Relatives and relations சொந்தங்கள் & பந்தங்கள்

கடந்து வந்த காலத்தை இப்போது திரும்பி பார்த்தால் எதையெதை
தொலைத்திருக்கிறோம் என்பது புலப்படும். சில தொலைப்புகள் ஈடுகட்ட
முடியாதவை. சிலவற்றையோ இப்போது நினைத்தாலும் முடிந்தவரை ஒட்ட வைத்துக்
கொள்ளலாம். அப்படி மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடிய இடத்தில் இருப்பது,
உறவுகள். ஆமாம், நாம் விட்டுச் சென்ற உறவுகள்.

கண்டு கொள்ளாமல் போன உறவுகள். உதாசீனப்படுத்தி விட்டுப்போன உறவுகள்.
இன்றைக்கும் பல கிராமங்களில் பார்த்தால் நம்மை பிரமிப்புக்குள்ளாக்குவது
கட்டுக்கோப்பான கூட்டுக் குடும்பங்கள் தான். தாத்தா இருக்கும்வரை அவர்
வாய்ச்சொல்லே அந்த குடும்பங்களுக்கு வேதம். அவர் குரல் உயரும்போது
மற்றவர்கள் காதுகள் தான் திறந்திருக்குமே தவிர, வாய்கள் மவுனம்
பூண்டிருக்கும்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த காலங்கள் இப்போது அருகி வருவது தான்
வேதனை. தங்கள் குடும்பங்களை விட்டு அவர்கள் வாரிசுகள் எப்போது வேலை
நிமித்தம் இடம் பெயர்ந்தார்களோ, அப்போது முடிவுக்கு வரத்தொடங்கியது
கூட்டுக் குடும்பங்களின் பாரம்பரியம். இப்படி இடம் பெயர்ந்து போனவர்கள்
தனித்து வாழத்தொடங்கிய கால கட்டத்தில் பாசத்தில் உயிரோடு உருகினார்கள்.

அந்த அளவுக்கு பந்தபாசம் அவர்களை பிணைத்திருந்தது. உறவுகளோடு
இணைத்திருந்தது. தொலைத்தொடர்பு வசதிகள் இன்றைக்கு இருக்கிற மாதிரி
அந்நாட்களில் இல்லை. வெறும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்குள் இணைப்புப்
பாலமாய் இருந்தது. வலுவுள்ள அந்த சொந்தங்கள் இன்றைக்கு காணாதே
போய்விட்டது என்பது தான் வேதனை.

இத்தனைக்கும் விரல் நுனியில் எண்களை அழுத்தினால் அடுத்த சில
மணித்துளிகளில் உலகின் எந்த மூலையில் இருப்பவரை வேண்டுமானாலும் தொடர்பு
கொண்டு பேச முடியும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் செய்து
வைத்திருக்கும் மாயம், கைவசம் செல்போன்கள் வடிவில், லேப்டாப் வகையில்,
ஈமெயில்கள் வடிவில் இருந்தும், உறவுகள் தனித்தீவு போலாகி விட்டதன்
பின்னணி தான் என்ன?
தனியாக வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் தன்னைப் போல் தன் உறவு
வட்டங்கள் மீதான ஈர்ப்பையும் சுருக்கிக் கொண்டு விட்டது தான் காரணம்.
தன்னைப் பற்றி மட்டுமே அவன் எப்போது யோசிக்கத் தொடங்கினானோ அப்போதில்
இருந்தே அறுபடத் தொடங்கி விட்டன, உறவுச் சங்கிலிகள்.

இதில் வேதனை என்னவென்றால், எப்பேர்ப்பட்ட உறவுகளையெல்லாம் இன்றைக்கு நாம்
இழந்திருக்கிறோம் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவும் நேரம் இல்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பது தான். இன்னொரு கோணத்தில் உறவுகள்
தொடர்கதையாக அல்லாமல் சிறுகதையாக முடிந்து போவதற்கு காரணம்,
ஏற்றத்தாழ்வுகள். சாதாரண நிலையில் இருந்த உறவினர் திடுமென தொழில்
துறையில் வளர்ந்து சில ஆண்டுகளில் கோடீசுவரனாகி இருப்பார்.

ஆனால் ஊரில் உள்ள உறவுகள் மட்டும் அப்படியே இருப்பார்கள். விவசாயம்
பொய்த்தால் இவர்கள் கடன் வாங்கித்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய
நிலை. இப்படி அனுதினமும் போராட்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள்
எப்போதாவது தங்கள் கோடீசுவர உறவினரை பார்க்கப் போனால் பெரும்பாலும்
அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது.கேட்டில் நிற்கிற காவலாளி இவர்கள்
தோற்றம் பார்த்து உள்ளேஅனுமதிக்கவே மறுக்கிறார்.
ஒருவழியாக போய் சந்தித்து விட்டாலும் கூட பெரிதாக ஒன்றும் நடந்து
விடுவதில்லை. உபசரிப்பு முடிந்து குடும்பம் பற்றி பேச்சு வந்தால் 'ஒரு
பொண்ணு மட்டும் கல்யாணத்துக்கு நிக்கிறா' என்று இவர்கள் சொல்லப் போக,
அப்போதே கோடீசுவர உறவினர் குடும்பம் 'கப்சிப்'பாகி விடுகிறது. தொடர்ந்து
அதுபற்றி பேசினால் கல்யாணத்துக்கு உதவி ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று
பயந்து அத்துடன் நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. உறவினர் குடும்பத்தில் ஒருவருக்கு
உதவி விட்டால் மற்ற உறவினர்களும் அவர்களை நோக்கி படையெடுத்து
விடுவார்கள். இதில் கொடுமை, ஓரளவு வசதியான உறவினர்களும் கிடைத்த வரை
லாபம் என்ற கண்ணோட்டத்தில் தங்கள் பரிவாரங்களுடன் போய் வசூல் செய்து
விடுவார்கள்.

தங்கள் தேவைகளை முடிந்தவரை தாங்களே சரி செய்து கொள்ள முடியும் என்ற
நிலையில் இருப்பவர்களும் 'சும்மா கிடைப்பதை ஏன் விட வேண்டும்' என்ற
எண்ணத்தில் இப்படி வலியப்போய் உதவி பெற்று, இருக்கிற உறவுகளை கெடுத்துக்
கொள்கிறார்கள். இது நல்லதல்ல...நாம் கட்டிக் காக்க வேண்டிய உறவை நம்
அதிகபட்ச ஆசைக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இவர்களுக்கு யார்
எடுத்துச் சொல்வது?

தொலைதூரத்தில் உள்ள உறவுகள் பலவும் தொடர்பில்லாமல் துவண்டு போய்க்
கிடப்பதும் நடக்கிறது. தென் மாவட்ட மக்கள் இதில் விதிவிலக்காக
இருக்கிறார்கள். தொலை நகரங்களில் நெல் லிக்காய் மூட்டை போல் சிதறிக்
கிடக்கிற இந்த உறவினர்கள் பலரும் தங்கள் ஊரில் திருவிழா, குடும்ப
விசேஷங்கள் என்றால் உடனே இறக்கை கட்டியாவது ஊர் போய் சேர்ந்து
விடுவார்கள்.

ஊரில் இருக்கிற கொஞ்ச நாட்களில் உறவுக் குடும்பங்களோடு தடைபட்டுப்
போயிருக்கும் உறவுகளை இப்படி அவ்வப் போது புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான பிணைப்புகள் கூட ஒரு தலை முறையோடு முடிந்து விடுகிறது
என்பது உறவு நேசர்களுக்கு கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.
அவர்கள் பிள்ளைகளின் கல்யாணம் வரை நீடிக்கும் இந்த உறவுகள், அப்புறமாய்
அவர்கள் பிள்ளைகள் மூலம் கிடைக்கும் புதிய சொந்தத்துக்குள் அடியெடுத்து
வைக்கும்போது அதுவரை கட்டிக்காத்த உறவுகள் இரண்டாம் பட்சமாகி விடுகிறது.
திருமண மான மகளை ஊர்த்திருவிழாவுக்கு அழைத்தால், 'அடுத்த மாசம் என்
வீட்டுக்காரர் ஊரில் திருவிழா. அங்கே போக வேண்டியதிருக்குமே' என்று
தயங்குவாள்.

இந்த தயக்கம் இனி அவளுக்கென்று புதிய வாழ்க்கை, புதிய சொந்தம்... அதை
நோக்கி அவள் போய்க்கொண்டிருக்கிறாள் என்பதையே காட்டுகிறது. நகர
வாழ்க்கையில் இந்த உறவுகள் இன்னும் தலைகீழ். இந்த மக்கள் பலரும்
கிடைக்கிற நட்புக்குள் இருக்கிற கொஞ்ச உறவுக்குள் தங்களை சுருக்கிக்
கொள்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று எண்ணத்தில் ஒரு
பெரியவர் தனது நகர உறவினரின் இல்லம் தேடி வந்தார். படித்து ஊரில்
ஆசிரியராக வேலை பார்க்கும் தனது மகனுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணைக்
கேட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல வசதியானவர். நகரக் குடும்பமோ நடுத்தர
வசதி கொண்டது தான்.

என்றாலும் நகரம் கைவிரித்து விட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்
இன்னும் அபத்தமானது. 'நகர வாழ்க்கைக்கு எங்கள் பெண் பழகி விட்டாள்.
அவளால் கட்டுப்பெட்டியாய் கிராமத்தில் வாழ முடியாது. வேணும்னா வேலையை
சிட்டி பக்கமா மாத்த முடிஞ்சா அப்ப வாங்களேன். பேசுவோம்...' சுக வாசியாய்
யோசிக்கத் தொடங்கி விட்ட இவர்களைப் போன்றவர்கள் தான் விட்டுப்போன உறவுகளை
ஒரேயடியாய் கெட்டுப்போன உறவுகளாக ஆக்குகிறவர்கள்.

எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத சொந்தங்கள் மட்டுமே கேட்காமலே வந்து
உதவும். கவ லைப்படும் நேரத்தில் அள்ளியணைத்து ஆறுதல் தரும்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு மட்டுமே இப்படி கேட்காமலே ஓடிவந்து உதவும்.
இந்த சொந்தங்களுக்குள் ஒருபோதும் பண பாகுபாடோ, மன வேறு பாடோ
இருப்பதில்லை. இந்த மாதிரியான உறவுகள் இருக்கிறவரை எத்தனை தூரத்தில்
இருந்தாலும் நீடித்து நிலைத்திருக்கும் பந்தங்கள் என்பது மட்டும் உறுதி.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf