Peas Masala: பீஸ் மசாலா

0 comments
பீஸ் மசாலா

வழக்கமாக செய்யும் சைடுடிஷ்சை விட சப்பாத்தி, பூரி, பிரைடு ரைஸ் போன்றவைகளுக்கு பீஸ் மசாலா சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.பீஸ் மசாலா உலர்பட்டாணியை ஊறவைத்து செய்வதை விட, பச்சைப்பட்டாணியை புதிதாக வாங்கி உரித்து செய்வதே சுவையூட்டும். பீஸ் மசாலா செய்முறை இதோ:

பீஸ் மசாலா தேவையானவை:

பச்சைப்பட்டாணி -2 கப்
பெரிய வெங்காயம் -2
சின்ன வெங்காயம் -10
தக்காளி -3
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்-சிறிதளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

பீஸ் மசாலா செய்முறை:

பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, விழுது, தேங்காய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும், சிறிது பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி அத்துடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். சுவையான பீஸ் மசாலா ரெடி.

Madurai Mutton Varuval: மதுரை மட்டன் வறுவல்

0 comments
மட்டன் வறுவலில் மகத்தானது மதுரை மட்டன்வறுவல்

மதுரை மட்டன் வறுவல் தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

மதுரை மட்டன் வறுவல் தாளிக்க தேவைப்படுபவை:

எண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
தேங்காய் விழுது - கால் கப்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்

மதுரை மட்டன் வறுவல் செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். இத்துடன் முதல்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும்  மதுரை மட்டன் வறுவல் ரெடி.

கறிச் சுண்டைக்காய் பச்சடி

0 comments
கறிச் சுண்டைக்காய் தேவையானவை:

பிஞ்சு சுண்டைக்காய் - 1/2 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 4

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - தாளிக்க

கறிச் சுண்டைக்காய் செய்முறை:

துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

சுண்டைக்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.

சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

கறிச் சுண்டைக்காய் பச்சடி ரெடி

கருப்பட்டி ஆப்பம்

0 comments
கருப்பட்டி ஆப்பம் தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கருப்பட்டி - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

கருப்பட்டி ஆப்பம் செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப் பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றவும். கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுங்கள். சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் போதும்.

Meal Maker Masala: மீல்மேக்கர் மசாலா

0 comments
மீல்மேக்கர் மசாலா தேவையானவை:

மீல்மேக்கர் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தேங்காய் துருவல் - 1/2 கப்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 8 பல்

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 8

உப்பு எண்ணெய் - தேவையான அளவு

மீல்மேக்கர் மசாலா செய்முறை:

3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும்.

தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சுருள சுருள கிண்டி மீல்மேக்கர் மசாலா இறக்கவும்.

கீதா தெய்வசிகாமணி

Tomato Fried Rice: தக்காளி பிரைடு ரைஸ்

0 comments
தக்காளி பிரைடு ரைஸ் தேவையானவை:

பாசுமதி அரிசி - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி பெரிய சைஸ் - 2

புதினா (ஆய்ந்தது) - கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் பால் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

முந்திரிப்பருப்பு - 10

பட்டை, கிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்

நெய், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி பிரைடு ரைஸ் செய்முறை:

தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.

பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

கீதா தெய்வசிகாமணி

Keemaa Podimaas: கீமா பொடிமாஸ் | Keema Recipes

0 comments
கீமா பொடிமாஸ் தேவையானவை

கொத்துக்கறி - 1/4 கிலோ

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

வெங்காயம் - 2

இஞ்சி - சிறு துண்டு (விழுதாக்கவும்)

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப அரைக்க

மிளகாய் வற்றல் - 3

மிளகு - 10

தனியா விதை - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கீமா பொடிமாஸ் செய்முறை

மசாலா சாமான்களை வறுத்துப்பொடி செய்யவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக்கவும்.

கொத்துக்கறி வதங்கியதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி கீமா பொடிமாஸ் இறக்கவும்.

`செப்' தாமு

நெத்திலி கிரிஸ்பி வறுவல்: Crispy Nethili Fry

0 comments
நெத்திலி கிரிஸ்பி வறுவல் தேவையானவை:

நெத்திலி மீன் - 1/2 கிலோ

எலுமிச்சம்பழம் (சாறு) - 2 கரண்டி

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

தனியாத்தூள் - 3 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

எண்ணெய் - போதுமான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

அரிசி மாவு - 2 கைப்பிடி

மைதா மாவு - 1 கைப்பிடி

சோளமாவு - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - 2 கொத்து


நெத்திலி கிரிஸ்பி வறுவல் செய்முறை:

நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலவையாக்கவும்.

நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு நெத்திலி கிரிஸ்பி வறுவல் பொறித்து எடுக்கவும்.

Source: செப்' தாமு

Cap page Cheese Cola: முட்டைக்கோஸ் சீஸ் கோலா

0 comments
விருந்தின்போது பிரியாணி, பிரைடு ரைஸ் பரிமாறுவது வழக்கமாக இருக்கிறது. இவற்றுக்கு பரிமாற ஏற்ற துணைக் குழம்புதான் முட்டைக்கோஸ் சீஸ்கோலா.

முட்டைக்கோஸ் சீஸ் கோலா தேவையானவை

முட்டைக்கோஸ் - 100 கிராம்
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு

முட்டைக்கோஸ் சீஸ் கோலா செய்முறை

முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.

வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட முட்டைக்கோஸ் சீஸ் கோலா மிகவும் சுவையாக இருக்கும்.

Carrot Masala Idly: காரட் மசாலா இட்லி

0 comments
காரட் மசாலா இட்லி தேவையானவை
 
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
காரட் (துருவியது) - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் - 1/4 கப்
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இட்லி மாவு - தேவைக்கேற்ப
 
காரட் மசாலா இட்லி செய்முறை
 
வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.
 
தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
 
அத்துடன் மிளகாய் தூள், மசாலா தூள், துருவிய சீஸ் சேர்த்து பச்சைக் கொத்தமல்லி, உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.
 
இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும். இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.
 
வேக வைத்து எடுத்தால், ருசியான காரட் மசாலா இட்லி `ஸ்டப்டு இட்லி' ரெடி. தேங்காய்ச் சட்னி இந்த இட்லிக்கு ஏற்றது.
 
கீதா தெய்வசிகாமணி

Suraa poondu Kulambu | சுறா பூண்டு குழம்பு

0 comments
மீன்களில் சுறா தனிசுவை கொண்டது. கெட்டியான பதத்தில் குழம்பு தயாரித்து ருசித்துப் பாருங்கள், அனைவரும் நிறைய சாப்பிடுவதோடு, அடுத்த முறை எப்போது வைப்பீர்கள் என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

சுறா பூண்டு குழம்பு தேவையான பொருட்கள்

சுறா - 1/2 கிலோ (எலும்பு, தோல் நீக்கியது)
பூண்டு - 3 (முழு அளவு)
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு (கரைக்கவும்)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 3 கீறியது
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சுறா பூண்டு குழம்பு செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும்.

சுறாவைச் சேர்த்து வேக விடவும்.

சுறா வெந்தவுடன் புளிக்கரைசலைச் சேர்க்கவும். அத்துடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு திக்கானதும், கொத்தமல்லி இலை தூவி சுறா பூண்டு குழம்பு இறக்கிப் பரிமாறவும்.

செப்' தாமு

Crap Masala: நண்டு மசாலா

0 comments
நண்டு மசாலா தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

நண்டு மசாலா செய்முறை:

நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், இஞ்சி பூண்டு, வாணலியில் வறுத்து அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவை சேர்த்து வதக்கவும்.

அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. போதுமான உப்பையும் சேர்க்கவும்.

நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கி விடவும்.

Iraal- Semmeen Thithippu | இறால் திதிப்பு

0 comments
இறால் திதிப்பு தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கீறியது
இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கியது)
நாட்டுத்தக்காளி - 1/4 கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)

இறால் திதிப்பு செய்முறை

இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங்காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

மசாலா திக்காக வரும்வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும்.

இறால் வெந்த பிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.

குறிப்பு

இறால் திதிப்பு முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.

பக்கோடா குழம்பு

0 comments
பக்கோடா குழம்பு தேவையானவை:

கடலைப்பருப்பு - 2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 4
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3
தேங்காய் - 1
எலுமிச்சம் பழம் - 1
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பட்டை கிராம்பு, சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

பக்கோடா குழம்பு செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 4 பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி இவற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி நைசாக அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்புத்தூள் போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு சிவக்க வதக்கவும்.

தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.

பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்த தேங்காயை விட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியான பதம் வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கி வைக்கவும்.

கடலைப் பருப்பை ஊற வைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வெந்ததும் எடுத்து குழம்பில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பரிமாற, பக்கோடா குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

கம்ப்யூட்டர் கிராஷ்

0 comments
பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்
Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளà ��ு என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவிà ��் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம ் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

Karunaikkizanku Masiyal: கருணைக் கிழங்கு மசியல்

0 comments
கருணைக் கிழங்கு மசியல் தேவையானவை

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு, பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கருணைக் கிழங்கு மசியல் செய்முறை:

புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கருணைக் கிழங்கைக் கழுவி நன்றாக வேக வைத்து ஆறிய பிறகு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

அவை வதங்கியதும், மசித்த கருணைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புரட்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றியதும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.

கருணைக் கிழங்கு மசியல் குறிப்பு:

எண்ணெய் மிதந்து வருமளவு கிண்ட வேண்டும்.

செரிமானக் கோளாறு, மூலம் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது இந்த கருணைக் கிழங்கு மசியல்.

புளித்தண்ணீருக்கு பதில் புளித்த தயிர் சேர்த்தும் செய்யலாம். இந்த மசியல் புளி சேர்த்து தயாரிப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட நன்றாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

Chicken Varuval: பசுமை கோழி வறுவல்

0 comments
பசுமை கோழி வறுவல்: 

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் - 6
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
தேங்காய் துருவியது - 1/2 மூடி
தயிர் - 1/2 குழிக்கரண்டி
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப

பசுமை கோழி வறுவல் தாளிக்க:

சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2

பசுமை கோழி வறுவல் செய்முறை:

கோழிக்கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் இவற்றை தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும்.

அரைத்த தேங்காய், புதினா கொத்தமல்லி இலை விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.

சிக்கன் வெந்ததும், தயிரை ஊற்றி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பசுமை கோழி வறுவல் இறக்கவும்.

Shrimp Chill 65: இறால் சில்லி 65

0 comments
இறால் சில்லி 65 தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ
அரிசிமாவு - 2 கை
சோளமாவு - 1 கை
மைதா - 1 கை
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 3 டீஸ்பூன் (அரைத்த விழுது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

இறால் சில்லி 65 செய்முறை:

இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

அரைத்த அரிசி மாவு, சோளமாவு, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பேஸ்ட் பதத்தில் பிசையவும்.

இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்

Now the இறால் சில்லி 65 is Ready

Meen Varuval Recipes: வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்

0 comments
வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் தேவையானவை:

வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் செய்முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும்.

எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்.

இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும்.

குறிப்பு

மீன் கலவையை ஊற வைக்க சிறிது இஞ்சி, பூண்டு விழுதும் தேவையானால் சேர்க்கலாம்.

இதே வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் முறைப்படி இறாலைக் கொண்டு கறிவேப்பிலை பிரான்ப்ரையும் தயார் செய்யலாம்.

Vegetable Somaas: வெஜிட்டபிள் சோமாஸ்

0 comments
வெஜிட்டபிள் சோமாஸ் தேவையானவை :

மைதா மாவு - 2 கப்
உருளைக் கிழங்கு - 4
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன்
ரொட்டித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

வெஜிட்டபிள் சோமாஸ் செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு வெடிக்க விட்டு அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து சிவக்க விடவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கி மேற்சொன்ன அளவு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு பிசைந்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விட வேண்டும்.

காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் போட்டு கிளறிக் கொள்ளலாம். இதுவே வெஜிடபிள் பூரணம்.

மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் `நெம்' அல்லது `டால்டா` சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து வெஜிடபிள் பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும். இதேபோல் நிறைய சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொண்டு வாணலியில் எண்ணையைக் காய வைத்து செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

தொட்டுக்கொள்ள தக்காளி `கெட்ச்அப்' ஏற்றது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf