பிளஸ் டூ படித்தவர்கள் ஐஐஎம்ல் படிக்க வாய்ப்பு!

இந்தூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்தமாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
 
பட்டப் படிப்பு படித்த பிறகு சட்டப்படிப்பு என்ற காலம் மாறி ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ் போன்ற படிப்புகளில் தற்போது பிளஸ் டூ முடித்த மாணவர்களும் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்....இப்படி பல்வேறு ஒருங்கிணைந்த படிப்புகள் வந்து விட்டன. இதேபோல ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்புகளும் வரத் தொடங்கி விட்டன. ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலேயே ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த நிலையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களும் நேரடியாக ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை இந்தூரில் உள்ள ஐஐஎம் வழங்குகிறது. எதிர்காலத்தில் சிறந்த நிர்வாகிகளாக விரும்பும் மாணவர்களை, பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நிலையிலிருந்தே தயார்படுத்துவதற்காக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தியரிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள்.
 
இந்தப் படிப்பில் சேர என்ன தகுதி வேண்டும்?
 பிளஸ் டூ படித்த மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட்- 1 (SAT-1) தேர்வு எழுதிய மாணவர்கள் 2,400க்கு1,600க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சேட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் 1,475க்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி வரை பெறப்பட்ட சேட்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவு மாணவர்கள், ஜூன் 30ம் தேதி நிலவரப்படி 20 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 22 வயதுக்கு மேற்படக்கூடாது.
 
இந்தப் படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
 அட்மிஷன் இரண்டு கட்டங்களாக இருக்கும். பிளஸ் டூ மதிப்பெண்கள்  அல்லது சேட்-1 தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் திறனறித் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதாவது, கொல்கத்தா, புதுதில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், இந்தூர் ஆகிய இடங்களில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திறனறித் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் குவான்டிடேட்டிவ் எபிலிட்டி, வெர்பல் எபிலிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரத்துக்குள் இதற்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வு எழுதிய மாணவர்களிலிருந்து தகுதி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். திறனறித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் என்ற அடிப்படையில் மாணவர்களின் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியுடைய மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையும் கடைப்பிடிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களது அட்மிஷனை உறுதி செய்யும் வகையில் குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். படிப்புக் கட்டணத்தைச் செலுத்தும் போது, இந்தத் தொகை அதில் சரிசெய்து கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.5 லட்சம். கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது. இதுதவிர, தங்கும் விடுதி மற்றும் உணவுச் செலவுகள் தனி. இந்தப் படிப்பில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கல்வி நிலைய வளாகத்திலேயே தங்கிப் படிக்க வேண்டும்.
 
இந்தப் படிப்பில் என்ன கற்றுத் தருவார்கள்?
 இந்த ஐந்து ஆண்டுப் படிப்பில் 15 டேர்ம்கள் உண்டு. ஒவ்வொரு டேர்மிலும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை (கிரிடிட்) பெறும் மாணவர்கள்தான் அடுத்த நிலை வகுப்புகளில் சேர அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரை வாரம் ஐந்து நாட்கள் நடைபெறும். குரூப் டிஸ்கஷன் உள்பட படிப்பு தொடர்பான காரணங்களால் வகுப்பறை நேரம் 4 மணி வரை நீடிக்கப்படலாம். ஐஐஎம் ஆசிரியர்கள் தவிர சர்வதேச அளவில் உள்ள தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் வகுப்புகளை எடுப்பார்கள். இதுதவிர, கலை, அறிவியல், வணிகவியல் கல்லூரிகளில் பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற தலைசிறந்த ஆசிரியர்களும் பாடங்களைக் கற்பிப்பார்கள். இந்தப் படிப்பு மாணவர்களுக்காக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்கேற்புக்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
 
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடங்களுடன் மேனேஜ்மெண்ட் பாடங்களும் இருக்கும். கணிதம், புள்ளியியல், லாஜிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல் மற்றும் இலக்கிய அறிமுகம், தேசிய மற்றும் சர்வதேசிய நாகரிக வரலாறு, பயாலஜிக்கல் சயின்சஸ் ஆகியவையும் கற்றுத்தரப்படும் பாடங்களில் அடங்கும். ஒரு வெளிநாட்டு மொழியும் ஒரு இந்திய மொழியும் குறித்த அறிமுகம் இருக்கும். லீடர்ஷிப் டெவலப்மெண்ட்,  பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், டீம் ஒர்க், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றிலும் படிப்புக் காலத்தில் கவனம் செலுத்தப்படும். அக்கவுண்டிங், ஃபைனான்ஸ், ஆர்கனைசேஷன் பிகேவியர் டெசிஷன் சயின்ஸ், ஆபரேஷன்ஸ் அண்ட் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் எகனாமிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிக்கேஷன், லீகல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் பிசினஸ், நெறிகள் (எத்திக்ஸ்), கார்ப்பரேட் கவர்னன்ஸ், கார்ப்பரேட் சோஷியல் செக்யூரிட்டி, பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி , இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகிய மேனேஜ்மெண்ட் தொடர்பான பாடங்களும் இருக்கும். இதுதவிர, இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சர்வேதச அளவில் விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்புகளும் இருக்கும். அத்துடன், பல்வேறு அமைப்புகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதாவது, ஐந்து ஆண்டு காலத்தில் சிறந்த மேனேஜ்மெண்ட் புரபஷனலை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஐந்தாவது ஆண்டின் முடிவில் Integrated Diploma in Management (IDM) என்று சான்றிதழ் வழங்கப்படும்.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இணையத்தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.  இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இந்தூரில் மாற்றத்தக்க வகையில், 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் --இந்தூர்' என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்தூரில் உள்ள ஐஐஎம் நிர்வாக அலுவலகத்திற்கு ஜூலை 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
 
இங்கு படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பட்டப் படிப்பை முடித்து விட்டு ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம்  கொத்திக்கொண்டு போக பிரபல நிறுவனங்கள் காத்திருக்கும்போது, இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காதா என்ன? மிகச் சிறந்த கல்வி நிறுவனம். தலை சிறந்த ஆசிரியர்கள். நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். ஆர்வமிக்க மாணவர்கள் இப்போதே உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

 
விவரங்களுக்கு:www.iimidr.ac.in

1 comment :

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf