Jayalalitha Calls for calm among Keralites in Mulla Periyar Issue | அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது - முதல்வர் ஜெயலலிதா

0 comments
Jayalalitha Calls for calm among Keralites
கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது. சிக்கலான தருணங்களில், மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை அடைவது இயல்பே. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, அவர்களை அமைதிப்படுத்துவது, பொறுப்புள்ளவர்களின் கடமை. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்று, உடைந்து, இடுக்கி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சந்தேகிப்பதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை. அணை மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு, சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர் குழு உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்ப வல்லுனர்களாலும், மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Jaya Tells Keralites/a>

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை சந்தேகிக்க வேண்டியதில்லை. காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும், நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. இந்த விவரங்கள் எல்லாம், கேரளாவில் உள்ள, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தும், சில அற்ப காரணங்களுக்காக, பெரியாறு அணை தொடர்பான பீதியைக் கிளப்பத் துணிந்துள்ளனர்.

கேரளா, தமிழகத்தின் அண்டை மாநிலம். இன்னும் சொல்லப் போனால், 1950 வரை இரண்டும் ஒரே மாநிலமாக இருந்தவை. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள். கேரளாவில் ஏராளமான தமிழர்கள் இருக்கின்றனர். அதை விட அதிகமான எண்ணிக்கையில், தமிழகத்தில் மலையாளிகள் இருக்கின்றனர். இதுவரை இவர்கள் அனைவரும், மெச்சத்தகுந்த சகோதரத்துவத்தோடும், ஒத்துழைப்போடும் தான் வாழ்ந்திருக்கின்றனர். கேரள சகோதர, சகோதரிகளின் அழிவை தமிழக அரசோ, மக்களோ ஒருபோதும் விரும்ப மாட்டர். நூறு சதவீதம் உறுதியாகத் தெரிவதால் தான், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக சொல்லி வருகிறோம். பல நூறாண்டுகளாக, இரு மாநில மக்களுக்கு இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன். எந்த மக்களின் கூர்மை, கல்வி, பகுத்தறிவு மற்றும் கடும் உழைப்பின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேனோ, அந்த கேரள மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Vijaykhant Requests keralites to stop Racism: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை, அம்மாநில அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும்

0 comments
Vijaykhant Requests keralites
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை, அம்மாநில அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் அய்யப்ப பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர்.

அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.

மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்னை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்னைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல்வாதிகளிடம்தான் உள்ளதோ என்று சந்தேகம் எனக்கு வருகிறது," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Seeman Warns Kerala: கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும்: சீமான்

0 comments
Seeman Warns Kerala
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது நீடித்தால், எதிர்விளைவுகள் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டு மல்ல. அவன் இழக்காத உரிமையும் இல்லை. பாலக்காடு, தேவிகுளம், திருவனந்தபுரம், இடுக்கி, பீர்மேடு, வெங்காலூரு, காவிரி என நீண்ட பட்டியலில் முக்கியமானது முல்லை பெரியாறு. தமிழனுக்கு சொந்தமான நிலத்தில், அவனுடைய பணத்தில் அவனது உழைப்பில் கட்டப்பட்ட அணை இன்று மலையாளிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கிறது.

கேரளத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தத் தீர்வும் கிட்டவில்லை என்று தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணிரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.

ஆனால், கேரள அரசு அணை உடையப்போவதாக திட்டமிட்டு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்கள் அங்கு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் விளை பொருட்களும் மின்சாரமும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழகத்தில் வாழும் 40 லட்சம் மலையாளிகள் பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதே சகிப்பு தன்மை தொடரும் என எதிர்பார்க்க முடியாது.

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். 17-ம் தேதி பங்களாமேடுவில் தொடங்கும் நடை பயணம் சின்னமனூரில் முடிகிறது. 18-ம் தேதி சின்னமனூரில் தொடங்கும் நடை பயணம் கூடலூரில் முடிகிறது. 2 இடங்களிலும் நடைபெறுகிறது. 17-ம் தேதி நடைபயணத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார்," என்று சீமான் கூறியுள்ளார்.

Thanks: Vikatan

Tamilnadu Gov't will not participate in the speak: முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை

0 comments
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.

அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Don't Create Panic Pm Say's to Jaya: தமிழக முதல்வர் ஜெ., தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம் - மன்மோகன்சிங்

0 comments
இரு மாநிலங்கள் இடையே நிலவி வரும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விரைவில் அதிகாரிகள் தலைமையிலான பேச்சுக்கு ஏற்பாடு செய்ய நீர்வளத்துறை அமைச்சகத்தை கேட்டு கொண்டுள்ளதாகவும், இது தொடர்பான விஷயத்தில் தமிழக முதல்வர் ஜெ., தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம் என்றும் , ஜெ.,வுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சகஜ வாழ்க்கையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரளாவின் செயலை தடுத்து நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் ஜெ.,வுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் : முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விஷயம் சுப்ரீம் கோர்ட் அதிகார குழு முன்பு நிலுவையில் இருந்து வருவதால் நாம் எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. என்றும் , பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கேரள அரசு செயல்படுவதாக கூறியதை என்னை சந்தித்த கேரள அமைச்சர் குழுவிடம் தெரிவித்துள்ளேன்.

இரு மாநில உயர் அதிகாரிகள் பங்கேற்று ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நீர்வளத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இந்த பேச்சு விரைந்து நடக்கும், அப்போது தமிழக முதல்வராகிய நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலம் நல்ல முடிவுகளை எட்ட முடியும் என தான் நம்புகிறேன். இது வரை தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி மக்களிடம் தவறான பீதியை ஏற்படுத்த வேண்டாம் இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

இன்று தமிழக எம்.பி.,க்கள் பிரதமரை சந்தித்தனர்: தமிழக அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசினர். தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோர் தலைமையின் கீழ் எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமரிடம் ஒரு மகஜர் ஒன்றையும் அளித்தனர். அணையின் நீர் மட்டத்தை 142 உயர்த்த வலியுறுத்த வேண்டும், கேரள அரசு தேவையில்லாத பிரச்னைகள் எழுப்புவதை தவிர்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டனர்.

கேரள முதல்வர் பிரதமருடன் சந்திப்பு : கேரள முதல்வர் உம்மன்சான்டி இன்று காலை பிரதமரை சந்தித்து பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள- தமிழக அரசு எடுக்க வேண்டிய விவகாரம் குறித்து பேசினர்.

P.M Manmohan Sing Writes Letter Regarding Mullaip Periyar Issue: முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

0 comments
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக இருமாநில அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 29-ந் தேதி அன்று கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தாங்கள் எழுதிய முந்தைய கடிதங்களையும் கடந்த 29-ந் தேதி எழுதிய கடிதத்தையும் பெற்றேன். அவற்றில் நீங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை கவனத்தில் கொண்டுள்ளேன். அதுபோல, கேரள மந்திரிகள் குழுவினர் என்னை சந்தித்து தெரிவித்த பிரச்சினைகளையும் கேட்டேன். தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரமளிக்கப்பட்ட கமிட்டி முன்பு இந்த விவகாரம் இருப்பதை அவர்களிடம் தெரிவித்தேன். மக்கள் மத்தியில் பீதி கிளப்பும் விதமாக அர்த்தமற்ற வகையில் பேசவோ, செய்யவோ கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

மேலும், இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலமாக பரஸ்பர, சுமூகமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும் என கருதுகிறேன். எனவே, நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அர்த்தமுள்ள கவலைகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்: உம்மன் சாண்டிக்கு ஜெயலலிதா கடிதம்

0 comments
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

1-12-2011 அன்று நீங்கள் அனுப்பிய பேக்ஸ் செய்தி எனக்கு கிடைத்தது. நமது இரு மாநிலங்களும் மிக விரிவான பரஸ்பர நலன்களும், ஒத்துழைப்பும் பல விஷயங்களில் கொண்டிருக்கிறது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிற அதேநேரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் பல சட்டப்பூர்வ தாவாக்கள், தொழில்௮ட்ப விவகாரங்கள் நிலுவையில் இருந்தாலும், இவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில், தமிழக எல்லையைத் தாண்டி நடக்கும் தேவையற்ற, ஆத்திரமூட்டும் செயல்களும், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள அச்ச உணர்வு ஏற்படுத்தும் புரளி தொடர்பான எங்கள் கவலையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை பரிசீலித்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவு மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செல்லத்தகாததாக ஆக்கும் வகையில் கேரள நீர்ப்பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தை 2006-ல் திருத்தி, சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் அரசியல் சட்ட விவகாரத்திற்கு மாறாக அணையின் முழு நீர்த்தேக்க அளவை நிர்ணயித்தது.

ஓய்வுபெற்ற இந்திய தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான அதிகாரக்குழு, அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. தமிழக அரசு 1980-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை இந்த அணையை வலுப்படுத்த மத்திய நீர் ஆணைய தலைவரின் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்த பிறகு, முல்லைப்பெரியாறு அணை ஒரு புதிய அணை போல மிகவும் நன்றாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த கருத்தோடு ஒன்றி நிற்கும் வகையில் அணையில் தண்ணீரை 142 அடி உயரத்திற்கு தேக்கி வைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து 2006-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த, அதிகாரக் குழு பல்வேறு ஆய்வுகளை, சோதனைகளை நீருக்கு அடியில் ஊடுருவி சென்று நடத்தும் சோதனை, கேபிள் ஆங்கர் பரிசோதனை போன்ற பல சோதனைகளை நடத்தியது. இன்னும௫ சில சோதனைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் எனது அரசு இத்தகைய மாதிரி சோதனைகளுக்காக மட்டும் ரூ.1 கோடியே 38 லட்சம் ஒதுக்கியுள்ளது.

நீங்கள் மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புள்ளி விவரப்படி கடந்த 4 மாதங்களில் 4 சிறிய அளவிலான ந௬லநடுக்கங்கள் அதுவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெகுதூரத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் அணையில் எந்தவிதமான கசிவையும் உண்டாக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த அணையில் உள்ள கசிவு, இந்திய தர நிர்ணயம் அனுமதிக்கும் அளவுக்கு உட்பட்டே இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஒரு நடுத்தர அளவு நில நடுக்கத்திற்குகூட வாய்ப்பு இல்லை. முல்லைப்பெரியாறு அணை, வெள்ளநீரால் உடைப்பு எடுப்பதற்கோ, இடிந்து விழுவதற்கோ எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏனெனில், இந்த அணையை வலுப்படுத்தியதால் எந்தவித சம்பவங்களும் நடக்க வாய்ப்பு இல்லை.

எனது அரசும், நானும் ஒவ்வொரு இந்தியனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று எப்போதும் கோரும் நிலையில், அடிப்படை உண்மைகளை மீறி ஏற்படும் தேவையற்ற அச்சங்களை நாம் தடுக்க வேண்டும். அரசு மட்டத்தில், நாம் எடுக்கும் முடிவு உண்மையான நிலைமைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, உண்மைக்கு புறம௫பான விஷயங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு இந்த அணையின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பரிசீலித்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்த உத்தரவை கேரள அரசு பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முழு ஒத்துழைப்பும், நல்லெண்ணமும் எப்போதும் உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

What is Mullaip Periyar or Mulla Periyaar? : முல்லை பெரியாறு அணை

3 comments
முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை வரலாறு:


மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564 வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார். 1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர் முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர். பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

முல்லை பெரியாறு ஒப்பந்தம்:


முல்லை பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.


முல்லை பெரியாறு அணை மின் உற்பத்தி:

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.
அணை பயன்பாடு

இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.

இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும், மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

முல்லை பெரியாறு அணை சிக்கல்

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த முல்லை பெரியாறு அணை உத்தரவை ஏற்க மறுக்கிறது.

Why this Negligence Towards Tamils: முல்லைப் பெரியாறு: ஏன் இந்த ஓரவஞ்சனை - தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா?

0 comments
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.

நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.

<h1>கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?</h1>

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு - பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் காணக் கிடைக்கிறது.


.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் kerala பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.

மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

What we Did as Tamilians: பாவம் தமிழன்! பழ. நெடுமாறன்

0 comments
கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.
தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.



உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.
1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் Kerala புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.
ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது.
ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.
அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.
நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.
அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.
இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.
அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.
புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.
ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.
பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.
இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf