Interior Minister Chidambaram | சிதம்பரம்! பதவி நிரந்தரம்?

கெட்டிக்காரன் தோற்றம்-இதுதான் ப.சிதம்பரத்தின் சிறப்பே! வாய் மொழியும், உடல் மொழியும் அவ்வாறே!' செய்வன திருந்தச்செய்!' இது சிதம்பரத்திற்கு முற்றிலும் பொருந்தும் பழமொழி. கொள்கை சரியில்லை என ஆதங்கபடுவோர் உண்டு. ஆனால், எனது கொள்கையே இது தான் என்பது ப.சிதம்பரத்தின் பார்வையாகும். இவை இரண்டிலும் எது சரி ஆனாலும் சிதம்பரம் கூறுவதில் தெளிவு உண்டு.

அமைச்சர்களின் வழக்கமான அறிவு சூன்யத்திலிருந்து மாறுபட்டு காரியங்களை படிப்பார். சில நேரங்களில் படித்ததை விட படித்தவர் போல் நடிக்கவும் செய்வார். இத்தகைய கர்வத்துடன் கூடிய அமைச்சரை அணுகும் உயர் அதிகாரிகளுக்கு கூட படபடப்பு தொற்றிக்கொள்ளும். தனக்கு புரியாத எதனையும் செய்யமாட்டார். தனக்கு புரிந்ததை தான் அதிகாரிகளும் செய்ய வேண்டும் என கருதுவார். கோப்புகளை பார்க்காமல், விஷயங்களை ஆராயாமல் சென்றால் வார்த்தைகளால் வெளுத்துவாங்கும் அமைச்சரை கண்டு அதிகாரிகள் பயபடுவர்.

ஆனால் சிதம்பரத்திற்கு காங்கிரஸில் ஹைக்கமாண்டை தவிர வேறு எவருக்கும் பயமில்லை. அமெரிக்காவையும் பொருட்படுத்தமாட்டார். சொந்த கட்சிக்காரர்களும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இதனால் கட்சியில் பலருக்கு இவர் மீது அலர்ஜி ஏற்படுவது சகஜமே! இளங்கோவன் போன்ற சிலர் ஜெ.வின் முகாமில் தஞ்சமடைய எதிர்பார்த்து துதிபாடும் வேளையில் அவரைக் குறித்து சற்றும் அலட்டிக்காதவர். இதன் விளைவு தான் அம்மாவின் சமீபத்திய டெல்லி பேட்டி.

முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிகழ்ந்த மும்பை தாக்குதலின் போது  மத்திய உள்துறை அமைச்சகம் குப்புற கவிழ்ந்துவிட்டதா?என நாட்டில் பெரும்பாலோருக்கு சந்தேகம் ஏற்பட்ட வேளை. சிவராஜ் பாட்டீலின் கெட்டிக்காரத்தனம் ஆடை அணிவதில் மட்டும் தான் என்பதை காங்கிரஸாரும் புரிந்துக்கொண்டனர். அடுத்த உள்துறை அமைச்சர் யார்? என காங்கிரஸ் கட்சி நடத்திய குலுக்கலில் துண்டுச்சீட்டில் ப.சிதம்பரத்தின் பெயர் வந்தது. டெல்லி நார்த் ப்ளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை துப்புரவுச்செய்து அரசின் முகத்தை பாதுகாக்கும் நோக்கில் மேடம் சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சராக நியமித்தார்!

மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா இந்த மும்மூர்த்திகள் தாம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் சிற்பிகள் என்றாலும் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரத்திற்கு அக்கொள்கைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிக்க சூழ்நிலைகள் அனுமதியளிக்கவில்லை. ஆனால், உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தமது தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பயன்படுத்தவும் சிதம்பரம் தவறவில்லை.

தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முதல் எதிரி நக்ஸல்கள் என பிரகடனப்படுத்திய சிதம்பரம் அவர்களை ஒழித்துக்கட்ட பசுமை வேட்டைக்கு உத்தரவிட்டார். ஸல்வாஜுதூம் என்ற கொலைக்காரப்படையை உருவாக்கிய சட்டீஷ்கர் பா.ஜ.க அரசுக்கு சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும் அளித்தது. சொந்த குடிமக்களை நோக்கி துப்பாக்கியை தூக்கமாட்டோம் என்ற நல்லிணக்க வார்த்தை பின்னர் தாக்குதல் மொழியாக மாறிப்போனது.

முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்த இடதுசாரிகளுக்கு புரிந்த, இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கும் மமதாவுக்கு புரியாது போன பழங்குடியின மக்களை வேட்டையாடுவதில் இருந்த ஆவேசமும், வேகமும் தற்பொழுது இல்லை எனலாம். அதற்காக கொள்கையை மாற்றிவிட்டார்கள் என்பது அர்த்தமல்ல!

தலை குப்புற வீழ்ந்துகிடந்த மத்திய உள்துறை அமைச்சகத்தை தூக்கி நிறுத்தியவர் ப.சிதம்பரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அதனால் தான் 3 ஆண்டுகால அமைதிக்கு பிறகு மும்பையில் மீண்டும் குண்டுகள் வெடித்த பிறகு ப.சிதம்பரத்தை குறைகூற யாருக்கும் மனசு வரவில்லை. ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நுழைந்த பொழுது அலட்சியத்தால் முடங்கிக்கிடந்த மின் விசிறி மட்டுமல்ல, அலுவலகத்தில் வேலை நேரத்திற்கு முன்பே வருகைதரும் அமைச்சருடன் பணியாளர்களும் ஓடத்துவங்கினர்.

குவிந்து கிடந்த கோப்புகள் நகரத்துவங்கின. காலையில் ஒரு தகவலை கேட்டால் ஒரு மாதம் கழித்து அதனைக்குறித்து சிந்திக்கத்துவங்கும் முறை மாறியது. மதிய வேளையில் உண்ட மயக்கத்தில் தூங்கி வழிந்து கனவில் தென்படுவதையெல்லாம் உளவுத்துறை செய்திகளாக அளித்து அரசையும், நாட்டு மக்களையும் பீதிவயப்படச்செய்யும் வழக்கமும் மாறியது.த கவல்கள் மட்டுமல்ல, அதன் உறைவிடத்தையும் சிதம்பரம் கேட்பார் என்றவுடன் கனவில் தோன்றுவதல்ல ரகசிய உளவு விபரங்கள் என்பது புலனாய்வு ஏஜன்சிகளுக்கு புரிந்து போனது.

ஏதேனும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தால் இதனைக்குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்தோம் எனக்கூறும் புலனாய்வு ஏஜன்சிகளின் வீம்பான அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெயரில் இல்லாத அமைப்புகளின் பெயரால் பிரதமரையே பயமுறுத்தி உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வந்த மலையாள மாஃபியா எம்.கே.நாராயணனை மேற்குவங்காள மாநிலத்தின் ஆளுநராக ஓய்வெடுக்க அனுப்பியதில் ப.சிதம்பரத்திற்கும் பங்குண்டு என பேச்சு எழுந்தது.

ஏதேனும் ஒரு தாக்குதல் நடந்தவுடன் அரைமணிநேரத்திற்குள் வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் பெயரை ஊடக உலகில் பிரவீன் சுவாமிகளுக்கு ரகசியமாக அளித்து உடல் அசையாமல் தலை தப்புவதற்கு புலனாய்வு துறைகள் நடத்தும் முயற்சிகளும் முடிவுக்கு வந்தது எனலாம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான இண்டலிஜன்ஸ் ஒருங்கிணைப்பை சிதம்பரம் உருவாக்கினார். இவற்றின் காரணமாகவோ அல்லது தீவிரவாதிகள் தாக்குதல்களை வேண்டாம் நின்று நிறுத்திவிட்டதாலோ என்னவோ குண்டு வெடிப்புகள் குறைந்தன.

அண்மையில் நடந்த மும்பை குண்டு வெடிப்பிலும் புலனாய்வு ஏஜன்சிகள் மற்றும் அரசின் அறிக்கைகளில் மேம்பட்ட அணுகுமுறை ஏற்பட்டுள்ளதை காணலாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யாரோ இந்தியன் முஜாஹிதீன் என்ற வழக்கமான பெயரை கசியவிட அதனை பிடித்துக்கொண்டு பரபரப்புக்கு வேறு செய்தி இல்லாததால் ஊடகங்கள் பரப்புரை செய்துவருகின்றன. ஆனால், புலனாய்வு ஏஜன்சிகள் இருட்டில் துளாவுகின்றன என்பது தான் உண்மை.

சிதம்பரமும், உயர் அதிகாரிகளும் இதனை ஒப்புக்கொள்ளவும் தயங்கவில்லை. குண்டு வெடிப்பின் ஆதாரங்கள் கனத்த மழையில் அடித்து செல்ல கிடைத்த அம்மோனியம் நைட்ரேட்டும் வெளிநாட்டினரை விட உள்நாட்டினர் கைவசம் தான் உள்ளன என்பதை புலனாய்வு ஏஜன்சிகள் நம்புகின்றன. ஆகவே விசாரணையின் வரம்பில் நிழலுக குழுக்கள் உள்பட அனைத்து வாய்ப்புகளையும் புலனாய்வு ஏஜன்சிகள் ஆராய்கின்றன. எல்லைக்கடந்த அந்நிய நாட்டு தீவிரவாத பின்னணி இல்லை என வெளிப்படையாக அவர்கள் கூறுகின்றனர்.

நாளை வேறுவிதமான தகவல்கள் வெளிவரலாம். ஆனால் துவக்கத்திலேயே தீர்ப்பை வழங்கும் முறை மாறிவிட்டது எனலாம். இந்நிலையில் 'முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்!' என்ற புலனாய்வு ஏஜன்சிகளின் மனோநிலையில் மாற்றத்தை மட்டும் சிதம்பரத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களின் மனோவியாதிக்கு சிதம்பரமும் பலியாகமாட்டார் என நம்புவோம்.ஏனெனில் முன்பு ஜிஹாது குறித்தும், புனே ஜெர்மன் பேக்கறி குண்டு வெடிப்புக் குறித்தும் சிதம்பரம் அவசரப்பட்டு வெளியிட்ட அறிக்கையில் தவறு என்று தெரிந்தவுடன் திருத்திக்கொண்டதை மறந்திருக்கமாட்டார்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே மலேகான், அஜ்மீர், நந்தத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு துவக்கத்திலேயே அறிவிக்கும் அமைப்புகள் காரணம் அல்ல என்பது தெரியவந்தது. மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் முகமூடியை கிழித்துக்கொண்டிருக்கும் வேளையில் தான் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சிதம்பரம் வந்த பிறகு உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதை வெளிக்கொணர்ந்தது.

இதனால் அஸிமானாந்தா சிக்கினார். மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பயங்கரவாத தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் தீவிரவாத தொடர்பு குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ சேகரித்துவருகிறது. இவையெல்லாம், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தான் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க கருதுவதால் அவர்களின் தாக்குதல் இப்பொழுது சிதம்பரத்தை நோக்கி திரும்பியுள்ளது.

முறைகேடுகளின் பாதையில் சிதம்பரம் சஞ்சரித்தாரா? என்பது உறுதியாக கூறவியலாது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்திற்கு தி.மு.கவுடன் தமிழன் என்ற ரதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவோரும் உண்டு. ஆனால் இதனை ஆயுதமாக்கி சிதம்பரத்தை குறிவைத்து சங்க்பரிவார் எழுப்பும் கூக்குரல்கள் ஜனநாயகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அவர்களது அடங்காத ஆவலா? நிச்சயமாக இல்லை.

இருட்டில் நடத்திக்கொண்டிருந்த நாசவேலைகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என அஞ்சுவது தான் சங்க்பரிவாருக்கு ப.சிதம்பரத்தின் மீதான பழிவாங்கும் கேடுகெட்ட எண்ணம் ஏற்பட்டதற்கு காரணம். தேச பக்தியின் பெயரால் எழுப்பும் முழக்கங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்ட கர்ஜனைகள் ஆகியவற்றின் திரைமறைவில் நடத்திவந்த தேசவிரோத பயங்கரவாத செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கு காரணமான ப.சிதம்பரத்தின் மீது கொண்டுள்ள தீராத பகைதான் சங்க்பரிவாரின் தற்போதையை கூக்குரலும், கும்மாளமும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிவராஜ் பாட்டீல் ஆளுநர் உடையை களைந்துவிட்டு மீண்டும் உள்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பின் போது ஊகமான செய்திகள் உலாவியதன் பின்னணியில் யார் செயல்பட்டார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

2ஜி, மும்பை குண்டு வெடிப்புகளை காரணம் காட்டி ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க முழங்கி வருகிறது. நாடு பாதுகாப்பான சூழலில் இல்லாத வேளையில் ப.சிதம்பரத்தால் எவ்வாறு அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க முடிகிறது? என்பது தான் அவர்களது முக்கிய கேள்வி. இந்த கேள்விகளை கேட்பவர்களின் தகுதிதான் என்ன? கார்கில் போரில் வெளிநாட்டு ஊடுருவலை குறித்து அறியாதவர்கள்!  பாராளுமன்றத் தாக்குதல் நடக்கும்வரை கைக்கட்டி வாய்பொத்தி பார்த்து நின்றவர்கள்! கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை எடுத்துச்செல்லும் சவப்பெட்டியிலும் ஊழல் புரிந்து சர்வதேச அளவில் இந்தியாவின் மானத்தை இழக்கச்செய்தவர்கள்! லஞ்சம் வாங்கினாலும் அமெரிக்க டாலரில் தான் வாங்குவேன் என கூறிய தேசபக்திக்கு சொந்தக்காரர்கள்! லாபம் தரும் நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்றுத்தொலைக்க தனியாக அமைச்சரவையே உருவாக்கி நாட்டை ஒளிரச்செய்தவர்கள்! இத்தகைய கேடுகெட்ட கூட்டம்தான் ப.சிதம்பரத்தை பதவி விலக கோருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் பங்கினைக்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி பா.ஜ.கவினர் சி.பி.ஐ இயக்குநரை அணுகியுள்ளனர். அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பதையும் தாண்டி ஒரு அரசியல் கட்சி மத்திய புலனாய்வு ஏஜன்சி ஒன்றை அணுகுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய நாடக கூத்துக்களால் ப.சிதம்பரம் ராஜினாமா செய்வார் என்றோ, சோனியாகாந்தி அவரை கைவிடுவார் என்றோ பா.ஜ.க கருதவில்லை. ஆனால், காவிப்படைக்கு எதிராக காய்களை நகர்த்தினால் கதி! அதோகதி தான்! என சிதம்பர உள் மனதில் அஞ்சினாலே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வகையறாக்களுக்கு வெற்றிதான். மறுபுறம் சிதம்பரத்திற்கு எதிராக அவருடைய நடவடிக்கைகளை கண்டு அஞ்சாமல் போராடுகிறோம் என்று ஹிந்துத்துவா ஆதரவாளர்களுக்கு தோன்றினாலும் வெற்றிதான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதுதான் சங்க்பரிவாரின் உண்மையான நோக்கம்.

ஊளையிடும் சங்க்பரிவார குள்ள நரிகளுக்கெல்லாம் அஞ்சாமல் இருந்தால் சிதம்பரம் செட்டிநாட்டு சிங்கம்தான். இப்பொழுது நமக்கு முன்னால் எழுந்துள்ள கேள்வி என்னவெனில் காங்கிரஸ் கட்சி அஞ்சினால் சிதம்பரத்தின் பதவி நிரந்தரமா? என்பது தான்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf