Questions Before Investment: முதலீட்டுக்கு முன் 5 கேள்விகள்!

இன்று எல்லோரிடமும் முதலீட்டு ஆர்வம் இருக்கிறது. பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தைச் சரியான திட்டங்களில் முதலீடு செய்து, நியாயமான வருவாயைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறோம்.

ஆனால் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதில்தான் நமக்குப் பொறுமையும், திறமையும் இருப்பதில்லை. எனவே, தெரிந்த நண்பர்கள் அல்லது அறிந்த முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் திட்டங்களில் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைப் போட்டு விடுகிறோம். குறிப்பிட்ட திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை நிதானமாகப் படித்துப் பார்க்கக்கூட நமக்கு பொறுமை இருப்பதில்லை. ஆனால், இது சரியல்ல.

நீங்கள் முதலீடு செய்யப் போகும் நிறுவனத்தில் எழுப்ப வேண்டிய 5 அவசியமான கேள்விகள் இவை:

1. எனது பணத்தை எங்கே முதலீடு செய்யப் போகிறீர்கள்?

இது சாதாரணமான கேள்வியாகத் தோன்றினாலும், நிச்சயமாகக் கேளுங்கள். அப்போதுதான் எத்தனைவிதமான பதில்கள் வருகின்றன என்று அறிவீர்கள். உங்கள் பணமானது பட்டியலிடப்பட்ட பங்குகள், பட்டியலிடப்படாத பங்குகள், அரசுப் பத்திரங்கள், தனியார் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் என்று எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யப்படலாம். உங்கள் பணத்தை நிர்வகிக்கும் நிறுவனமே நேரடியாக அல்லது பிற நிறுவனங்களின் வாயிலாக அவற்றில் முதலீடு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் உங்கள் பணம் முதலீடு செய்யப்பட்டால் அதன் விவரங்களைக் கேட்டறியுங்கள். உங்களின் நிதி நிறுவனம், `ரிஸ்க்' பற்றி கவலைப்படாமல், `ரிட்டர்னை' மட்டும் கணக்கில் கொண்டு முதலீடு செய்தால் நீங்கள் கொஞ்சம் யோசிப்பது நல்லது.

2. எது, எந்தளவு மோசமாகப் போகலாம்?

உங்களின் நிதி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதலீடு செய்கிறது என்றால், அப்பிரிவில் முந்தைய காலச் செயல்பாடுகள் எவ்வாறு இருந்திருக்கின்றன, அதில் `மோசமான ஆண்டு' எது என்று கேட்டறியுங்கள். அந்தப் பிரிவில் `ரிஸ்க்' இருக்கிறது என்றால் அது எந்தளவுக்கு மோசமாகப் போகக்கூடும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

3. கட்டணம் எவ்வளவு?

உங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கு குறிப்பிட்ட நிதி நிறுவனம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதைக் கேட்டறிந்துகொள்ளுங்கள். `ரிட்டர்னில்' பங்கு என்றால், குறிப்பிட்ட நிறுவனம் அதில்தான் கவனமாக இருக்கும். `ரிஸ்க்' பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள். உங்கள் பணத்துக்கு ஒரு லாபத்தை ஈட்டித் தரும் அதேவேளையில், அதைப் பாதுகாக்க வேண்டியதும் நிதி நிறுவனத்தின் பொறுப்புதான். அவர்கள் தடாலடியாக `ஆக்ஷனில்' இறங்குவதை நீங்கள் அனுமதிக்க முடியாது.

4. நிபந்தனையின்றி எனது பணத்தைத் திரும்பப் பெறலாமா?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டாம் என்றுதான் முதலீடு செய்கிறீர்கள். ஆனால் திடீரென்று மனம் மாறினால்? அவசரமாகப் பணம் தேவைப்பட்டால்? அபராதக் கட்டணம், தாமதம், நிபந்தனைகள் என்று பணத்தைத் திரும்பப் பெறுவதில் சங்கடங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? எப்படிப் பார்த்தாலும் அது உங்கள் பணம்தானே? அதைத் திரும்பப் பெறுவதற்கு ஏன் தண்டனை விதிக்கப்பட வேண்டும்? இவ்விஷயத்தை நன்கு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

5. எப்போதெல்லாம், எந்த அளவுக்குத் தகவல் தெரிவிப்பீர்கள்?

எனது முதலீடு குறித்த விவரங்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை, எந்த அளவு விவரமாக எனக்குத் தெரிவிப்பீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் தகவல் தரும் முறை, நீங்கள் புரிந்துகொள்ளும் விதமாக இருக்குமா, அதுகுறித்த விஷயங்களை நாங்கள் உங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள நேரம் ஒதுக்குவீர்களா என்று கேளுங்கள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf