Habits for Youths | இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம்

பன்னிரண்டு வயதுக்கு மேல் அறிவுக்கண் லேசாகத் திறக்கிறது. ஆடல், பாடல்களில் உற்சாகம் பிறக்கிறது. உயரமான இடங்களைக் கண்டால் ஏறிக் குதிக்கச் சொல்கிறது. நீரூற்றுகளில் கரணமடிக்க அவாவுகிறது. புதிய புதிய ஆடைகளிலே கவனம் போகிறது. உடலின் வலிமை நிரந்தரமானது என்றே நிச்சயமாகத் தோன்றுகிறது. சீக்கிரமே அது விலகியும் விடுகிறது.

எந்த இளைஞனும் நிதானிக்க வேண்டிய இடம் இதுதான்; ஆனால், நிதானிக்கவே முடியாத நேரமும் இதுதான்.

பக்குவமற்ற ரத்த அணுக்களின் பரிணாம வளர்ச்சி, உற்சாகத்தையே மூலதனமாக்கி விடுகிறது.

உணர்ச்சியே பிரதானமாக அங்கம் வகிக்கிறது.

இது கற்பூரப் பருவம்.

ஆசைத்தீ உடனுக்குடன் பற்றி கொள்ளும் பருவம்.

நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பயத்தோடும், பொறுப்போடும் கல்வி கற்றாலும், ரத்த வேகம் அவர்களையும் விடுவதில்லை.

இந்த நாளில், ஒரு இளைஞன் எந்தெந்த உணவுகளை விரும்புகிறானோ, அவற்றிலுள்ள தீமைகளை யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.

கடலை மாவில் செய்த பலகாரங்களையும், வாய்வுப் பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவான்.

அவற்றின் எதிரொலி நாற்பது வயதுக்கு மேல்தான் அவன் காதுகளுக்குக் கேட்கும்!

இருபது வயதிலிருந்து முப்பது வயது வரை, நான் சேலத்தில் இருந்தபோது ஒவ்வொரு இரவிலும் குறைந்தது அரைக்கிலோ உருளைக்கிழங்கு சாப்பிடுவேன். அதற்கேற்ற உழைப்பு இல்லாததால், இப்போது எனக்கிருக்கும் ஒரே துயரம்- வாய்வு துயரம்.

இளம் பருவத்தில் நடப்பதும் ஓடி ஆடுவதுமாக இருக்கிற இளைஞன், உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கியதும் உடல் துன்பம் ஆரம்பமாகும்.

இளம் வயதிலிருந்து, மரண காலம் வரையிலே ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால், பெரும்பாலான நோய்கள் போய்விடும்.

தினசரி கால் வலிக்க மலை ஏற வேண்டும் என்று தான், இந்துக்கள் கோயில்களை மலை மீது கட்டினார்கள்.

உடம்பு வியர்க்க மலை மீது ஏறி நூற்றியொரு பிரகாரம் சுற்றி, அதன் பிறகு குளிர்ந்திருக்கும் தண்ணீர்க் குளத்தில் விழுந்து குளித்தால் அது போன்ற சுகமும், ஆரோக்கியமும் வேறெதுவும் இல்லை.

பாகற்காய், நாவற்பழம் போன்றவற்றை அந்த வயதிலிருந்தே விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், தகப்பனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும் மகனுக்கு வராது.

சந்நியாசிகளின் உணவு முறை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களுக்கு இப்போது எழுபது வயதாகிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் சமயப்பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் உடல் நலிவு என்று ஓய்வெடுத்துக் கொண்டதில்லை.

இந்த ஆரோக்கியத்திற்குத் தெய்வ பக்தியும், உணவு முறையுமே காரணமாகும்.

ஆன்மாவிற்குச் சக்தி தரத் தெய்வ பக்தியும், உடலுக்கு வலுவு தர உணவும், ஒழுங்கும்.

அகால உணவை இளைஞன் அறவே ஒழிக்க வேண்டும்.

சந்தியா காலம், உச்சிவேளை, அர்த்த சாமம் என்ற கோயில் பூஜைக்குக்கூட குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன.

உப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு இவை நான்கும் குறைவாகவும், கசப்பும், துவர்ப்பும் அதிகமாகவும் சேர்த்துக் கொண்டே வந்தால், பிற்காலத்தில் உடம்பிலிருந்து அடிக்கடி ரத்தம் எடுக்க வேண்டி வராது.

காப்பி, தேநீர் அருந்துகின்ற இளைஞர்கள் காபியை உடனே நிறுத்தி விட்டுத் தேநீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம். அதில் ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள் இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலக விஞ்ஞானிகளில், ரஷ்ய விஞ்ஞானிகள் மட்டும்தான் ஒரு தரம் செய்த முடிவை மறுதரம் மாற்றுவதில்லை.

இந்த வம்பு எதற்கென்றுதான் நம்முடைய மூதாதையர்கள் வேறு வகையான சாறுகளை அருந்தினார்கள்.

ஆவாரம்பூவைக் காயப்போட்டு இடித்துக் காப்பித்தூள் போல் வடிகட்டிப் பாலோடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.

நாரத்தை அல்லது எலுமிச்சை இலையைக் கிள்ளிப் போட்டுத் தண்ணீரில் வேக வைத்தால், தேயிலையின் நிறத்திலேயே அதைவிடச் சுவையான பானம் ஒன்று உருவாகிறது.

இது எனது சிறைச்சாலை அனுபவம்.

மாத்திரைச் சீசாவையே பார்த்தறியாத அந்நாளைய இந்துக்கள், இன்றிருப்பது போன்ற பரவலான மார்படைப்புக்கு ஆளானதில்லை.

உடல் உழைப்பு, விழுந்து குளிப்பது, உணவு முறை இந்த மூன்று டாக்டர்கள் அந்நாளையை இந்துக்களைக் காப்பாற்றி வந்தார்கள்.

உணவும் நோயும் பற்றித் தெரிந்து கொள்ள, திருமூலர் `திருமந்திரம்' படியுங்கள்.

எந்த உணவுக்கு என்ன குணம் என்பதை அறிந்து கொள்ளப் `பதார்த்தகுண சிந்தாமணி' படியுங்கள்.

வாழ்க்கையின் பிற்காலத் துன்பங்களிளெல்லாம் மிகப் பெரிய துன்பம், ஆரோக்கியத்தை இழந்து விடுவதே ஆகும்.

ஆஸ்பத்திரியில் ஆறு மாதம் படுக்க வேண்டிய நிலைமை வரும்போது தான் வாயைக் கட்டாததன் தன்மை புரியும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுகளை நெய், முட்டை, ஆட்டிறைச்சி போன்றவற்றை இளம் பருவத்திலேயே அறவே ஒதுக்கி விட்டால் மரண பரியந்தம் ஆரோக்கியம் இருக்கும்.

துன்பங்களிலெல்லாம் பெரும் துன்பமான நோய் பிடிக்காது.

இளைஞன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது, உடலைக் காப்பாற்றிக் கொள்வது பற்றியே.

மனத் துன்பத்தை நீயே விலக்கிக் கொள்ள முடியும். உடற் துன்பம் வந்தால் ஊரூராக டாக்டரைத் தேடச் சொல்லும்.

இந்துக் குடும்பங்களில் அந்நாளில் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

நவீன உணவு முறையிலே, கொழுப்பிலே வடிக்கப்பட்ட நெய் சேர்க்கிறார்கள். அதைவிடத் தீங்கு வேறெதுவும் இல்லை.

அடுப்பிலே விறகைப் போட்டு எரித்துச் சமைப்பதிலேயே ஒருவகை ஆரோக்கியம் இருக்கிறது. அதே ஆரோக்கியம் எண்ணெய் அடுப்பிலோ, வாயு அடுப்பிலோ கிடைப்பதில்லை.

விறகிலும் வேம்பு, புளி, கருவேல விறகுகளே ஆரோக்கியமானவை.

அடுத்தது, காம உணர்ச்சி வசப்பட்ட இளைஞன் செயற்கை முறையைப் பின்பற்றிச் சீரழிவதை காந்தி அடிகளே ஒரு முறை `ஹரிஜன்' பத்திரிகையில் எழுதியுள்ளார். `மாணவர்க்கு' என்று எழுதியுள்ள தொகுப்பில் இதனை விரிவாகக் காணலாம்.

வடமொழியில் இதனை `முஷ்டி மைதுனம்' என்பார்கள்.

இந்தத் தவறின் மூலம், நெஞ்சு கூடு கட்டும்; கண் குழி விழும்; முகம் களை இழக்கும்; புத்தி மழுங்கிப் போகும்.

இது இளைஞர்களிடம் அதிகமாகப் பரவிய நேரத்தில் இதற்கு மாற்றாக `அக்கோவிரான்' என்றொரு மருந்தே வந்தது.

`தன்னைத்தானே மகிழ்வித்தல் தாளாத பாவம்; ஆணோடு ஆண் கலப்பது அதைவிடப் பாவம்' என்பது கிராமத்துப் பழமொழி.

பிரம்மசாரி இளைஞன் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பும் போது, இந்தத் தவறு பயங்கரமாக எதிரொலிக்கும்; செயலற்ற நிலை பிறக்கும்; குடும்ப வாழ்வில் அருவருப்புத் தோன்றும்; குழந்தையும் ஆரோக்கியமாக இருக்காது.

உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் இது.

இன்று வாய்ப்புக்கள், வசதிகள் அதிகமாகி விட்டதால், இந்தச் சீர்கேடு மிகவும் குறைவு.

பிற்கால உடல் துன்பங்களில் இருந்து விடுபடப் பன்னிரண்டு வயது முதல் இருபத்தி நான்கு வயது வரையுள்ள பிரம்மசாரி இளைஞர்கள், உடலைப் பேணுவது பற்றியே நான் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தக் காலத்தில் அவர்களுக்கு வரக்கூடிய மனக்கவலை எல்லாம், `அப்பா பணம் அனுப்பவில்லையே, கடன் அதிகமாகி விட்டதே' என்பது மட்டும்தான்.

இது விரையில் தீரக்கூடிய ஒன்றே.

அதற்காக ஹாஸ்டலில் திருடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது.

`தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பார்கள்.

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பார்கள்.

`பின்னால் நீ பழுக்கப் போவது பலாப் பழமாகவா? இல்லை காஞ்சிரம் பழமாகவா?' என்று நிர்ணயிக்கப் போவது இந்தப் பருவம்தான்.

பால பருவத்தில் ராமன் ஏந்திப் பழகிய கோதண்டம் தான் பின் பருவத்தில் இலங்கையில் கை கொடுத்தது.

`துன்பம், துன்பம்' என்று ஏங்கும் முதியவர்களிடம் நெருங்குவதற்கு முன்னால், இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாத இளைஞனை எச்சரிப்பதே, இந்த அத்தியாயத்தின் நோக்கம்.

இந்த வயதில் நன்மை தீமைகளையும், கற்கும் கல்விகளையும் ஒழுங்காகக் கற்றுத் தேறவில்லை என்றால், `துள்ளித் திரியும் வயதில் என் துடுக்கடக்கி, பள்ளிக்கு அனுப்பி வைத்திலனே என் தந்தையாகிய பாதகனே' என்று பாடிய பட்டினத்தார் போல் பதற வேண்டியிருக்கும்.

அறிவால் உணர்ந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டிவிடும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf