வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா?ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முந்தைய தலைமுறையில் 50 வயதுக்கு மேல் தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ முடிந்தது. அவர்களது பொருளாதார வசதி போதுமானதாக இல்லாமலிருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் வங்கி கடன் வசதிகள் பெறுவது எளிதாக இல்லை.ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் 35 வயதுக்குள்ளாகவே வீடு ஒன்றிற்கு சுலபமாக சொந்தக்காரர்களாக முடிகிறது.
கல்வி அறிவு வளர்ச்சி; விவசாய பொருளாதாரத்தில் இருந்து தொழில் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுவது; தகவல் மற்றும் தொழில் தொடர்பு துறைகளின் குறுகிய கால அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை உன்னதமாக காணப்படுகிறது.1961 ல் 70.3 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருந்த நாட்டில் இன்று இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் 48.9 சதவீதம் பேர் தான் என்று கூறுகிறது அரசின் புள்ளி விவரம் ஒன்று.
கடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.எனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly InstallmentEMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மாத தவணை
வீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது.கடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.
இந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.
எனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.
வருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு விதமாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.
இந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா?
பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.இந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.மேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.
ஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.எந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.
உதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல.
நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.
இந்த சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே.
எனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.
அடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.
அதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.
நீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
முன்னதாக செலுத்தப்படும் வட்டி
கடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.
அவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செலுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.
உதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.
ஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.
ஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்?
இருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும்.
உதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.