Do we need Samach Cheer Kalvi Thittam | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன?

பள்ளிக் கல்வியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாநிலக் கல்வி திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வித் திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நான்கு வகையான கல்வித் திட்டங்கள், மாணவர்களை அடிப்படையிலேயே பிரிப்பதுடன், எதிர்காலத்தில் சமூக, பொருளாதார ரீதியாகவும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க வழி வகுக்கிறது என்ற குற்றச்சாட்டை, கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.இதை மாற்றுவதற்கு, ஒரே வகையான, தரமான கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பரவலாக குரல் எழுப்பப்பட்டது. இதையடுத்து, 2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.வகுப்பு வாரியாக, நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, பெரும் செலவில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு, சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மீதமுள்ள வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.பதவியேற்ற ஏழாவது நாளில், திடீரென சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து, ஜெயலலிதா அறிவித்தார். தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை என்றும், பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமான பாடத் திட்டங்களை உருவாக்க குழு அமைத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனால், வரும் கல்வியாண்டில் பழைய பாடத் திட்டங்களே மீண்டும் அமலுக்கு வருகின்றன.சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் என, பல தரப்பட்டவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர், அரசு நடவடிக்கையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

ராயப்பேட்டை, மாலதி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் உமா, தவமணி, கனிமொழி ஆகியோர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளி பாடத் திட்டங்கள் அளவிற்கு, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இல்லை. தனியார் பள்ளி பாடத் திட்டங்கள், ஒரு பொருளைப் பற்றி விரிவாகவும், ஆழமாகவும் எடுத்துக் கூறும் வகையில் இருக்கின்றன. அதைப்போல, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் அமையவில்லை. குறிப்பாக, அறிவியல், கணிதம் ஆகிய பாடத் திட்டங்கள் விரிவாக அமையவில்லை.மெட்ரிக் பாடத் திட்டத்தில், கணிதப் பாடம் இரு தாள்களாக இருக்கின்றன. பாடப் புத்தகங்களும் இரு தொகுதிகளாக உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஒரேயொரு பாடப் புத்தகம் தான். இப்படிப்பட்ட பாடப் புத்தகங்களை படித்தால், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாது. இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், மாணவர்களின் திறன் மங்கிப் போவதற்கு வழி ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக, இத்திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. புதிய அரசு அமைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்த்தனர். அதைப்போலவே, முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தனியார் பள்ளி மாணவி திவ்யா: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியிருக்கலாம். ஏனெனில், மெட்ரிக் பாடத் திட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. படிப்பு என்பது எளிதாக இருக்க வேண்டும்; சுமையாக இருக்கக் கூடாது. சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் மிகவும் எளிதாக இருக்கின்றன. இதனால், மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் படிக்கலாம்.மாணவி பீபி ஆயிஷா: சமச்சீர் கல்வித் திட்டத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆழமான, விரிவான பாடத் திட்டங்கள் தான் தேவை. தனியார் பள்ளிகளில் தரமான பாடத் திட்டங்கள் இருப்பதால் தான், தேசிய அளவில் நடக்கும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்.அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் பாலாஜி: சமச்சீர் கல்வித் திட்டம் தான் வேண்டும். வசதியின் அடிப்படையில், மாணவர்களை பல வகையாக பிரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அரசு பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் பல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தமிழில் பேசும் போது, தரம் தாழ்ந்தவர்கள் போல், கூனிக் குறுக வேண்டியிருக்கிறது. இதுபோன்று எந்தவித வேறுபாட்டையும் ஏற்படுத்தாமல், ஒரே தரத்தில் பாடத் திட்டத்தை கொண்டு வந்தால், அனைத்து மாணவர்களும் ஒரே சம அளவிலான தரம் உடையவர்களாக இருப்பர். சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

குமார் (பெற்றோர்): ஏழை, எளிய மாணவர்கள் முதல், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான பாடத்தை நடத்துவது தான் நியாயம். ஆளாளுக்கு ஒரு வகையான கல்வி முறை கூடாது.

பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது தான் சரியான முடிவாக இருக்கும். ஒரே பாடத் திட்டம், ஒரே சரி சமமான திறமையுள்ள மாணவர்கள், அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு ஆகியவை இந்த திட்டத்தால் தான் கிடைக்கும். நான்கு வகையான கல்வித் திட்டங்களை வைத்தால், மாணவர்களிடையே சம நிலையற்ற நிலை தான் நீடிக்கும்.அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் பி.டி.அரசகுமார்: தனியார் பள்ளிகளை பழி வாங்கும் நோக்கத்துடன், அவசரம் அவசரமாக தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தது. பெற்றோர், மாணவர்கள் விருப்பத்திற்கு மாறாக, சமச்சீர் கல்வித் திட்டத்தை திணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை, தற்போது நிறுத்தியதன் மூலம், மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் இருந்து ஜெயலலிதா மீட்டுள்ளார்.

15 நாளில் பாடப் புத்தகங்களை அச்சடிக்க முடியுமா?வரும் கல்வியாண்டில், பழைய பாடத்திட்டங்களே பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்காக, பழைய பாடப் புத்தகங்களை அச்சடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, 27ம் தேதியுடன் முடிகிறது. 15 நாளில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு, மாணவர்களுக்கு வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வளவு குறுகிய காலத்தில் அச்சிட்டு முடிப்பது சாத்தியமா என்பது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பாடப் புத்தக அச்சக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:பழைய பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான டெண்டர் இறுதி செய்வதற்கே சில நாட்கள் தேவைப்படும். ஒரு, "ரீம்' (500 ஷீட்டுகள்) அச்சடிக்க, ஏற்கனவே, அச்சகங்களுக்கு, 22 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இதே விலையில் பாடப் புத்தகங்களை அச்சிட முடியாத நிலை இருக்கிறது. அச்சகப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டியிருப்பதாலும், செலவு அதிகமாக ஏற்படுவதாலும், பாடப் புத்தகங்களை அச்சிட, ஏற்கனவே வழங்கிய தொகையை, 50 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என, அச்சக உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த தொகையை தமிழக அரசு தராத பட்சத்தில், ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி ஏற்படும்.அப்படியே உடன்பாடு எட்டப்பட்டாலும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கால அவகாசத்தில் அச்சிட்டு தருவது மிகவும் கடினம். முதற்கட்டமாக, 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் அச்சிட்டு தருமாறு கேட்கின்றனர். 60 முதல், 70 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க வேண்டும். அதற்குப்பின், இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும், "ஆர்டரை' கொடுக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

23 ஆயிரம் டன் பேப்பர் உபயோகம் : * சமச்சீர் கல்வி திட்டத்திற்காக, 23 ஆயிரம் டன் பேப்பர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டன், 50 ஆயிரம் ரூபாய் விலையில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருந்து, பாடநூல் கழகம் வாங்கியுள்ளது. இதற்காக, 177 கோடி ரூபாயை, பாடநூல் கழகம் கொடுத்துள்ளது.
* ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்காக, அச்சக நிறுவனங்களுக்கு, 103 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
* சென்னையில், எட்டு அச்சகங்கள், ஆந்திராவில், 13 அச்சகங்கள், கர்நாடகாவில் இரண்டு அச்சகங்கள், கேரளாவில் ஒரு அச்சகம் மற்றும் சிவகாசியில், 40க்கும் மேற்பட்ட அச்சகங்களில், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
* ஒவ்வொரு அச்சகத்திற்கும், 10 கோடி முதல், 15 கோடி ரூபாய் வரை, "ஆர்டர்' தரப்பட்டன.
* தற்போது, எட்டரை கோடி பாடப் புத்தகங்கள், மாவட்டங்களில் உள்ள பாடநூல் கழக குடோன்களிலும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
* இந்த புத்தகங்கள், ஏலம் மூலம் பழைய பேப்பர் வாங்குவோருக்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf