev's Full and unaudited Asset & Money Details | அரை குறையாக சொத்துக் கணக்கை வெளியிட்ட ராம்தேவ்-மதிப்பு ரூ. 424 கோடி

Baba Ramdev
 
ஹரித்வார் தனது சொத்து கணக்கை முழுமையாக வெளிடப் போவதாக கூறியிருந்த பாபா ராம்தேவ் இன்று மாலை அரைகுறையான ஒரு சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறிய கணக்குப்படி பார்த்தால் மொத்தம் ரூ. 424 கோடியாகும்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக களம் இறங்கியுள்ளார் ராம்தேவ். ஆனால் இவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் ராம்தேவ் ஒரு ரவுடி, கூலிப்படையை வைத்து மக்களை திசை திருப்பி வருகிறார். பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ராம்தேவின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளில் குதிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், தனது சொத்து விவரத்தை இன்று பகிரங்கமாக வெளியிடப் போவதாக ராம்தேவ் கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று மாலை தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரது உதவியாளர் பால்கிருஷ்ணாதான் இந்த விவரங்களை வெளியிட்டார். அதன்படி மொத்த சொத்து மதிப்பாக ரூ. 424 கோடி என்று பால்கிருஷ்ணா தெரிவித்தார்.

அதில், திவ்ய யோக மந்திர டிரஸ்ட்டின் சொத்து மதிப்பு ரூ. 249.63 கோடி. பதஞ்சலி யோக பீடத்தின் மதிப்பு ரூ. 164.8 கோடி. பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட்டின் மதிப்பு ரூ. 10 கோடியாகும்.

இவற்றைத் தவிர வேறு விவரங்களை பால்கிருஷ்ணா தெரிவிக்கவில்லை. மேலும் தங்களது அமைப்பின் பாலன்ஸ் ஷீட் தங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

பால்கிருஷ்ணாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் அவரது பாஸ்போர்ட் போலியானதா என்ற கேள்விகளுக்கும் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனது பாஸ்போர்ட் தூய்மையானது, நான் இந்தியன்தான் என்று கூறினார். தொடர்ந்து கேள்விகள் குவியவே அவர் எழுந்து போய் விட்டார். சற்று நேரத்தில் பாபா ராம்தேவும் எழுந்து சென்று விட்டார்.

முன்னதாக ராம்தேவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நான் மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் சொத்துக்களைக் குவித்துள்ளதாக சிலர் அவதூறாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். அவை பொய் என்பதை நிரூபிக்க எனது சொத்து விவரங்களை நான் பகிரங்கமாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

அதேபோல அடுத்த முறை நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று கூறியதில் எந்தத் தவறும், சட்டவிரோதமும் இல்லை என்றும் ராம்தேவ் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பயன்படுத்திய வார்த்தைகள் சரியானவைதான். அதில் என்ன தவறு இருக்கிறது. எங்களை அடிப்பவர்களைத் திருப்பி அடிப்போம் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. வீரம் குறித்துத்தான் நான் பேசினேன். அதுதான் தவறா என்றார் ராம்தேவ்.

உண்ணாவிரத்திற்குப் 'பிரேக்'!

இதற்கிடையே, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் எலுமிச்சை சாதமும், தேனும் சாப்பிட ஒத்துக் கொண்டார்.

ஹரித்வாரி்ல் உள்ள தனது ஆசிரமத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமடைந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடம்பில் தண்ணீர் சத்து வெகுவாக குறைந்துள்ளது என்றனர்.

இதனால் அவர் உடனே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும், இல்லை என்றால் உடல்நிலை மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்துள்ளனர். பிடிவாதமாக இருக்கும் பாபாவுக்கு வலுக்கட்டாயமாக உணவு கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் அறிவுறுத்தலை அடுத்து பாபா ராம்தேவை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு மாநில அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவரை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு ஹரித்வார் மாவட்ட நீதிபதியும், எஸ்பியும் நேரில் சென்று வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி கூறியதாவது,

பாபா குளுகோஸ் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் எலுமிச்சம்பழச் சாறும், தேனும் எடுத்துக் கொள்ள சம்மதித்தார் என்றார்.

தெம்பாக பேசினார்

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ராம்தேவ் அவர்களிடையே பேசுகையில், சற்று தெம்பாகவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf