Narthaki tamil movie review | நர்த்தகி விமர்சனம்

 'ஊரோரம் புளியமரம்’ வகையறாப் பாடல்களுக்கு கேலிப் பொருளாக மட்டுமே பயன்பட்டு வந்த திருநங்கை சமூகத்தைப்பற்றி நேர்மறையாகப் பேசுகிறாள் இந்த 'நர்த்தகி’. வணிக  நோக்கம் தவிர்த்த, இந்த முயற்சிக்காகவே இயக்குநர் விஜயபத்மாவுக்கும் தயாரிப்பாளர் கீதாவுக்கும் வாழ்த்துக்கள்!

தன் ஒரே மகன் தன்னைப்போல சிலம்பு வீரனாக வளர வேண்டும் என்று நினைக்கும் தந்தை, கணவன் காட்டுவதே உலகம் என்று தனது ஆசாபாசங்களைக்கூட புதைத்துக்கொண்டு வாழும் அம்மா, விவரம் புரிந்த வயதில் இருந்தே தன்னைக் கணவனாக மனதில் பதித்துக்கொண்டு வாழும் மாமன் மகள்... இப்படி ஒரு சூழலில், ஒருவன் தன்னைப் பெண்ணாக உணர்ந்தால்?

சிறுவன் சுப்பு மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்கிறான். பதின் பருவத்தில் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, மும்பைக்குச் சென்று திருநங்கையாக - கல்கியாக மாறுகிறான். கல்கி, திருநங்கைகள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு நடுவில், தன்னுடைய வாழ்வை எப்படி அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்கிறாள் என்பதே கதை.

சமூகம் கவனிக்க மறந்த அல்லது மறுக்கும் ஒரு தளமே, கதைக் களம். ஆனால், ஆவண நேர்த்தியும் இல்லாமல், கமர்ஷியல் சேர்த்தியும் இல்லாமல் திண்டாடுகிறது திரைக்கதை!

சின்ன வயது கல்கியாக வரும் அபிஷேக், பதின் பருவ அஸ்வின், இள வயது ஸ்வாதி, கல்கி என ஒவ்வொருவரிடமும் வருங்கால திருநங்கைக்கான பரிணாம சமிக்ஞைகள் கச்சிதம். அதிலும் அபிஷேக்கின் விழி நடனமும், இடை வளைவுகளும் குழந்தைக் குறும்பாக வசீகரிக்கின்றன!

'திருநங்கை என்பவர் யார், திருநங்கை என்று தன்னை ஒருவர் உணரும் சமயம் சமூகம் அவர்களை எப்படி எதிர்கொள்கிறது, பால்மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?’ போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாள் நர்த்தகி. (இடையில் ஏன் பதின்பருவக் கல்கிக்கு உணர்ச்சியைத் தூண்டும் அந்த கவர்ச்சிப் பாடல்?)

சமூக அங்கீகாரத்துக்காகத்தான் திருநங்கை என்ற அடையாளம் தேடும் அவர்களின் தேடுதலை உண்மைக்கு மிக அருகில் படம் பிடித்திருக்கிறார்கள்.  

'உடலை வெறுத்து சுமக்கும் வலி, உலகில் யாருக்கும் புரியாது...’ போன்ற வரிகளில் திருநங்கைகளின் வலியைப் படம் பிடிக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ஜி.வி.பிரகாஷின் இசை, படத்துக்கு நல்லது, கெட்டது எதுவும் செய்யாமல் கடந்து செல்கிறது.

வெடவெட, நெடுநெடு அஸ்வின் திருநங்கை கல்கியாக வரும்போது உயரம் குறைந்துவிடுகிறாரே! கல்கிக்கு ஏற்படும் காதல் தோல்விக்கு அப்படி ஓர் அசட்டுக் காரணத்தையா கற்பிக்க வேண்டும்? முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, பிறரிடம் அமெச்சூர் நடிப்பு.  

சமூகத்தின் சராசரி மதிப்பீடுகளில் தங்களை இருத்திக்கொள்ள விரும்பாத திருநங்கைகளைப்பற்றிய படத்துக்கு, மதிப்பெண் அளவீடு வேண்டாமே!

திருநங்கைகளின் உலகத்தைப் பதிவு செய்ததற்காகவும் அவர்களைப்பற்றி ஒரு புரிதலை உருவாக்கி இருப்பதற்காகவும் 'நர்த்தகி’யை வரவேற்கலாம்!

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf