"ஜெனரிக்' மருந்துகள்: மருந்து கடைக்காரர்களுக்கு கொழுத்த லாபம் தரும்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, "ஜெட்' வேகத்தில் உயரும் விலை உயர்வுக்கு, மாத்திரை, மருந்துகள் மட்டும் விதிவிலக்கா என்ன? காய்ச்சல், தலைவலிக்கு வாங்கும் பாரசிடமால் முதல், புற்றுநோய் ஹீமோதெரபி சிகிச்சைக்கு உதவும் மருந்துகள் வரை, கடந்த 10 ஆண்டுகளில் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சராசரி இந்தியர்கள் மருத்துவத்துக்கு செலவிடும் தொகையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என, ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில், தொற்று நோய்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

"சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் இந்தியா', என்ற அபாயகரமான சூழல் உருவாகி வருகிறது. இந்த நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போட வேண்டியது அவசியம். இதனால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை மருந்துக்காக செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் நீண்ட காலம் சிகிச்சைக்கான மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, "ஜெனரிக்' மருந்துகள் எனப்படும் "பிராண்ட் நேம்' இல்லாத மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசு அனுமதிக்க அளித்தது.

ஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தை, வேறொரு நிறுவனம், சிறிய மாற்றங்களுடன் வர்த்தக பெயர் இல்லாமல், அதில், உள்ளடங்கிய மருந்தின் பெயரைக் கொண்டு விற்பனை செய்வதே ஜெனரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, "கால்பால்' பராசிடமால் மருந்தில், "கால்பால்' என்பது வர்த்தக பெயர். இதில் "பாரசிடமால்' என்பது மருந்து. வர்த்தக பெயர் இல்லாமல், மருந்தின் பெயரான, "பாரசிடமால்' என குறிப்பிட்டு விற்கப்படுவதே ஜெனரிக் மருந்து. பிரதான மருந்தின் காப்புரிமை காலம் முடிந்த பிறகே, ஜெனரிக் மருந்துகளை தயாரிக்க முடியும். ஏற்கனவே ஒரு நிறுவனம் தயாரித்த மருந்தை, கிட்டத்தட்ட காப்பி அடித்து மீண்டும் தயாரிக்கும்போது உற்பத்தி செலவும் கணிசமாக குறைகிறது.

இதனால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. நுகர்வோர் பயனடைய வேண்டும் என்பதற்காக ஜெனரிக் மருந்து அனுமதிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது நடக்கவில்லை. "ஸ்டாக்கிஸ்ட்' குமார் என்பவர் கூறும்போது, "பிராண்ட் நேம்' மருந்துகளின் அடக்க விலை 7 ரூபாய், விற்பனை விலை 10 ரூபாய். அதேவேளையில், ஜெனரிக் மருந்து அடக்க விலை 3 ரூபாய்தான். ஆனால் 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இடையில் உள்ள 5 ரூபாய் வியாபாரிகளுக்கு சென்று விடுகிறது. சில மருந்துகளில் 80 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய பயன், சில்லறை வியாபாரிகளுக்கும், ஸ்டாக்கிஸ்ட்களுக்கும் சென்று விடுகிறது' என்றார்எனவே, உற்பத்தி செலவுக்கு மேல், 20 அல்லது 25 சதவிகிதம் லாபம் கிடைக்கும் வகையில் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், இந்த மருந்துகளை மொத்தமாக வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், மருந்து ஸ்டாக்கிஸ்டுகள் தெரிவிக்கின்றனர். மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரைப்பதற்காக டாக்டர்களுக்கு பெரும் பணம் செலவு செய்வதும் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, டாக்டர்கள் மருந்தை பரிந்துரைக்கும்போது, "பிராண்ட் நேமை' எழுதாமல் மருந்தின் பெயரை மட்டும் எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, "டாக்டர்கள் மருந்தின் "பிராண்ட் நேமை' மருந்து சீட்டில் பரிந்துரைக்க, தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க, மத்திய அரசு குழு அமைந்துள்ளது. அந்தக் குழு அறிக்கையின், அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்' என்றார். பெரம்பூரை சேர்ந்த ஸ்டாக்கிஸ்ட் மோகன் கூறும்போது, "ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய ரசாயன துறை அமைச்சராக இருந்தபோது, அத்தியாவசிய மருந்துகள் என கருதப்படும் 350 மருந்துகளை பட்டியலிட்டு, குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுத்தார். அதுபோல், இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் .

மருந்து வாங்குவதில் உள்ள ஆபத்து : டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல், நேரடியாக மருந்து கடைகளில் மாத்திரை, மருந்துகளை வாங்குவது ஆபத்தானது. பெரும்பாலான மருந்து கடைக்காரர்கள், தரம் என்பதை விட, தனக்கு அதிக லாபம் தரும், தரம் குறைந்த மருந்தையே கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும், மருந்துகளை எடுத்துக் கொடுக்க, மருந்தாளுனர் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற தகுதியான நபர், மருந்து கடைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. கடை ஊழியர், தனது அனுபவ அறிவைக் கொண்டே, மருந்துகளை எடுத்துக் கொடுக்கிறார். கவனக் குறைவாகவோ அல்லது தெரியாமலோ, மருந்தை மாற்றிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும். அதுபோல், "டாக்டர் சீட்டில் குறிப்பிட்டுள்ள மருந்து இல்லை. அதே வகையான மருந்து தான் இது' என்று மருந்து கடைக்காரர் கொடுக்கும் மருந்தை வாங்கக் கூடாது. தரம் குறைந்த, தனக்கு அதிக கமிஷன் கிடைக்கும் மருந்தை, அவர் கொடுக்க வாய்ப்புள்ளது.

நன்றி - தினமலர்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf