நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அனைவருக்கும் அப்படி ஒரு செல்வம் கிடைப்பதில்லை. இன்றைய உலகில், புதுப் புது நோய்கள் முளைத்து நம்மை பல்வேறு துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன.
நோய்களின் கொடுமை ஒரு புறமிருக்க, அந்நோய்களை குணப்படுத்த தேவைப்படும் மருத்துவ செலவுகளும் அதிகரித்து நம்மைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாத்து, சரியான மருத்துவ உதவி செய்ய உடல் நலக் காப்பீட்டு பாலிசி(ஹெல்த் இன்சூரன்ஸ்) எடுப்பது அடிப்படைத் தேவையாகிவிடுகிறது.
பல்வேறு உடல்நலக் காப்பீட்டு பாலிசிகள் சந்தையில் உள்ளது. அவற்றில், நமக்கு உகந்த பாலிசியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுப்பதில் நான் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
செய்ய வேண்டியவை:
உடல்நலக் காப்பீட்டு பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம். பாலிசி எடுத்துவிட்டால், இனி என்ன நோய் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க கூடாது. அனைத்து பாலிசிகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகள், விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் படித்து தெளிந்த பிறகு முடிவெடுப்பது நல்லது. உங்களுக்காக் ஒரு சில உதாரணங்கள் இங்கே.
1. நம்மிடம், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி மூலம் பயன் பெற முடியாது.
2. உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவச் செலவுகளுக்கு பல விதி விலக்குகள் உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை நாள் தர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். மருத்துவச் செலவில் நாமும் நமது பங்கிற்கான பணத்தைத் தர சொல்வதாக கூட இருக்கலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் பாலிசிகள் செல்லுபடியாகும் என்பதும் இதில் அடங்கும்.
3. வருடா வருடம் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டும். அதனை புதுப்பிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர்.
4. பாலிசி எடுப்பதற்கு வயது உச்ச வரம்பு உள்ளது. பெரும்பாலும், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்களுக்கு மட்டுமே உடல் நலக் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்படுகின்றன.
5. சர்க்கரை வியாதி, ரத்த சோகை போன்ற நமக்கு ஏற்கனவே உள்ள நோய்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும்.
6. பாலிசி எடுப்பவரின் வயதைப் பொறுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி இருக்கும். அந்நிறுவனம் கூறும் வழிமுறைகளுக்கும், ஆவணங்களுக்கும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
7. அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் எங்கு, எப்படி செய்து கொள்ள வேண்டும்? அதற்கான செலவை யார் ஏற்பது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
8. பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களைப் படித்து, தெளிவு பெற்ற பிறகே பிரீமியம் தொகையை செலுத்துங்கள்.
9. அந்தப் பாலிசியின் தன்மையை அறிந்து, அவர்களின் சேவையை மதிப்பீடு செய்து, வருடா வருடம் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
செய்யக் கூடாதவை;
1. எந்தத் தகவலையும் மறைக்காதீர்கள். தவறான தகவலையும் கொடுக்காதீர்கள். நோய்வாய்ப்பட்டு பாலிசியின் மூலம் பணம் பெறும் போது, இது சட்ட ரீதியான பிரச்சனையை உண்டாக்கும்.
2. சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் நமக்கு உபயோகப்படாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.
3. பாலிசி தொடர்பாக வெற்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். பாலிசி படிவம் நிரப்பும் போது எந்த ஒரு பகுதியையும் நிரப்பாமல் விட்டுவிடாதீர்கள்.
திடீரென்று நமக்கோ, நம் பெற்றோருக்கோ நோய் வந்த பிறகு, இதை நாம் அப்பவே எடுத்திருக்கலாமே....என்று வருத்தப்படாமல், நோய் வரும் முன் நம்மை காத்துக் கொள்வோம். நமக்கு ஏற்ற உடல் நலக் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுப்போம் !