Rajastan and Camels | ஒட்டகமும் ராஜஸ்தானும்

ராஜஸ்தான் என்றதுமே, "பளிச்'சென நினைவுக்கு வருவது, பாலைவனம். பறவைகள்
கூட பறக்கத் தயங்கும் பாலை சூழலில், நம்மை பொதி சுமக்கும் ஆபத்பாந்தவன்
ஒட்டகம். அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு
வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, "வேடிக்கை' பொருள்.
குறை நம்முடையதல்ல; ஆடு, மாடுகளை பார்த்துப் பழகிய நமக்கு, எங்கிருந்தோ
வரும் ஒட்டகங்கள், காட்சிப் பொருளாய் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
"நமக்கு' என குறிப்பிட்டதில், ஒரே ஒரு மாநிலம் மட்டும், "விலக்கு'
பெறுகிறது; அது தான் ராஜஸ்தான். தார் பாலைவனம் சூழ்ந்த அழகிய மாநிலம்;
ஒட்டகம் தான், அவர்களின் பெட்டகம்.

கலாசாரத்திலும், காலநிலை யிலும் மாறுபடும் இந்திய மாநிலங்களின்
சிறப்புகளில், ராஜஸ்தானை சிறப்பு பெற வைத்த பெருமை, ஒட்டகங்களுக்கு
உண்டு.
தோற்றத்தில் அருவருப்பு இருந்தாலும், ஒட்டகத்தின் செயலில் சுறுசுறுப்பு
இருப்பதால், ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில், வீட்டிற்கு ஒரு ஒட்டகம்
கட்டாயம் வளர்க்கின்றனர். 2 முதல் 3 "செல்சியஸ்' வெப்பநிலை வேறுபாட்டை
தாங்கும் சக்தி மனிதனுக்கு; 34 முதல் 41 செல்சியஸ் வரை வெப்பநிலை
தாங்கும் தன்மை ஒட்டகத்திற்கு; அதனால் தான், அவை பாலைவனத்தின், சூப்பர்
ஸ்டார்.

நம்மூரில், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு, பொங்கலிட்டு வழிபடுவது போல்,
ராஜஸ்தானில் ஒட்டகங்களுக்கு வேறு விதமான சிறப்பு செய்கின்றனர். "ஒட்டக
மேளா' எனப்படும் அத்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுக்க
நடக்கிறது. ஜோத்பூர் - ஜெய்சால்மர் வழியில், பொக்ரான் அருகே, அகோளை
கிராமத்தில் நடக்கும் ஒட்டக மேளாவில், உரிமையாளர்கள் பலர்
பங்கேற்கின்றனர்.

கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு, ஒட்டகங்களாய் காட்சி தரும் அங்கு,
"யாருடைய ஒட்டகம் சிறந்தது' என்ற போட்டி நடக்கிறது. அதற்காக போட்டி
போட்டு ஒட்டகங்களுக்கு ஒப்பனை செய்கின்றனர். பார்வையாளர்கள்
விரும்பினால், ஒட்டகங்களை விலைக்கு வாங்கிச் செல்லலாம். இருபதாயிரம்
ரூபாயில் தொடங்கி, அறுபதாயிரம் ரூபாய் வரை, தோற்றத்திற்கு ஏற்ப, விலை
நிர்ணயிக்கின்றனர்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு ஒட்டகங்களை இறைச்சிக்கு
பயன்படுத்துவது இல்லை என்பதால், வாங்குவோரும், விற்போரும், விவசாய
நோக்கில் தான், வாங்குகின்றனர். பல்லை பிடித்து பார்ப்பது, ஒட்டக சவாரி
செய்வது போன்ற சோதனைகளுக்கு பிறகே, வாங்கும் விவசாயி திருப்தி அடைகிறார்.

இடைத்தரகர்களுக்கும், மோசடி வேலைகளுக்கும் இந்த மேளாவில் இடமில்லை.
ஒட்டகத்துடன் நின்று விடாமல், அவற்றை சார்ந்த பிற பொருட்களின்
விற்பனையும், தனித்தனியே நடக்கிறது. இதனால், அகோளை கிராமம், விவசாயிகளின்
கூட்டத்தால் மார்ச் மாதத்தில் நகரமாய் மாறி விடுகிறது.

மேளாவில் பங்கேற்க வந்த ஜெய்சால்மர் தாலுகா விவசாயி, ஸ்ரீபதி கூறும்போது,
"சிறுவயதில், என் அப்பாவுடன், மேளாவில் பங்கேற்றிருக்கிறேன். பல நூறு
கி.மீ., தூரத்தில் இப்பகுதி இருந்தாலும், மேளாவில் பங்கேற்பதை, என் தந்தை
விடாமல் கடைபிடித்தார்.

"அவருக்கு பின், நானும் அதை தொடர்கிறேன். சிலர், ஒட்டகங்களை விற்க
வருவர்; சிலர், வாங்க வருவர்; சிலர், பராமரிப்பை அறிய வருவர். மேளா
தொடங்கிய, 15 நாட்களில், என் மூன்று ஒட்டகங்களும் விற்பனையாகி விட்டன.
எஞ்சியுள்ள ஒரு ஒட்டகமும் விரைவில் விற்றுவிடும்; இருப்பினும், மாதம்
முழுக்க, இங்கு இருந்து, நடப்பதை பார்த்துவிட்டு தான், ஊர்
திரும்புவேன்...' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf