கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்

‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை; நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர். சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில் வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன் என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டனர்.

அப்போது ஜெயதேவர் சிறுவனாக இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை, தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம், கையெழுத்தும் வாங்கி விட்டார்.
கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன், ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார்.

அவர் வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.
நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து, ‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து எரிகிறது…’ என்று, பதறினான்.
அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய், தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன். அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும் பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில், தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார். ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம் அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’ என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன் செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும், நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf