முல்லைபெரியாறு அணை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் அனுமதி

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று வழங்கியது. இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், தமிழக அரசிற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

முல்லை பெரியாறு அணை வழக்கு : 

பாதுகாப்ப கருதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு மாறாக, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து நடவடிக்கை எடுத்த கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு ஏற்றவாறு கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு மாநில அரசின் முடிவுகளில் அண்டை மாநிலங்கள் தலையிடக்கூடாது என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனந்த் குழு ஆய்வு : 

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், அணை மிகவும் பலமாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தரப்பட்டது. நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை அளித்த பின்னரும், கேரள அரசு தனது போக்கில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. இந்த அறிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு புதிய குழுவை நியமிக்க வேண்டுமென கோர்ட்டில் வலியுறுத்தியது. கேரள அரசின் இந்த வாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் நியமித்த இந்த குழுவானது ஏசி அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், நேரடியாக களத்தில் இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்தனர் என்றும் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ந் தேதி முடிவடைந்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.இதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் முல்லை பெரியாறு பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

முல்லை பெரியாறு அணை தீர்ப்பு முழு விவரம்: 

முல்லை பெரியாறு அணையின் மட்டத்தை 142 அடிகள் வரை உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது குறித்து, தலைமை நீதிபதி லோதா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பு விவரம்: முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், கேரள அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. எனவே, அந்த சட்டம் செல்லாது. அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லை பெரியாறு திட்டத்தில் புதிய அணை கட்டவும் கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது-ஜெ.: 

முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த தீர்ப்பு மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது. தென்தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்,' என்று கூறி உள்ளார். 

விவசாயிகள் தரப்பில் வரவேற்பு: 

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பை, முல்லை பெரியாறு மீட்பு குழு வரவேற்றுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறி உள்ளது. 
பொதுப்பணி துறை விரைந்தது: முல்லை பெரியாறு அணை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு விரைந்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்த நகல் கிடைத்தவுடன், உடனடியாக அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தேவையான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அணையின் உயரம் 136 அடியாக உள்ளது. 

இடுக்கியில் நாளை கடையடைப்பு: முல்லை பெரியாறு அணை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, கேரள மாநிலம், இடுக்கியில் நாளை முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முல்லை பெரியாறு வழக்கு கடந்து வந்த பாதை: 

கடந்த 1887 – 1895: கேரள மாநிலம் இடுக்கியில் 1887 முதல் 1895 வரையிலான காலக்கட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. அணை கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும், பராமரிப்பும், இயக்கமும் தமிழகத்தின் வசமே இருக்கிறது. அணையின் கிழக்கு பகுதியில் உள்ள தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரத்தை தருவதே இந்த அணை கட்டபட்டதன் நோக்கமாகும். திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் – சென்னை மாகாண அரசுக்கும் இடையே 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது 152 அடி வரை நீர் தேக்கப்பட்டது.

1979 ஆக., : குஜராத் மாநிலத்தில் உள்ள மொர்பி அணை உடைந்து பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை அருகே, 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அணை உடையும் ஆபத்து உள்ளதாக கேரள புவிவியல் ஆய்வு மையம் தகவல் தந்தது. 

1979: அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறி கேரள அரசு, நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது. அணையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பின், மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு கூறியது. ஆனால் பராமரிப்பு பணி முடிந்தும் மீண்டும், நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு. 

2006: இந்த வழக்கில் 142 அடியாக உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. மராமத்து பணிகள் முடிவடைந்த பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. 

2006 மார்ச் 18: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், அதை ஏற்க மறுத்த கேரள அரசு, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு திருத்த சட்டம் ஒன்றை இயற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குறைவான தண்ணீரே தேக்கிவைக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியை சந்திப்பதாக தமிழக அரசு வாதிட்டது.
 
2007 டிச., 19: அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும் -கேரள முதல்வரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்பு விவாதித்தனர். 

2009 அக்., : முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஐஐடி ரூர்கியைச் சேர்ந்த வல்லுனர் குழு, 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் அணைப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டால், அணைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அறிக்கை கொடுத்தது. 

2010 பிப்., 18: அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக , சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. 

2012 ஏப்., 25: பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வல்லுனர் குழு அறிக்கை அளித்தது. 

2013 ஆக., 13: இறுதி விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

2014 மே 7: அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்றும் கோர்ட் கூறி உள்ளது. 


தலைவர்கள் வரவேற்பு: தி.மு.க,, தலைவர் கருணாநிதி அளித்த பேட்டியில், 'முல்லை பெரியார் அணை குறித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றார். தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்த தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், என கூறி உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நீதிக்கு கிடைத்த தீர்ப்பு என்று கூறி உள்ள ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தீர்ப்பை வரவேற்பதாக கூறி உள்ளார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf