சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
|
சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியது.
மேலும், உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட இயலாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
அத்துடன், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சமச்சீர் கல்வி தொடர்பாக அனைத்து கோணங்களிலும் எல்லா தரப்பு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பே, மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்தத் தீர்ப்பை வழங்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் செல்லாது என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழுள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தமிழக அரசு, பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, சமச்சீர் கல்வி தொடர்பான விசாரணை 6 வார காலமாக நடைபெற்றது.
தமிழகத்தில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை உரிய நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்தி, அடுத்த ஆண்டு முதல் நடமுறைப்படுத்த முயற்சிப்போம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை ஆகஸ்ட் 4-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அதேவேளையில், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை வழங்கிட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
இந்த நிலையில், சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இறுதித் தீர்ப்பை வெளியிட்டனர்.
அதன்படி, சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments :
Post a Comment