Who are Angel Investors: ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்?

ஆரம்ப நிலை கம்பெனிகளில், பங்குகளிலோ அல்லது அதைச் சார்ந்த பத்திரங்களிலோ முதலீடு செய்யும் பணக்கார முதலீட்டாளர்களையே 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' என்று சொல்கிறோம்.
ஏஞ்சல் முதலீட்டாளர் களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர், பிஸினஸ் ஏஞ்சல்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண நிலைமையில் பிறந்து, பின்னர் தொழில்முனைவராக உருவெடுத்து, அதில் அபார வெற்றி பெற்று, பேரும், புகழும், பணமும் சம்பாதித்தவர்கள். ஆரம்பநிலை நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினம். பொருள் திரட்ட முடியாத காரணத்தால் பல இளம் தொழில்முனைவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதுண்டு. தாங்கள்பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக, வருங்கால தொழில்முனைபவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே இத்தகைய பிஸினஸ் ஏஞ்சல்களின் நோக்கம்.

ஏன் இவர்கள் சிறு கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும்?

தொழில் முனைந்து, அதை நன்கு வளர்ச்சி அடையச் செய்த ஆழ்ந்த அனுபவத்தால், பிஸினஸின் வளர்ச்சிப் பாதை யில் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றியும், அதை அணுகுகிற முறை பற்றியும் இவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதலீடு செய்தபின் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவி களை முடிந்தவரை செய்ய விருப்பப்படுவார்கள். இதைப் பல தொழில்முனைவர்கள் தேவையற்ற குறுக்கீடாக நினைக்கலாம்.

ஆனால், பெரும்பாலான சூழ்நிலைகளில் அது உண்மையில்லை. பிஸினஸ் ஏஞ்சல்கள் நிஜமாகவே தாங்கள் முதலீடு செய்த கம்பெனிகளுக்கு உதவி செய்யவே நினைக்கிறார்கள். உபத்திரவமாக இருக்க விரும்புவதில்லை.  தொழில் முனைவருடன் சுமூகமான உறவு இல்லை என்றால், அதனால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. முதலீட்டாளர்கள் போட்ட முதலீடு வீணாவது மட்டுமின்றி, அவர்கள் உதவி செய்ய நினைத்த நிறுவனமும் வெற்றி அடையாது.
இதனால், பிஸினஸ் ஏஞ்சல்கள் அவர்கள் முதலீடு செய்வதற்கு முன் அந்நிறுவனத்தின் பிஸினஸை பற்றி ஆராய்வதோடு, நிறுவனத்தைத் தொடங்கிய வருக்கும் தனக்கும் ஒத்து வருமா என்பதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்வார்கள்.

அவர்கள் உள்நோக்கம் என்ன?

தொழில்முனை பவர்களும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு முன், தங்களுடைய மனப்பக்கு வத்தையும் சற்று சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் சொல்லும் கருத்துக்களை தொழில் நன்மைக்கே என்று கருதி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு 'நானே ராஜா, நானே மந்திரி' என்று கருதும் நினைப்பு இருந்தால், ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெறாமலே இருப்பது நல்லது.


இரண்டாவது வகையினர், ஃபைனான்ஷியல் ஏஞ்சல்கள். இவர்கள் பெரும்பாலும் முனைப்பற்ற முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். முதலீடு செய்த நிறுவனத்தில் பிஸினஸ் ஏஞ்சல்கள்  போன்று அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கான நேரமோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வகை முதலீட்டாளர்கள் உரிமையாளரின் திறனின் மேல் உள்ள முழுநம்பிக்கையின் பேரில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால், நன்கு பரிச்சயமான நண்பர்கள் தொடங்கும் தொழிலிலோ அல்லது நெருங்கிய நண்பர் களின் சிபாரிசின்பேரில் வரும் கம்பெனிகளிலோ மட்டும்தான் முதலீடு செய்வார்கள்.

இப்படி உங்கள் தேவைக்கேற்ப உங்கள் முதலீட்டாளர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பிஜுவும் அதையேதான் செய்தார். அவர் குடும்பத்தில் யாருக்கும் பிஸினஸ் அனுபவம் இல்லாததால், தன் கம்பெனியில் முதலீடு செய்பவர்கள் அவருக்கு நல்ல ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்று பிஜு விரும்பினார்.

2010-ம் ஆண்டு தன் கம்பெனிக்கென நிதி திரட்ட முடிவு செய்தபோது அவர் முதலில் அணுகியது துணிகர நிதி நிறுவனங்களைத்தான். ஆனால், அவருக்குத் தேவைப்பட்ட நிதியின் அளவு அதிகமாக இல்லாததால் துணிகர நிறுவனங்கள் அவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் காட்டவில்லை. ஏஞ்சல் முதலீட்டாளர்களை அணுகும்படி அவர்கள் சிபாரிசு செய்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் 'சென்னை ஏஞ்சல்ஸ்' என்கிற அமைப்பு வடிவம் பெற்றது. சென்னையும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல இளந்தலைமுறை தொழில்முனைபவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்கிற ஒருமித்த எண்ணம் கொண்டோர் தொடங்கிய அமைப்புதான் இது. நிதி திரட்டும் முயற்சியில் உள்ள தொழில் முனைபவர்கள் தங்கள் பிஸினஸ் பிளானை 'சென்னை ஏஞ்சல்ஸ்' தலைமை நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்கலாம். அத்தகைய ஆய்விற்குப் பிறகு முதலீட்டாளர்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளலாம்.  

அத்தகைய ஒரு பிஸினஸ் பிளான் ஆய்வுக்குப் பிறகு மெட்ரோபிளாட்ஸ்.காம் நிறுவனத்தில் முதலீடு செய்ய 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பில் பலருக்கு விருப்பம் இருப்பதாக பிஜு உணர்ந்தார்.

'அதில் நான்கு பேர் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நால்வரும் வெற்றிகரமான தொழில் முனைபவர்களாக திகழ்ந்தவர்கள். பிஸினஸ் செய்வதில் அவர்களுக்கிருந்த ஒட்டுமொத்த அனுபவம் என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது' என்றார் பிஜு.

'எப்படி?'

'என் பிஸினஸ் பிளானில் இருந்த ஒரு சில குறைகளை அவர்களால் எளிதில் சுட்டிக் காட்ட முடிந்தது. அதை சீர் செய்தது என் நிறுவனத்துக்கு நல்ல பயனைத் தந்தது.'

'உங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள்? நீங்கள் எதிர்பார்த்தது கிடைத்ததா?''

'கண்டிப்பாக. தினசரி பிரச்னைகளை முதலீட்டாளர் களிடம் எடுத்துச் செல்வதும் நன்றாக இருக்காது. ஆனால், தொலைதூர கண்ணோட்டத் தினால் செயல்பட வேண்டிய விஷயங்களில் அவர்கள் அளித்த ஆலோசனைகள் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது.'

'முதலீட்டாளர்களிடமிருந்து குறுக்கீடாக நீங்கள் ஏதேனும் உணர்ந்தீர்களா?'

'இல்லை. அவர்கள் எனக்கு ஆலோசனை மட்டும் கூறினார்களே தவிர, அவர்கள் சொன்னதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதில்லை.'        

2010 செப்டம்பரில் முதல் சுற்று நிதியை திரட்டிய பிஜு. 2012 பிப்ரவரியில் தன்னுடைய இரண்டாவது சுற்று நிதியை மறுபடியும் 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பிடம் இருந்தே திரட்டினார். இதைப்பற்றி கூறிய பிஜூ, 'நான் முதல் சுற்றில் நிதி திரட்டியது என்னுடைய பிஸினஸ் கருத்தாக்கத்தை நிரூபிப்பதற்காக. இரண்டாவது சுற்றில் நிதி திரட்டியது பிஸினஸ் வளர்ச்சிக்காக.  இரண்டாவது சுற்று நிதி  திரட்டியதன் மூலமே இன்று பெங்களூரு, பரிதாபாத், குர்காவ்ன் போன்ற நகரங்களில் கிளைகளை நிறுவ முடிந்தது.'

'மொத்த நிதியையும் ஒரே தடவையில் திரட்டி இருக்கலாமே? இரண்டாவது சுற்று நிதி ஒருவேளை கிடைத்திருக்காவிட்டால், உங்கள் பாடு திண்டாட்டம் ஆகி இருக்குமே?' என்றேன்.

'என்னுடைய பிஸினஸ் கான்செப்ட்டில் எனக்கு நம்பிக்கை இருந்தது. முதல் சுற்றில் நிதி பெற்ற பிறகு, முதலீட்டாளர்கள் எங்களுக்கு ஆலோசனை வழங்கியதால் இலக்கை எளிதாக அடைய முடிந்தது. அதனால், இரண்டாவது முறை 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பிலிருந்து நிதி திரட்டுவது அவ்வளவு கடினமாக இல்லை. மேலும், முதல் சுற்று நிதி திரட்டியதின் மூலம் அடைந்த விருத்தியின் காரணமாக எங்களுடைய நிறுவனத்தின் மதிப்பீடும் அதிகமானது. அதனால், இரண்டாவது தடவை நிதி திரட்டியபோது பங்குரிமையில் நான் குறைந்த அளவே விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே சுற்றில் அனைத்து நிதியையும் திரட்டியிருந்தால் பங்குரிமையில் நாங்கள் அதிக சதவிகிதம் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்' என்றார்.

'ஏஞ்சல் முதலீட்டாளர்   களிடமிருந்து வெற்றிகரமாக நிதி திரட்ட நீங்கள் கூறும் ஆலோசனை...'

'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் பிஸியான பிஸினஸ்மேன்கள். விடாப்பிடியாகத் தொடர்ந்து அவர்களை அணுகினால்தான் வெற்றிகரமாக நிதி திரட்ட முடியும். அளவுக்கு அதிகமாக பணம் கேட்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே நிதி திரட்ட வேண்டும்.

Thanks: Nanayam Vikatan 

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf