Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது

Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம்... காதல். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து... லேட்டஸ்ட் இணையதளங்கள் வரை காதல் எங்கேயும் இடம் பிடித்திருக்கிறது.

இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை. 'கலைகளிலேயே உன்னதமான கலை... சினிமா' என்பார் ரஷ்யப் புரட்சிக்காரர் லெனின்.

அந்த சினிமாவிலும் காதலே கதையின் தளம். டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை ஒரு காவியமாக எடுத்த ஹாலிவுட், அதன் பிரதான அடிப்படையாக ஒரு காதலைத்தானே சொன்னது!

காதலைப் பற்றி ஆயிரக்கணக்கான படங்கள் உலகின் அநேக மொழிகளில் வெளிவந்து அழியாப் புகழைப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட  உன்னதமான படங்களில் ஒன்றுதான் பிரபல இரானிய இயக்குநர் மஜீதி மஜீத் இயக்கிய 'பரன்’!

'பரன்’ என்கிற வார்த்தைக்கு 'மழை’ என்று பொருள். இது ஒரு கவிதைத்துவமான காதல் கதை. ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இரான் நாட்டு தலைநகரான டெஹ்ரானின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆப்கன் அகதிகளின் முகாம்கள் இருக்கும். தலிபான் அரசாங்கத்தின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், அங்கேதான் பல சிரமங்களிடையே வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். அதிகாரப்பூர்வமான அனுமதி அட்டை இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள்.

டெஹ்ரான் நகரத்தில் குறைந்த கூலிக்கு இப்படி கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கும் அகதிகளுக்கு... டீ, சாப்பாடு தரும் வேலையில் இருப்பான் உள்ளூர் குர்தீஷ் இளைஞனான லத்தீஃப். சுலபமான வேலை என்பதால் ஜாலியாகப் பொழுதை ஓட்டுவான்.

எல்லோரையும் கலாட்டா செய்தபடி இருப்பான். கட்டட வேலையில் இருக் கும் ஆப்கன் அகதி ஒருவர் விபத்தில் சிக்கி, காலில் அடிபட்டதால், தனக்குப் பதிலாக தன் இளம் மகனை வேலைக்கு அனுப்புகிறார். ரஹமத் என்னும் அந்தப் பையன் மிகவும் மென்மையாக இருக்கிறான்.

கடினமான வேலைகளை அவனால் செய்ய முடியாது என்று நினைக்கும் முதலாளி, டீ கொடுக்கும் வேலையில் அவனை போட்டுவிட்டு, லத்தீஃபை கட்டட வேலைக்கு மாற்றுகிறார்.

சுலபமான வேலை பறிபோனதால் கடுப்பான லத்தீஃப், ரஹ்மத்தை வம்பு செய்து கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில்... ரஹ்மத் ஆண் அல்ல பெண் என்பதும், அவளுடைய உண்மையான பெயர் பரன் என்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது.

பெண்கள் இதுபோல் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. ரஹ்மத்திடம் முறையான அனுமதி அட்டையும் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் அவளுக்குப் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்பதால்தான் ஆண் வேடமிட்டிருக்கிறாள். இது தெரிந்த பிறகு, லத்தீஃபுக்குப் பாவமாகிவிடுகிறது. இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் மற்ற ஆண்களிடமிருந்தும் அவளைக் காப்பாற்றுவதே அவனுக்கு வேலையாகிறது.

ஒரு பிரச்னையில் எல்லா ஆப்கன்காரர்களையும் வேலையைவிட்டே நீக்கி விடுகிறார் முதலாளி.  பரனைத் தேடி அவளுடைய அகதி முகாமுக்குப் போகிறான் லத்தீஃப். அங்கே காணும் காட்சிக ளும், பரனின் மேல் அவன் காதல் வயப்படும் காட்சிகளும் அற்புதமாக படம்பிடிக்கப்பட்டிருக் கின்றன. மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பரனின் குடும்பம். ஆனால், அவர்களிடம் பணம் இல்லை. தன்னுடைய அனுமதி அட்டையை விற்று, அந்தப் பணத்தை அவர்களிடம் தருகிறான் லத்தீஃப்.

பரன், லத்தீஃப்பிடம் விடைபெறும் கடைசி காட்சி கவிதை போல் எடுக்கப்பட்டிருக்கும். வெளியே சொல்லாத காதலுடன், ஒரு டிரக்கில் பரன் கிளம்ப, லத்தீஃப் கையசைக்க, அவளுடைய பெயரைச் சொல்வது போல் அப்போது மழை பொழிய ஆரம்பிக்கும். அரசியல் மற்றும் சமூக இன்னல்களிடையே ஒரு காதல் சத்தமின்றி நசுக்கப்படுவதை அதிக வசனம் இன்றி வெறும் விஷ§வலாகவே அழுத்தமாகச் சொன்ன அருமையான படம்... 'பரன்’.

காதல், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. பழைய குடிசையில் வாழும் ஏழை விவசாயிக்கும் காதல் உண்டு. அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ், ஜென்னி -  மார்க்ஸ் என்று புகழ் பெற்ற ஜோடிகள் சரித்திரத்தில் இருந்தாலும், பாடப்படாத காவிய காதல்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.

காதல் என்பதற்கு திட்டவட்டமான தியரி கிடையாது. மனிதனின் ஆதார இனப்பெருக்கத்துக்காக ஆண் - பெண்ணிடையே இயற்கை தோற்றுவிக்கும் இனக்கவர்ச்சிதான்... காதல். அறிவியல், காதலைப் பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் போன்ற ரகளையான நரம்பு வழி ரசாயனம், ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது (இதைத்தான் 'ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்).

ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலர்களின் ஃபேவரைட்டான சாக்லேட்டில் இது நிறைய உண்டு), அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கைகோத்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து, படபடவென்று அடித்துக்கொள்கிறது.

ஆண் - பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.
இதெல்லாம் அறிவியல் பார்வை. இதைத் தாண்டி இலக்கியப்பூர்வமான, கவிதைத்தனமான, இதிகாசத்தனமான காதல்கள் உண்டு. எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

''நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போது உங்களால் தூங்க முடியாது. ஏனென்றால், காதலின் நிஜம் என்பது நீங்கள் தூக்கத்தில் காணக்கூடிய கனவுகளைவிட சுகமானது, ஆச்சர்ய மானது!'

'காதலுக்கு இனிமையான முடிவு என்பது கிடையாது. ஏனென்றால் காதலுக்கு முடிவு என்பதே கிடையாது!'

- இப்படி காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ பார்வைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!

ஆகவே தோழிகளே... வாழ்க்கையின் அடிப்படை சூட்சமம் என்னவென்று தெரிகிறதா? ரொமான்ஸ்! அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது உங்கள் கண்ணீரில் ஆனந்தத்தை வரவழைக்கும்.

இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தும். துன்பங்களை விரட்டியடிக்கும் துணிவைத் தரும். தனிமையை தலைதெறிக்க ஓடவிடும். உங்கள் மனம் மற்றும் உடல் பிரச்னைகளை அற்புத மருத்துவமாகிக் காப்பாற்றும்.

காதலில்லாத மனித சரித்திரம் இல்லை. இலக்கியம், கலைகள் இல்லை.
உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான்.

Subscribe to our mailing letter for more articles like this Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf