சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா

0 comments
"சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவில்லை. இது, மத்திய அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இதை அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்த முடிவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணவப் போக்கை கண்டித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குமுறலை அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது அங்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தன்னிச்சையான முடிவு எடுப்பதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

4 கோடி பேர் வேலைக்கு அபாயம்: நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கின்றனர். மேலும் 4 கோடி பேர், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இவர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. வேலைவாய்ப்பு பறிபோகும்.நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே, அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள, நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சில பெரிய வர்த்தக அமைப்புகள், தங்கள் எதிர்கால பணப்புழக்கத்திற்கு வழி தேட கண்டுபிடித்த செயலாகக் கருதலாம்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மத்திய அரசு உடனடியாக இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாயாவதி காட்டம் : லக்னோ: "சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், நாட்டின் பொருளாதாரம் சரிவடையும்:

0 comments
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என்றும், இதன்மூலம் பொருளாதார சுனாமி ஏற்படும் நிலை உருவாகும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில்லரை வணி்கத்தில், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த முறையை திரும்பப் பெற வேண்டும் என்று ‌தெரிவித்துள்ளார்.

சில்லறை வர்த்தகம்: அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்

0 comments
1.ஸ்டார் பக்ஸ் என்னும் காபிக்கடை நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கிடைக்க, 2 லட்சம் அமெரிக்க டாலர்களை 2011 முதல் அறையாண்டில்மட்டும் நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு கொடுத்திருக்கிறது

2.சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்திய சட்டங்களை திருத்தியமைத்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க , 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இடைத்தரவுக்கு செலவு செய்திருக்கிறது.

3.இந்தியாவில் சந்தையைப் பெருக்கிக்கொள்ள டவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும், தொலைதொடர்பு துறை வர்த்தகத்தில் நுழைய AT & T நிறுவனமும், நிதி சேவைத்துறையில் நுழைய ப்ருடென்சியல் பைனான்சியல் நிறுவனமும், புதிய வங்கிகள் துவங்க மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், காப்பீட்டு சட்டங்களையே மாற்றியமைக்க நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி அமெரிக்க சட்ட இடைத்தரகர்கள்மூலம் காய்களை நகர்த்தி வருகின்றன…

4.இவை மட்டுமல்ல, போயிங், பைசர், இன்டெல், அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனம் என ஏராளாமான நிறுவனங்கள் அமெரிக்க இடைத்தரகர்கள் வழியாக, அமெரிக்க அரசின் மூலமாக இந்தியச் சட்டங்களை திருத்தியமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்… அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்…

இவற்றின்மூலமெல்லாம் இந்தியாவை ஆள்வது வெறும் ஜனநாயக(?) அரசல்ல, கார்பொரேட்டுகள் வழிநடத்துகிற ஒரு மக்கள்விரோத அரசுதான் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

மல்டி பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு

0 comments
மல்டி பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதன் மூலம் நாட்டில் 10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா தெரிவித்தார்.

மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஒற்றை பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடு என்ற உச்ச வரம்பை நீக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசின் இந்தக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்த இந்தப் பிரச்னையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கடும் அமளி நிலவியதால், இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.இந்த நிலையில், சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளித்த மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அதிகரிக்கும் நடவடிக்கையால், முதற்கட்டமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான தொழில்கள் மூலம் 50-ல் இருந்து 60 லட்சம் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும்," என்றார். மேலும், "நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீட்டுக்கு வழிவகுக்கப்படும்," என்றார் ஆனந்த் ஷர்மா.

சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தால் நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்

0 comments
சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கையும் இன்று முடங்கியது.மக்களவை இன்று காலை தொடங்கியவுடன், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என பிஜேபியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதேபிரச்னையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால், மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைதான் மாநிலங்களவையிலும் நீடித்தது.பின்னர், நாடாளுமன்றக் கூட்டம் பிற்பகலில் மீண்டும் தொடங்கியதும் இதே பிரச்னையால் அமளி துமளிகள் அதிகரிக்கவே, இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முற்றிலும் முடங்கியது.

விலைவாசி உயர்வு, தெலுங்கானா, கறுப்பு பணம் போன்ற விவகாரங்களால் கடந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு வகை செய்யும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளித்தது புயலைக் கிளப்பியுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு

0 comments
சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக இருந்ததை, 100 சதமாகவும்உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அரசின் இந்த முடிவு, இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. அமைச்சரவையின் முடிவு குறித்து, இரு அவைகளிலும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், பில்லியன்கணக்கான முதலீடுகள் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். அரசின் முடிவால், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
திரிணாமூல் காங்கிரஸார் அவையின் மையப்பகுதிக்கு வந்து, முதலில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், அதன் பிறகு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி சிந்திக்கலாம் என்று ஆவேசமாகக் கூறினார்கள்.

வால்மார்ட்

இந்த திட்டத்தின் விளைவாக டெஸ்கோ, வால்மார்ட் போன்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளை ஆரம்பிக்க முடியும்.இதுநாள்வரை இந்த நிறுவனங்கள் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருட்கள் விற்க முடிந்ததே ஒழிய நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இவர்கள் பொருட்கள் விற்க முடிந்திருக்கவில்லை.இந்த முடிவு ஒரு நிர்வாக முடிவென்பதால், இதனை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் கிடையாது.

கருத்து வேறுபாடுகள்

இந்த திட்டத்தால் இந்தியாவில் வியாபாரப் போட்டி ஏற்படும் அதன் விளைவாக பொருட்களின் விலை குறையும் தரம் உயரும் என்று இந்தியாவில் பணவீக்கமும் விலையேற்றமும் மிக அதிகமாக இருந்துவரும் சூழ்நிலையில் இத்திட்டம் நன்மை தரும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
ஆனால் பெரும் சர்வதேச நிறுவனங்கள் போட்டிக்கு வந்தால் இந்தியாவின் சிறிய வர்த்தகர்களும் ஏழை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமது உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துவந்த விலை மேலும் குறையும் என்று இன்னொரு பக்கத்தில் வாதிடப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா

0 comments
சில்லரை வர்த்தகத்தில் எக்காரணம் கொண்டும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

‘பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.

தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

0 comments
New Delhi 26.11.2011 சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி.

சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தூர்தர்ஷன் செய்தி தெரிவிக்கிறது.

ஏற்கெனவே, கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் நாளை விளக்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf