Heart Attack-Stroke without Pain: வலியின்றி வரும் மாரடைப்பு

வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு கண்டறிவது?
மூன்று இரத்தக் குழாய்கள் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்பு சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
நடுத்தர வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும். அது பரவலாக இருக்கும். இடது தோள்பட்டை மற்றும் இடது கை உள்புறம் பரவும். பின்பு வலதுகை மற்றும் முதுகிற்கும் வலி பரவிச் செல்லும். நெஞ்சில் ஏற்பட்ட வலி கழுத்து பக்கவாட்டிலும், தாடைக்கும் செல்லும். இத்தோடு உடம்பு சில்லென்று வியர்த்துக் கொட்டும். மயக்கமும், வாந்தியும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள், முதுமைக்காலத்தில், ஒருசிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும். பலருக்கோ, நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படும். அதாவது நெஞ்சில் வலி ஏதுமின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்றவையே மாரடைப்பின் அறிகுறிகளாய்த் தோன்றும்.
மேலும் சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சு வலியோ அல்லது மாரடைப்பைச் சார்ந்த எந்தவிதத் தொல்லைகளுமே இருக்காது. ஆனால், ஈ.ஸி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவரும். இதை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறுவோம். முக்கியமாக நீண்ட காலம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறிவுத்திறன் வீழ்ச்சியினால் மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு மிக அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வலிமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோத்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் திடீரென்று மற்ற உறுப்புகளுக்குக் குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவையும் அதிகம் வரும். நெஞ்சுப் பகுதியில் இனம்புரியாத ஒரு வேதனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி. இரத்தப் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்ன சிகிச்சை?: மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா? பைபாஸ் சர்ஜரியா?
சுமார் 70 - 80 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாரடைப்பிற்குப் பின்பு நெஞ்சு வலியோ மூச்சு வாங்குவதோ இல்லையென்றால் மருந்துகள் மூலமாகவே நல்ல பலன் கிடைக்கும்.
சுமார் 60-70 வயதுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் பி.பி., கொழுப்புச்சத்து போன்றவற்றோடு அடிக்கடி நெஞ்சில் வலியும் ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியா பிளாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும். ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயின் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை.
இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலூனை விரிவடையச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6-12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரி சோதனை செய்து அதற்குத் தக்கவாறு மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம்.

பைபாஸ் சர்ஜரி:
இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோ கிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். முதுமைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து இரண்டு இரத்தக் குழாய்களுக்கு மேல் அடைப்பு இபுருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலை பளுவினால் ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு முறையோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆகையால் வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா அல்லது பைபாஸ் சர்ஜரியா என்பதை அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்?
மாரடைப்பு எல்லோருக்கும் வருவதில்லை. குடும்பத்தில் (இரத்த சம்பந்தப்பட்ட உறவு) யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், நீரிழிவு நோய், பி.பி., இரத்தத்தில் கொழுப்புச் சத்து மற்றும் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்கள், பதற்ற ஆசாமிகள், புகைபிடிப்பவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கண்ட தொல்லைகளுக்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன் தினமும் செய்யும் உடற்பயிற்சி, நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் தியானம் போன்றவை மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.

டாக்டர். வி.எஸ். நடராஜன், மூப்பியல் மருத்துவர்.
டாக்டர் பி.ஸி.ராய் தேசிய விருது பெற்ற இவர், முதியோர்களின் மறதிக்கு சிறப்பு சிகிச்சையளிக்க நினைவாற்றல் மையம் அமைத்து அதற்கு தக்க சிகிச்சை அளித்து வருகிறார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf