மத்திய அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம்: தயாநிதி உட்பட ஏழு பேரிடம் மந்திரி பதவி பறிப்பு

தயாநிதி உள்ளிட்ட ஏழு பேரை தனது அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் கழற்றிவிட்டுள்ளார். அமைச்சரவையில் பெரிய அளவில் இல்லாது, குறிப்பிடத்தக்க மாற்றங்களை மட்டுமே செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய அமைச்சர்களான வீரப்ப மொய்லி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்களின் இலாகாக்களை மாற்றியமைத்துள்ளார். சல்மான் குர்ஷித், புதிய சட்ட அமைச்சராக்கப்பட்டுள்ளார். எதிர்பார்க்கப்பட்டது போலவே, உத்தரபிரதேச மாநிலத்திற்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை, நேற்று மூன்றாவது மாற்றத்தை சந்தித்தது. நீண்டநாட்களாக கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றத்தை ஒருவழியாக, பிரதமர் மன்மோகன் சிங் செய்து முடித்துள்ளார். நிதித்துறை, உள்துறை, வெளியுறவு மற்றும் ராணுவம் ஆகிய மிக முக்கிய நான்கு இலாகாக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், பெரிய அளவில் இல்லாமல், ஓரளவு குறிப்பிடத்தக்க அளவில் மட்டும் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தயாநிதி, கிருஷ்ணா - கோதாவரி எரிவாயு பிரச்னையில் சிக்கிய முரளி தியோரா, காமன்வெல்த் போட்டி சர்ச்சையில் சிக்கிய எம்.எஸ்.கில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளராக அறியப்படும் சாய்பிரதாப், உடல்நிலை சரியில்லாத ஹண்டிக், காந்திலால்புரியா, அருண் யாதவ் என ஏழு பேருக்கு அமைச்சரவையில் இருந்து, "கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லியிடம் இருந்த சட்ட இலாகா பறிக்கப்பட்டுள்ளதுதான் மிக முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கும், சுப்ரீம் கோர்ட்டிற்கும் சமீபகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. நீதித்துறையுடன் மோதல் போக்கு உருவாகிவருவதுபோல தெரிவதால், மொய்லியின் இடத்திற்கு சல்மான் குர்ஷித் கொண்டு வரப்பட்டுள்ளார். தவிர, உ.பி.,யில் தேர்தல் வருவதால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை கருத்தில்கொண்டு, குர்ஷித்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில் குர்மி வகுப்பைச் சேர்ந்த பெனிபிரசாத் வர்மாவுக்கும் கேபினட் அந்தஸ்துடன் கூடிய இரும்புத்துறை அளிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத ஓட்டு வங்கியுடைய பிராமண சமூகத்தையும் கவரும் நோக்கில், ராஜிவ் சுக்லாவுக்கு பார்லிமென்ட் விவகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மம்தா வகித்துவந்த ரயில்வே துறையை, அதே கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மூலம், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது. திரிவேதி வகித்துவந்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பதவியையும், அதே திரிணமுல் கட்சியைச் சேர்ந்த சுதிப் பண்டேபாத்தியாயா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராகுல் சிஷ்யர்களுக்கும் இந்த மாற்றத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கழற்றிவிடப்பட்ட முரளி தியோராவின் மகன் மிலன் தியோராவுக்கு தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மற்றொரு முக்கிய சிஷ்யரான ஜிதேந்திர சிங்கிற்கு உள்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடைசியில் பதவி கிடைக்காமல் போனவராக கருதப்படும் கி÷ஷார் சந்திரதேவுக்கு, இம்முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த இவருக்கு பழங்குடியினர் நலம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் இலாகா கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது மிக அதிக சர்ச்சைகளில் சிக்கிய ஜெய்ராம் ரமேஷும், இம்முறை தனது இலாகாவை பறிகொடுத்துள்ளார். பெரிய நிறுவனங்களின் கோபத்தை இவர் சம்பாதித்த காரணத்தால் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, கேபினட் அந்தஸ்துடன் கூடிய ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷிடம் இருந்த சுற்றுச்சூழல் துறை, ஜெயந்தி நடராஜனிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர், ஏற்கனவே குஜ்ரால் அரசில் விமானப்போக்குவரத்து இணையமைச்சராக இருந்தார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த யாரும் புதிதாக அமைச்சராக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களின் இலாகாக்களிலும் கைவைக்கப்படவில்லை. இருப்பினும், "அமைச்சரவை மாற்றம் இன்னும் முற்றுப்பெறவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருப்பதால், அடுத்த மாற்றத்தின்போது தி.மு.க., சார்பில் சிலர் அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது.
புதிய அமைச்சர்கள் அனைவரும் நேற்று மாலை ஜனாதிபதி மண்டபத்தில் உள்ள அசோகா ஹாலில் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது இம்முறை பெரிய அளவில் இருக்கும் என்றும், இந்த மாற்றத்தின் மூலம் மன்மோகன் சிங் அரசின் மீதான தோற்றமேகூட மாறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், எந்தவொரு பெரிய மாற்றத்தை இம்முறையும் மன்மோகன் சிங் செய்திடாதது பல தரப்பையும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

புதிய அமைச்சர்கள் - அறிமுகம்

பவன்சிங் கடோவர்: புதிய அமைச்சரவையில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி இணை அமைச்சர் பதவி, பவன்சிங் கடோவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், அசாம் மாநிலத்தில், 1950ல் பிறந்தவர். திப்ருகார் லோக்சபா தொகுதியிலிருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தந்தை, கனய் கடோவர். மனைவி ஜிபோந்தரா கடோவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவுகாத்தி பல்கலையில், பி.ஏ., பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டிலிருந்து, காங்., கட்சியில், பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

தினேஷ் திரிவேதி: புதிய அமைச்சரவையில், ரயில்வே துறை அமைச்சர் பதவி, தினேஷ் திரிவேதிக்கு வழங்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த இவர், பாரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹீராலால், ஊர்மிளாபென் திரிவேதி தம்பதியினருக்கு, 1950ல் டில்லியில் பிறந்தார்.
இவரது மனைவி மினல் திரிவேதி. ஒரு மகன் உள்ளார். பி.காம்., எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். முதன்முதலில், 1990ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

கிஷோர் சந்திர தியோ: புதிய அமைச்சரவையில், கி÷ஷார் சந்திர தியோவுக்கு, பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், அரக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர், பி.வி.தியோவுக்கும், சோபலதா தேபிக்கும், 1947ல் பிறந்தார். பி.ஏ., பொருளாதாரமும், எம்.ஏ., அரசியல் அறிவியல் பட்டமும் பெற்றவர். மனைவி பிரீத்தி தியோ. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1977ல் முதன்முதலில், லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில காங்., கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சுதீப் பந்தோபாத்யா: புதிய அமைச்சரவையில், சுதீப் பந்தோபாத்யாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த இவர், உத்தர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிஸ்வேஷ்வர், ஜியோத்ஸ்னா பந்தோபாத்யா தம்பதியினருக்கு, 1952ல், மே.வங்கத்தில் பிறந்தார். மனைவி நயனா பந்தோபாத்யா. இவர், 1987ல், மேற்குவங்க சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எஸ்சி., பட்டம் பெற்றவர். பல்வேறு சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

மிலிந்த் தியோரா: புதிய அமைச்சரவையில், மிலிந்த் தியோராவுக்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், முரளி தியோராவின் மகன். மும்பை தெற்கு தொகுதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர். முரளி தியோரா, ஹேமா தியோரா தம்பதியினருக்கு, 1976ல் மும்பையில் பிறந்தார். இவரது மனைவி பூஜா தியோரா. பி.பி.ஏ., பட்டம் பெற்றவர். காங்., கட்சி சார்பாக, 2004ல் முதன்முதலில் எம்.பி., ஆனார். தற்போது காங்., கட்சியின் இளம் அமைச்சர்கள் பட்டியலில் இவரும் சேர்ந்துள்ளார்.

ஜிதேந்திர சிங்: புதிய அமைச்சரவையில், ஜிதேந்திர சிங்குக்கு, உள்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், சோனிபேட் தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜிந்தர் சிங், தனபதி தம்பதியினருக்கு, 1970ல், சோனிபேட்டில் பிறந்தார். 41 வயதான இவர், காங்., கட்சியில், ராகுலுக்கு நெருக்கமானவர். பி.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றவர். 1995ம் ஆண்டு அரசியல் வாழ்க்கையை துவங்கிய இவர், 2000ம் ஆண்டு, அரியானா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர்.

ஜெயந்தி நடராஜன்: காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவர், சுற்றுச்சூழல் அமைச்சராக (தனிப்பொறுப்பு) பதவியேற்கிறார். 1954, ஜூன் 7ல் பிறந்த இவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. ஆரம்ப காலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், காங்., கட்சியில் இணைந்த இவர், முதல் முறையாக, 1986ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 1992ல், மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார். இதற்கிடையே காங்., கட்சியில் இருந்து விலகி, மூப்பனார் தலைமையிலான த.மா.கா.,வில் இணைந்தார்.
இக்கட்சி சார்பாக, 1997ல், மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வானார். மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சராக பணியாற்றினார். மூப்பனார் மறைவுக்குப் பின், த.மா.கா., - காங்., கட்சியுடன் இணைக்கப்பட்டது. பின், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து அமைக்கப்பட்ட பார்லி கமிட்டியின் தலைவராக இருந்தார். பின், காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

ராஜிவ் சுக்லா: உத்தர பிரதேசத்தின் கான்பூரில், 1959, செப்.,13ல் பிறந்த ராஜிவ் சுக்லா, தற்போதைய புதிய அமைச்சரவை பட்டியலில் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சராக பதவியேற்கிறார். பத்திரிகையாளராக தன் வாழ்க்கையை துவக்கிய இவர், 2000ம் ஆண்டு முதன்முதலாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அகில பாரதிய லோக்தந்த்ரிக் என்ற கட்சியை நடத்தி வந்த இவர், 2003ல் அதை காங்கிரசுடன் இணைத்தார். பின்னர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்து அகில
இந்திய காங்., கட்சி செயலராகவும் நியமிக்கப்பட்டார். 2006ல் காங்., சார்பாக, 2வது முறையாக, ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.சி.சி.ஐ.,யின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது மனைவி அனுராதா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும், "டிவி' தொகுப்பாளராக உள்ளார்.

சரண் தாஸ் மகந்த்: சத்திஸ்கரின் கோர்பா லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட சரண் தாஸ் மகந்த், வேளாண்மைத் துறை இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1954, டிச.,13 ல் பிறந்த இவர், மூன்று முறை மத்திய பிரதேச மாநிலத்தில், எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார். மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார். முதல்முறையாக, லோக்சபாவுக்கு, 1998ல் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக லோக்சபா எம்.பி.,யான இவருக்கு, புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf