Jayalalitha Calls for calm among Keralites in Mulla Periyar Issue | அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது - முதல்வர் ஜெயலலிதா

Jayalalitha Calls for calm among Keralites
கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது. சிக்கலான தருணங்களில், மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை அடைவது இயல்பே. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, அவர்களை அமைதிப்படுத்துவது, பொறுப்புள்ளவர்களின் கடமை. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்று, உடைந்து, இடுக்கி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சந்தேகிப்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. அணை மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு, சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப வல்லுனர்களாலும், மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Jaya Tells Keralites/a>

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை சந்தேகிக்க வேண்டியதில்லை. காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும், நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. இந்த விவரங்கள் எல்லாம், கேரளாவில் உள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தும், சில அற்ப காரணங்களுக்காக, பெரியாறு அணை தொடர்பான பீதியைக் கிளப்பத் துணிந்துள்ளனர்.

கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலம். இன்னும் சொல்லப் போனால், 1950 வரை இரண்டும் ஒரே மாநிலமாக இருந்தவை. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள். கேரளாவில் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றனர். அதை விட அதிகமான எண்ணிக்கையில், தமிழகத்தில் மலையாளிகள் இருக்கின்றனர். இதுவரை இவர்கள் அனைவரும், மெச்சத்தகுந்த சகோதரத்துவத்தோடும், ஒத்துழைப்போடும் தான் வாழ்ந்திருக்கின்றனர். கேரள சகோதர, சகோதரிகளின் அழிவை தமிழக அரசோ, மக்களோ ஒருபோதும் விரும்ப மாட்டர். நூறு சதவீதம் உறுதியாகத் தெரிவதால் தான், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வருகிறோம். பல நூறாண்டுகளாக, இரு மாநில மக்களுக்கு இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன். எந்த மக்களின் கூர்மை, கல்வி, பகுத்தறிவு மற்றும் கடும் உழைப்பின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேனோ, அந்த கேரள மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf