கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்

தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

அனுபவ ரீதியான நிகழ்வுகளின் அடிப்படையில், கனவுகளைப் பற்றிய பல்வேறு கற்பித்தல்கள், வழிவழியாக, நம் சமூகத்தில் உலவி வருகிறது. கனவுகள் குறித்து, பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வரும் நம் சமூகத்தில், அதைப் பற்றிய புரிதல்கள் அவசியமாகின்றன. கனவுகளுக்கான காரணங்கள், அவற்றின் பலன்கள் குறித்து விளக்குகிறார், மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப். 

1. கனவுகள் வருவதற்கு என்ன காரணம்? 

பகலில், ஒருவரின் மனம் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், இரவில் அவர்களுக்கு கனவாக வருகிறது. உதாரணமாக, தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்களுக்கு, சாமிகளின் உருவங்கள், கோவில், கோபுரங்கள் அதிகம் கனவில் வரும். ஆறு மணி நேர தூக்கத்தில், தூக்க சுழற்சி முறைப்படி, ஒருவருக்கு, நான்கு முறை வரை கனவு வரலாம். 

2. வயதிற்கும், கனவிற்கும் தொடர்பு உண்டா? 

நிச்சயமாக தொடர்பு உண்டு. 3 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கு, "கார்ட்டூன்' படங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள், அதிகம் கனவில் வரும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் உறவினர்கள் சொல்லக் கேட்ட, பேய் கதைகளின் பாதிப்புகள் கனவில் வெளிப்படும். 

விடலைப் பருவத்தினரில் பெரும்பாலானோருக்கு, அவர்களுக்கு பிடித்தமான, எதிர் பாலினர் கனவில் வருவர். அதுவும் அவர்களுக்கு பிடித்தமான கதாநாயகர், கதாநாயகி, விளையாட்டு வீரர் போன்றோரின் சாயலில், கனவில் வந்து அசத்துவர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை பற்றி அதிகம் எண்ணும் நடுத்தர வயதினருக்கு, இவை தொடர்பான, நேர்மறை அல்லது எதிர்மறையான கனவுகள் வரும். குடும்ப பிரச்னை, பணக் கஷ்டம், வேலையின்மை போன்றவற்றுக்கு ஆட்படுவோருக்கு, வன்முறை சம்பவங்கள் அதிகளவில் கனவில் வரும். 

எதிர்காலம் மற்றும் மரணத்தை பற்றிய பயத்தால், முதியோர், அவர்களின் குடும்பத்தில் அகால மரணம் அடைந்தோர், எமதூதர்கள், இறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் என, சாவு தொடர்பான கனவுகளுக்கு அதிகம் ஆளாகின்றனர். 

3. அதிகாலை கனவுகள் பலிக்குமா? 

தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில், கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

மாறாக, கனவில் திருமணம் நடப்பது போல், யாரேனும் கனவு கண்டால், அவர்கள் வீட்டில் கெட்டது நடக்கும்; பிணம், ரத்தக்காயத்தை கனவில் கண்டால், நல்லது நடக்கும்; கனவில் கோவில் கோபுரத்தை பார்க்கக்கூடாது; பாம்பை அடித்து, அதை கொல்லாமல் விட்டாலோ, பாம்பு துரத்தினாலோ, துன்பம் வரும்; கெட்ட கனவுகளை வெளியில் சொன்னால், அவை பலிக்கும் என்பன போன்ற, ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படாத, வழிவழியாக கூறப்பட்டு வரும் கற்பித்தல்கள் அனைத்தும், மூடநம்பிக்கையே. 

4. "கலர்' கனவு எல்லாருக்கும் வருமா? 

வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களைவிட, மூளைச் செல்களின் அதிர்வு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு மட்டும், கலர் கனவு சாத்தியம். மற்றவர்களுக்கு, தங்கள் கனவில் வரும் நிறங்களை விவரிக்க முடியாது. இதேபோல், தூக்க மாத்திரை உட்கொள்வோர், மனச்சோர்வு, மனதளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுவோர், ஆகியோருக்கு, கொடிய ஆயுதங்களுடன் போரிடுவது போன்ற கனவுகள் வரும். 

5. கனவுகளுக்கு ஆட்படாத நபர்கள் உண்டா? 

தொடர்ந்து, ஆறு மணி நேரம் தூங்காதவர்கள், இரவில் தூக்க தடைக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு< கனவுகள் வராது. இவர்களை தவிர, சராசரி மனிதர்கள் எல்லாருக்கும் நிச்சயம் கனவு வரும்; வர வேண்டும். மாறாக, யாராவது தமக்கு கனவே வராது என, சொன்னால், அவர்கள், பொய் சொல்ல வேண்டும் அல்லது தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகி இருக்க வேண்டும். 

ஆழ்ந்த உறக்கத்திற்கு அடையாளமான கனவு, ஒருவருக்கு வருவது நல்லது. அதற்காக, ஒருவருக்கு தினமும் கனவு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இயல்பாகவோ, பணிநிமித்தம் காரணமாகவோ, சிந்தனை ஓட்டம் அதிகம் உள்ளோருக்கு, அதிகம் கனவு வரும். 

டாக்டர் ஆனந்த் பிரதாப், மனநல மருத்துவர், 
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf