சைப்ரஸ் சிக்கல்!

உலகப் பொருளாதாரத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கும் சமீபத்திய நாடு,
சைப்ரஸ். ஐரோப்பிய யூனியனின் ஓர் குட்டித் தீவு, சைப்ரஸ். யூரோதான் இதன்
நாணயம்.

ஏன் இவ்வளவு சத்தம்? இத்தனை ஆண்டுகளாக, சைப்ரஸ், கிரேக்கப் பொருளாதாரத்தை
நம்பியே இருந்தது. கிரேக்கக் கடன் பத்திரங்களி" பெருமளவு முதலீடு செய்தன
சைப்ரஸின் முக்கிய வங்கிகள். சென்ற ண்டு கிரேக்கப் பொருளாதாரம் சரியத்
தொடங்கியவுடன், சைப்ரஸுக்குச் சளி பிடித்தது. அதன் முதலீடுகளின் மதிப்பு
பெருமளவு குறைந்த நிலைமை கிடுகிடுவென மோசமானது.

உடனே சைப்ரஸ், ரஷ்யாவிடம் கையேந்திப் போனது, ஏனெனில், சைப்ரஸ் வங்கிகளில்
முதலீடு செய்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணக்கார
ரஷ்யர்கள்தாம். அவர்களுடைய நல்ல/அல்ல பணத்தைப் பாதுகாக்கும் இடமாக இத்தனை
ஆண்டுகளாக சைப்ரஸ் இருந்தது.

ரஷ்யா கொடுத்த 2.5 பில்லியன் யூரோ கடன் தொகையும் போதவில்லை. வேறு
வழியில்லாமல், ஐரோப்பிய யூனியனிடம் மடிப்பிச்சை ஏந்தத் தொடங்கினார்
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியடஸ்.

பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய
வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவை இணைந்து பத்து பில்லியன் யூரோவை வழங்கி,
சைப்ரஸைக் காப்பாற்ற முன்வந்தன. ஆனால், அதற்கு முன் ஒரு கண்டிஷன்.
சைப்ரஸ் வங்கிகள் தம் பங்காக 5.8 பில்லியன் யூரோக்களைத் திரட்டவேண்டும்.

அதிபர், சைப்ரஸ் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகள், கடன்கள்
மீதெல்லாம் வரி போடத் தீர்மானித்தார. ஒரு லட்சம் யூரோவுக்கு மேல்
சேமிப்பு வைத்திருப்போருக்கு 9.9 சதவிகித வரி. அதைவிடக் குறைவான
சேமிப்புகளுக்கு 6.75 சதவிகிதம் வரி. சாதாரண மக்கள் ஆடிப்
போய்விட்டார்கள். ஒரு லட்சம் யூரோ சேமிப்பெல்லாம் ரஷ்யர்களுடையது. அதைப்
பற்றி கவலை இல்லை. ஆனால், சின்ன சேமிப்புகளின் தலைமேல் கைவைத்ததுதான்
பெரிய அதிர்ச்சி.

ஓடு ஏ.டி.எம்.மைத் தேடி. திட்டம் அமலாவதற்கு முன், வங்கிச் சேமிப்புகளை
எல்லாம் வெளியே எடுத்துவிட வேண்டும். பரபரப்பு நாடெங்கும். உடனே வங்கிகளை
எல்லாம் மூடிவிட்டார் அதிபர். இருக்கும் பணத்தை மக்கள் எடுத்துவிட்டால்?

உலக நாடுகள் கவலை கொண்டது இங்குதான். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மக்கள்,
வங்கிகளில் இருந்து தம் சேமிப்புகளை எல்லாம் எடுத்துவிட்டால் என்னாவது?
மிகப் பெரிய அபாயம். ஒரே சமயத்தில் மக்களுக்கு எப்படிப் பணத்தைத்
திரும்பத் தர முடியும்? சேமிப்புகள்தானே வங்கிகளின் உயிர்நாடி. அது
நீங்கினால்?

பயம், உலகச் சந்தையைப் பற்றிக் கொண்டது. சைப்ரஸைக் காக்காவிட்டால்,
தங்கள் பொருளாதாரங்களும் குட்டிக் கரணம் அடித்தவிடும் அபாயம் உலக
நாடுகளுக்குத் தெரியாதா என்ன?
நல்லவேளையாக, சைப்ரஸ் நாடாளுமன்றம், மக்கள் மேல் வரிவிதிக்கும் திட்டத்தை
எதிர்த்து வாக்களித்தது. அதுவும் சின்ன முதலீடுகளைக் காக்க வேண்டியது
அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர். சென்ற வாரம் முழுவதும் சைப்ரஸில்
இருந்த பதற்றம் லேசாக இப்போது தணித்தது. இப்போது ஐரேப்பிய யூனியன்,
சைப்ரஸ் வங்கிகள் மூழ்கிவிடாமல் தடுக்க, பொருளாதார உதவி செய்ய
ஒத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த உதவியைப் பெற 5.8 பில்லியன் யூரோக்களை
சைப்ரஸ் திரட்டித் தான் ஆக வேண்டும். ஆனால், ஒரே ஒரு மாற்றம், சைப்ரஸ்
தனது சிறிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிக்காது.

உலகப் பொருளாதாரம் லேசாக மூச்சுவிடுகிறது. இப்போதைக்கு சைப்ரஸ்
பொருளாதாரப் பிரச்னை மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்து விட்டோம் என்ற
கணநேர இளைப்பாறல். இது எவ்வளவு தூரம் தாங்கும், மீண்டும் சைப்ரஸ்
பொருளாதாரம் சரியுமா என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை. இப்போதைக்கு தீ
அணைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான்!

நன்றி-கல்கி

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf